சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் பதவி ஏற்ற போது, சட்டமன்றத்தில் சட்டைக் கிழிப்பு நாடகம் அரங்கேற்றி ஆட்சியை கலைக்க அரும்பாடு பட்டார் ஸ்டாலின் ஆனால் அது பலிக்கவில்லை. “மக்கள் விரோத அதிமுக அரசை வலுவிழக்கச் செய்து, மக்கள் மன்றத்துடன் இணைந்து திமுகவின் பொற்கால ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலரச்செய்வேன்” என்று சூளுரைத்தார் ஸ்டாலின். தற்போது ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கக் கூடிய வாக்காளர்கள் திமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் சிறையில் இருந்து சின்னம்மா செய்யும் பினாமி ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது, இந்த பினாமி ஆட்சியை தகர்த்தெறிந்து திமுக ஆட்சியை மலரச்செய்வது வரை ஓயமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சென்னை மாநகர கமிஷனராக இருக்கக் கூடிய ஜார்ஜ் சின்னம்மாவின் பினாமி ஆட்சிக்கு வலது கையாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக கூவத்தூரில் 122 பேர் அடைக்கப்பட்டு இருந்தபோது அவர்களுக்கு முழு பாதுகாப்பு அவருடைய தலைமையில் ரௌடிகள் துணையுடந்தான் நடந்திருக்கிறது. சட்ட மன்றத்தில் இருந்து எங்களை எல்லாம் தூக்கிகொண்டு வந்து வெளியில் போடுவதற்கு அவருடைய தலைமையில் இருக்கக் கூடிய ஏவல் துறை அதிகாரிகள் தான் காரணமாக இருந்தார்கள் என்றும் கூறினார். திமுக சார்பில் போட்டியிடப் போவது யார் என்ற கப்ஸா நிருபரின் கேள்விக்கு “தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. அவற்றை பணப்பெட்டி அடிப்படையில் பரிசீலனை செய்வோம். பேச்சுமூச்சில்லாமல் கழுத்தில் ட்ரக்கியஸ்டமி குழாயுடன் படுத்த படுக்கையாக இருக்கும் கருணாநிதியிடம் நேர்காணலுக்கான கேள்வித்தாளை தயாரிக்க சொல்லி உள்ளேன்.

அதற்காக துருப்பிடித்து கிடந்த தொண்டனுக்கு கடிதம் எழுதும் பேனாவை புளி போட்டு விளக்கி கொடுத்துவிட்டு, ஒரு குயர் பேப்பரும் குமுதம் கல்கி கல்கண்டு போன்ற பொது அறிவு நூல்களையும் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன். தேர்வுக்குப் பின்னர் முழங்கால் வலியால் அவதிப்படும் பொதுச்செயலாளர் அன்பழகனிடமும் ஆலோசித்து வேட்பாளர் கொண்டு வரும் பணத்தை எண்ணிவிட்டு இறுதி முடிவை ஓரிரு நாட்களில் அறிவிப்போம்” என்றார்

பகிர்

There are no comments yet