சென்னை: தேர்தல் ஆணையத்தின் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு அதிமுகவின் இரண்டு அணிகளும், மற்றும் எதிர்க்கட்சியான திமுகவும் வேட்பாளர் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் நல கூட்டியக்கத்தைச் சேர்ந்த தொல். திருமாவளவனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனுடன் ஆலோசனை செய்தனர். பின்பு, மக்கள் நல கூட்டியக்கம், இடைத்தேர்தலில் போட்டியிடும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்கள் கூட்டியக்கம், முன்பு மக்கள் நலக் கூட்டணி என்ற பெயருடன் இயங்கி வந்தது. மதிமுக தலைவர் வைகோ அக்கூட்டணியிலிருந்து விலகி விட்டதால், தற்போது மக்கள் நல கூட்டியக்கம் என்ற பெயரில் வி.சி.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

தீபா மூலமாக ஜெயலலிதா குடும்பத்துக்கும் – சின்னம்மாவின் மன்னார்குடி குடும்பத்துக்கும் இடையேயான குடுமிபிடி சண்டையாக இந்த இடைத்தேர்தல் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டையை கிழித்துக் கொண்டதால் ஸ்டாலின் வாய்ப்பு பறிக்கப்பட்டு திமுக தலைமை இப்போதே வேட்பாளர் தேர்வுக்கான அழைப்பு விடுத்துள்ளது. விஜயகாந்தின் துணைவி பிரேமலதா இன்னொரு சின்னம்மாவாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் நியூஸ் நடத்திய ரகசிய சர்வேயின் படி தமிழகத்தில் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 90% மக்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு புதிய முதல் அமைச்சரை எதிர்பார்க்கிறார்கள் என்ற பகீர் உண்மை வெளிவந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழகத்தில் ‘அசாதாரண’ சூழல் நிலவுகிறது. ஓபிஎஸ் முதலில் முதல்வரானார். பின்னர் சின்னம்மா தரப்பின் நெருக்கடியால் திடீர் ராஜினாமா செய்தார். பின்னர் திடீர் ‘தியான’ ஸ்டண்ட் அடித்து மீண்டும் முதல்வராக தன்னை அறிவித்துக் கொண்டார். சின்னம்மா எம்.எல்.ஏக்களை கட்டுக்குள் கொண்டுவந்து முதல்வராக பதவி ஏற்க முயன்றார். சிறைத்தண்டனை உறுதியானதால் எடப்பாடிக்கு முதல்வர் வாய்ப்பு கிடைத்தது. இவற்றையெல்லாம் கவனித்து வரும் தமிழக மக்கள் ஒருவித “முதல்வர் டிபிசியன்சி சிண்ட்ரோம்” வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். அதாவது இரண்டு வாரங்களுக்கு ஒரு முதல்வர் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு கேப்டன் விஜயகாந்த் ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு முதல்வர் ஆக முயற்சி செய்ய முற்பட்டுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ‘உன்னால நான் என்னால நீ கெட்டே’ என்று வைகோவால் ஏமாற்றப்பட்டு விஜயகாந்த் டெப்பாசிட்டை இழந்தார். தற்போது மதிமுக தேர்தலில் போட்டியிடாது என்று வைகோ அறிவித்துள்ளார். அது கேப்டனுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. எனவே வைகோவுடன் ஆலோசனை செய்து அவரது ஆதரவை பெரும் முயற்சியில் கேப்டன் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆர்கே நகரில் வெற்றி பெறுபவரே தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்பதால், தீபா, சின்னம்மா ஆதரவு தினகரன், ஓ.பி.எஸ் இடையை கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக ஓ. பன்னீர்செல்வம் அணி, தீபா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தில் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும் சசிகலாவின் தலைமையை வாக்காளர்கள் ஏற்கிறார்களா என்பதை அறிய இந்தத் தேர்தல் முடிவுகள் உதவும் என்பதாலும் இந்த மூன்று தரப்புடன் சேர்த்து விஜயகாந்தின் அரசியல் வாழ்வாதாரமும், அரசியல் நீடிப்பும் இந்தத் தேர்தலில் வாழ்வா – சாவா என்ற போராட்டமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்

There are no comments yet