சென்னை: அதிமுக இரண்டாக பிரிந்து இரட்டை இலையையும், ஆர்கே நகர் தொகுதியையும் கைப்பற்றுவது யார் என்ற களேபரம் நிலவி வரும் நிலையில், முன்னதாக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அழகிய பெண் ஒருவர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி கர்நாடக பாடகி ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. பின்னர் அது பாடகி சின்மயிக்கு தெரிந்த இசைக்கலைஞர் என்று தெரிந்து ‘புஸ்’ ஆனது. பின்னர் உமாபிரியா என்பவர் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் மகள் என்றார். போலி மகள் என்று காவல் துறையினர் கண்டறிந்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஒருவர் காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்து தான் ஜெயலலிதாவின் உறவினர் என்றும், ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசியதாகவும் கூறி ஆணையரை பார்க்க அனுமதி கேட்டார். அவரை காவலர்கள் விசாரித்ததில் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்து அவரது தாயாருக்கு செய்தி அனுப்பப்பட்டு வந்து கூட்டிச் சென்றார்.
அடுத்த வாரிசாக புதிதாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழக அரசின் தலைமை செயலரிடம் கொடுத்த மனுவில் தான் ஜெயலலிதாவின் மகன் என்றும், உயிருக்கு பயந்து ஜெயலலிதாவின் மரணம் வரை வெளியில் சொல்லவில்லை என்றும் தற்போது புது ரத்தம் பாய்ந்து தைரியம் வந்துள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்ப்டுத்தி உள்ளார். ஜெயலலிதாவின் நண்பர் வனிதாமணி வீட்டில் தங்கி இருப்பதாகவும், செப். 14 2016 அன்று போயஸ் கார்டன் வந்து நான்கு நாட்கள் ஜெயலலிதாவுடன் தங்கி இருந்ததாகவும், கூறி உள்ளார். ஜெயலலிதாவின் மகன் என்று உலகுக்கு எடுத்து சொல்ல அம்மா முற்பட்டபோது, சசிகலாவால் கீழே தள்ளி விடப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதாவின் ஒரே வாரிசு நான் தான், சொத்துக்கள் அனைத்தும் தனக்கே உரித்தானது என்றும் கூறியுள்ளார். டிராபிக் ராமசாமி அறிவுரையின் பேரில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் நமது கப்ஸா நிருபரின் புலனாய்வில் இது சின்னபுத்தி சின்னம்மாவை அதிரவைக்க ஓபிஎஸ் நடத்தும் நாடகம் என்பது தெரியவந்துள்ளது. தினசரி பல் துலக்குவது, சிற்றுண்டி சாப்பிடுவது போல் அன்றாடம் அம்மாவின் ஆவியுடன் உரையாடிக் கொண்டிருக்கும் ஓபிஎஸ் அம்மாவின் ஆன்மாவுடன் டெலிபதியில் பேசிக் கொண்டிருந்தபோது ஜெயலலிதாவே தனது மகனின் அட்ரஸ் போன் நம்பர் சகிதம் கொடுத்து மகனை உலகுக்கு வெளிக்கொணர சொன்னதாக தெரிகிறது. ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதி ஆகி இருந்தபோது நுழைந்த மர்ம நபருக்கும் இவருக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என் காவல் துறை சந்தேகிக்கிறது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவும் இரட்டை இலையை கைப்பற்றவும் ஓபிஎஸ் கிளப்ப்பிவிட்டுள்ள அலிபாபா பூதம் இந்த அவசர புதல்வன் என சின்னம்மா தரப்பு குற்றம் சாட்டுகிறது. இதனால் ஜெயலலிதாவைன் சொத்துப் பத்திரங்களை வைத்துள்ள சின்னபுத்தி சின்னம்மாவுக்கும், ஜெயலலிதாவின் அடுத்த வாரிசு என்று கூறிக் கொண்டு ஆர்கே நகரில் வெற்றியை பெற துடிக்கும் பால்கனி பாவை குட்டி அம்மா தீபாவுக்கும் சிக்கல் எழுந்துள்ளதாக கப்ஸா நிருபர் தெரிவித்தார்.
There are no comments yet
Or use one of these social networks