சென்னை : ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த 24-ம் தேதி ‘எம்ஜிஆர்-அம்மா-தீபா- பேரவை’ என்ற அமைப்பை தொடங்கி அதற்கு கொடியையும் அறிமுகம் செய்தார். தீபா தொடங்கியுள்ள எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் பெயர் ஆரம்பித்து நிர்வாகிகள் வரை அனைத்தும் ஆரம்பம் முதலே குழப்பமாக இருந்து வருகிறது. முதலில் தலைமை நிர்வாகிகளாக தன்னுடைய கார் டிரைவர் ராஜாவை செயலாளராகவும், அவருடைய மனைவியை தலைவராகவும், நியமித்தார். பின்னர் தொண்டர்களின் எதிர்ப்பு காரணமாக வாபஸ் பெற்றார். அதன்பிறகு தானே பொருளாளர், தானே செயலாளர் என்று தனக்குத்தானே மணிமுடி சூட்டிக்கொண்டார் இதற்கு தொண் டர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த னர். அதைத்தொடர்ந்து, செய்தி யாளர்களை சந்தித்த தீபா, “முழு மையான நிர்வாகிகள் பட்டியலை பிப்ரவரி 27-ம் தேதி வெளியிடு வேன்” என்று அறிவித்தார்.

ஆனால், அன்றைய தினமும் நிர்வாகிகள் பட்டியல் வெளி யிடப்படவில்லை. இதனால், கடந்த 2 மாதங்களாக தீபாவின் முடிவுக்காக காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்த னர். அவர்களில் பலர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு செல்லத் தொடங்கினர். இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டல நிர்வாகிகள் பங்கேற்ற ரகசிய கூட்டத்தை சென்னையில் கடந்த 2-ம் தேதி இரவு தீபா நடத்தினார். இந்த கூட்டத்துக்குப் பிறகு, மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

தீபா பேரவையை விட்டு விலகுவதாக அவர் கணவர் மாதவன் அறிவித்துள்ளதால் அவரை நம்பியிருந்த ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தொடங்கியுள்ள எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக்கு நிர்வாகிகள் நியமிப்பதில் தீபாவுக்கும் அவர் கணவர் மாதவனுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தன்னை சந்திக்கும் ஆதரவு நிர்வாகிகளிடம் மாதவன் பணம் பெற்றுக் கொண்டு பொறுப்பு தருகிறேன் என உறுதி அளித்ததாகவும் புகார் எழுந்தது. இந்த தகவல் தீபாவுக்கு சென்றதால் மாதவன் பரிந்துரைத்த நபர்களுக்கு பதவி வழங்க தீபா மறுத்தார். இதனால் கோபம் அடைந்தார் மாதவன். மேலும் மாதவன் பேச்சை தீபா கேட்காததுடன் அவ்வப்போது நடக்கும் ரகசிய கூட்டத்துக்கு அவரை அழைத்து செல்வதையும் தவிர்த்தார்.

இதனால் கணவன், மனைவி இடையே மோதல் வலுத்தது. இந்த நிலையில் திரைமறைவில் நடந்து வந்த குடும்ப சண்டை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தன்னை நம்பாமல் வீட்டில் உள்ள சில வெளியாட்களை நம்பி அரசியல் செய்வதாக மாதவன் தீபா மீது அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தீபாவுடன் காரில் வெளியே செல்லும்போது ராஜா கார் ஓட்டுவதில்லை என்றும், அதற்கு பதில் புதிய டிரைவரை தீபா நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசியலில் இறங்கிய சில நாட்களிலேயே தீபா குடும்ப சண்டையில் சிக்கி தவிப்பது அவர் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பேரவையில் இருந்துதான் விலகுவதாக மாதவன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாதவன் கூறுகையில், ‘கடந்த 3 மாதமாக இருவரும் இணைந்து நல்ல முடிவு எடுத்து வந்தோம். தற்போது நிலைமை மாறிவிட்டது. தீபா ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தது, பேரவை தொடங்கியது, பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது எதுவுமே எனக்கு தெரியாது. அவை அனைத்தும் தீபாவின் தனிப்பட்ட செயல்பாடு. தீபா தனித்து செயல்பட விரும்புகிறார். நான் இனி பேரவை சம்பந்தமான நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன். தீபா நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம் ’என்றார்.

மாதவனின் இந்த அதிரடி முடிவால் அவரை நம்பி இருந்த ஏராளமான ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவின் கணவர் என்ற முறையில் ஆரம்பத்தில் மாதவனை தான் ஆதரவாளர்கள் சந்தித்து தங்கள் விவரங்களை கொடுத்து வந்தனர். பேரவையின் பெயர் வெளியிடும்போதும் அவர் கூடவே இருந்தார். ஆனால் தற்போது பேரவையில் இருந்து அவர் வெளியேறி இருப்பது கடும் அதிர்ச்சியை தொண்டர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இதுவரை பட்ட கஷ்டம் அனைத்தும் வீணாகிவிட்டது என ஆதரவாளர்கள் புலம்பி உள்ளனர். ஓபிஎஸ் பக்கம் செல்வது குறித்தும் தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தீபாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோத லால் எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையில் குழப்பம் ஏற்பட்டுள் ளது. இதனால் தீபாவின் ஆதர வாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு தீபாவுக்கும், அவரது கணவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு உச்சத்தை அடைந்ததாலும், நிர்வாகிகள் நியமன பிரச்சினை காரணமாகவும் தீபாவின் வீட்டு முன் கூடும் தொண்டர்கள் கூட்டமும் குறைந்து போனது.

இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தீபாவின் கணவர் மாதவன், நேற்று இரவு தீபாவை போலவே 32 மாவட்டங்களை 4 மண்டலங்களாக பிரித்து தனியாக நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அதில், தீபா வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்கள் இடம்பெற வில்லை. இதனால் தொண்டர்கள் யாரை நம்புவது என்று தெரியாமல் தவித்துவருகின்றனர். இதுகுறித்து மாதவனின் ஆதரவாளர்கள் சிலர் கூறும்போது, “தீபா வெளியிட்டுள்ள பட்டியலில் பேரவைக்காக உழைத்தவர்கள் இடம்பெறவில்லை. எனவேதான் பேரவைக்காக உழைத்தவர்களை கணக்கில் கொண்டு நிர்வாகிகளை பட்டியலை மாதவன் வெளியிட்டுள்ளார்” என்றனர்.

இதைத் தொடர்ந்து, தீபாவுக்கு எதிராக அவரது கணவரே போர்க்கொடி உயர்த்தியுள்ளார். தீபா நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு முதல் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு வரை அனைத்திலும் தன்னிச்சையாக செயல்பட்டதால் தீபாவுக்கும் மாதவனுக்கும் தி.நகர் வீட்டில் அடிக்கடி மோதல் உருவாகியிருக்கிறது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாதவன், தீபா பேரவைக்கும் தமக்கும் இனி தொடர்பு இல்லை என்று கூறினார். இதனால் மேலும் கோபமான தீபா, மாதவனை சராமாரியாக திட்டியதாகவும் அதனால் மாதவன் அவரது நண்பர்களிடம் இதுகுறித்து வருத்தத்துடன் பேசியிருக்கிறார். மாதவனின் நண்பர்களின் ஆலோசனைப்படி வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை செய்துவிட்டு வந்துள்ளாராம். ஆதலால் மிக விரைவில் தீபாவும் மாதவனும் பிரியப்போவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

பகிர்

There are no comments yet