சென்னை: ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பி.எஸ்., ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகிய 3 அணிகள் களத்தில் இறங்குகின்றன. சசிகலா அணியில் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக 15-ந்தேதி ஆட்சிமன்ற குழு கூடுகிறது. ஓ.பி.எஸ். தரப்பும் புதிதாக ஆட்சி மன்ற குழுவை அமைத்துள்ளது. இந்த 2 அணிகளும் நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என போட்டி போட்டுக் கொண்டு கட்சிக்குள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் நடமாடும் பல்கலைக்கழகம் என்றும், என்னுடைய உதிர்ந்த ரோமம் என்று ஜெயலலிதாவால் புகழப்பட்ட அறியப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனின் மகன் வி.ஆர்.நெடுஞ்செழியன் மதிவாணன் ஓபிஎஸ்சை சந்தித்து அவரது அணியில் சேர்ந்தார்.

நெடுஞ்செழியன் மதிவாணன் இணைந்திருப்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் நமது கப்ஸா நிருபரிடம் பேசிய ஓபிஎஸ்: என் அம்மா புரட்சித்தலைவியால உதிர்ந்த ரோமம் என்று புகழப்பட்ட நெடுஞ்செழியன் மகன் மதிவாணன் மூலமாக எம்ஜிஆர் ஆன்மாவுடன் பேசினேன். ஆர்கே நகர் தேர்தல் மற்றும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது குறித்து பல ஆலோசனைகளை எம்ஜிஆர் எனக்கு வழங்கினார். மதிவாணனுக்கு சின்ன வயதிலேயே எம்ஜிஆரை அருகில் இருந்து பார்த்து இருந்ததால் அடையாளம் தெரிந்தது. அடுத்த வாரம் அறிஞர் அண்ணா மகன் பரிமளம் வருவதாக சொல்லியிருக்கிறார். அவர் வந்தவுடன் அண்ணாவின் ஆவி கூடவும் பேசுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet