சென்னை: அப்பல்லோவில் சிகிச்சைப் பலனின்றி ஜெயலலிதா இறந்த மறுநாளே மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்த்து தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக தொண்டர்கள் சாரி சாரியாக வந்துகொண்டிருந்தனர். பொதுமக்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் அமர்த்தப்பட்டனர். காவல் துறையினரின் சக்தி வீணடிக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இருப்பினும் சின்னம்மா எம்ஜிஆர்-ஜெயா நினைவிடம் என பெயர் மாற்றம் செய்து வழிபாட்டுத்தலமாக அறிவிக்கப்படும் என்றார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி அம்மா பேரவை இணை செயலாளராக உள்ள சின்னம்மா விசுவாசி சிவாஜி – மஞ்சுளாதேவி திருமணம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் ஜெயலலிதா நினைவிடத்தில் நடைபெறுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இதற்கான பத்திரிக்கையும் அடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் சிறைக்குச்சென்று மெழுகுவர்த்தி செய்யும் பணியில் சின்னம்மா பிசியானதால், சிவாஜி மற்றும் மஞ்சுளாதேவி ஆகியோரின் திருமணம் தடைபட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் ஆட்சிக்கலத்தில் காணொளிக் காட்சி மூலம் மக்கள் நல திட்டங்கள் நிறைவற்றியது போலவும், அப்பல்லோ வாசத்தின் போது ஜெயலலிதா சின்னம்மாவிடம் டெலிபதியில் பேசியது போலவும், அண்ணாசதுக்கத்தில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மணமகன் சிவாஜி, மணமகள் மஞ்சுளாதேவி மற்றும் அவர்களது பெற்றோர் சின்னம்மாவின் உத்தரவுப்படி நேற்று காலை 10 மணிக்கு வந்தனர். சின்னம்மா சிறையில் இருந்தபடியே தியான நிஷ்டையில் ‘டெலிபதியில்’ சீர்திருத்த திருமணம் செய்து வைத்தார். ஜெயலிதா நினைவிடத்தை சுற்றி வந்து மாலை, தேங்காய், பழம் மற்றும் தாலி வைத்து இருவரும் வணங்கினர். பிறகு நினைவிடத்தை பார்க்க வந்த பொதுமக்கள் முன்னிலையில் சின்னம்மாவின் ஆசியுடன், மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

பின்னர் அங்கிருந்த கப்ஸா நிருபர் ஓபிஎஸ் போல தியானத்தில் அமர்ந்த போது டெலிபதியில் சின்னம்மா அளித்த பேட்டி: ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனாக சுதாகரனை தேர்ந்தெடுத்தார். என் ஆலோசனைப்படி நடத்திய சுதாகரன் திருமணம்தான் அக்காவின் அரசியல் வாழ்க்கையில் சரிவுக்கு முதல்படியாக அமைந்தது. முதல் முறை முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்குவதாக ஜெயலலிதா நடித்தார். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் முதல்வர் தன் வளர்ப்பு மகனுக்கு எப்படி, இப்படி ஒரு ஆடம்பரத் திருமணத்தை செய்து வைத்தார் என்று கடைகோடி தமிழர்களும் கேள்வி எழுப்பினர். இந்தியாவில் நடைபெற்ற ஆடம்பரத் திருமணங்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படும் சுதாகரன் திருமணம்தான் சொத்துக்குவிப்பு வழக்குக்கு முதற்காரணியாக இருந்தது. ஜெயலலிதா செய்த தவறால் நான் இன்று சிறைவாசம் அனுபவிக்கிறேன். அதற்கு பிராயசித்தமாகவும், மக்கள் அதை மறக்கடிக்க இன்று முதல் அக்காள் நினைவிடம் வழிபாட்டுத்தலமாக செயல்படும். திருமணஞ்சேரி, திருவிடந்தை போல அதிமுக தொண்டர்களின் தொடர் திருமணங்கள் இங்கு நிகழ்த்தப்படும், ஆரம்பத்தில் இலவச மணம் நிகழ்த்துவோம், பின்னர் படிப்படியாக கட்டண வசூல் செய்யும் திட்டமும் உள்ளது,” என்றார்.

பகிர்

There are no comments yet