சென்னை: கடந்த 2015-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ஆர் கே நகர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா முதல் அமைச்சரானார். 2016-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் அதே ஆர்.கே.நகர் தொகுதியை தேர்வு செய்து ஜெயலலிதா போட்டியிட்டார். அப்போது 97 ஆயிரத்து 218 ஓட்டுகள் பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அவர் டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுகவில் சிறையில் இருந்து ஆட்சி புரியும் சின்னம்மா அணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சின்னம்மாவின் அக்காள் மகன் டி.டி.வி. தினகரன் போட்டியிடக் கூடும் என்று பேச்சு எழுந்தது. அதை மெய்ப்பிக்கும் விதமாக சின்னம்மா தன்னை போட்டியிட சொன்னால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தனக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது என்றும் இணைந்து செயல்பட வேண்டும் என்றால், அவர்கள்தான் முன்வர வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார். எடுபிடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு ஆப்பு வைத்துவிட்டால் என்ன செய்வதென்றே தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டுள்ளார்.

இதற்கிடையில் சின்னம்மாவை எதிர்த்து கொடி பிடித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் கேரள மாந்திரீகர்களிடம் தீவிர ஆலோசனையில் இருப்பதை உங்கள் நியூஸ் கப்ஸா நிருபர் கண்டறிந்துள்ளார். முதல் முறை சின்னம்மாவுக்கு எதிராக பேட்டி அளிக்கும் முன் மெரினாவில் உள்ள அம்மா நினைவிடத்தில் 40 நிமிடங்கள் ஜெயலலிதாவின் ஆன்மாவிடம் டெலெபதியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதையே பல் துலக்குவது, டிபன் சாப்பிடுவது போல் தினசரி வழக்கமாக்கிக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார். எனவே ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு யு.பி.எஸ் போல செயல்பட்ட ஓ.பி.எஸ் இன்று சின்னம்மா, தினகரன், எடப்பாடி, தீபா போன்ற பல புல்லுருவிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், எதிர் வரும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அம்மாவின் ஆன்மாவை வேட்பாளராக நிறுத்தி மேற்கண்ட அனைவருக்கும் தக்க பாடம் புகட்ட ரகசிய திட்டம் தீட்டி உள்ளதாக தெரிகிறது. இதற்கென தேர்தல் ஆணையத்துடன் ஈ.எஸ்.பி. முறையில் ஆலோசனை நடத்தியதாகவும் அதை ஆணையம் ஏற்றுக் கொள்ள சம்மதித்ததாகவும் கப்ஸா நிருபர் மேலும் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடுவது உறுதியாகி விட்டதால், அம்மாவின் ஆன்மாவை வேட்பாளராக நிறுத்தி அவருக்கு செக் வைக்கும் ஓபிஎஸ்சின் இந்த முடிவால் தீபா வட்டாரங்கள் அதிர்ந்து போய் இருப்பதாக தெரிகிறது. மேலும் இதைக் கேட்டு பெங்களூரு சிறையில் சின்னம்மா மயக்கம் போட்டு விழுந்ததாகவும், பின்னர் முகத்தில் மினரல் வாட்டர் தெளிக்கப்பட்டு கண்விழித்து மீண்டும் சபதம் செய்ததாகவும் நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன்.

பகிர்

There are no comments yet