சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக முன்னாள் டிஜிபி திலகவதி அறிவிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 12-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் பல முனை போட்டி நிலவுகிறது. ஏற்கனவே இத்தொகுதியில் போட்டியிடப் போவதாக எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவை பொதுச்செயலர் தீபா தெரிவித்துள்ளார். சசிகலா அதிமுகவும் வேட்பாளரை நிறுத்த உள்ளது
திமுகவில் வேட்பாளராக போட்டியிடுவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நாம் தமிழர் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ளன
மக்கள் நலக் கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பொதுவேட்பாளராக நிறுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே ஓபிஎஸ் அதிமுக இன்று ஆர்.கே.நகர் தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்க உள்ளது.
தற்போதைய நிலையில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், ஜேசிடி பிரபாகரன், ஆர்.கே.நகர் தொகுதியின் முதல் எம்.எல்.ஏவான மறைந்த நடிகர் ஐசரிவேலனின் மகள் டாக்டர் அழகு தமிழ்ச் செல்வி, ராஜேஷ் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. அதேநேரத்தில் ஓபிஎஸ் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவதாக முன்னாள் டிஜிபி திலகவதி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சமீபத்தில் ஓபிஎஸ் அணியில் சேர்ந்த முன்னாள் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு அப்செட்டில் இருப்பதாகவும், தாய் கட்சியான திமுகவிற்கு திரும்பும் முயற்சியில் ஸ்டாலினை ரகசியமாக சந்தித்ததாகவும் நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks