சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிக் கனியை பெற வேண்டும் என்ற வேண்டுதலோடு தனது குல தெய்வம் பேச்சியமன்னை சரணடைந்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஓ.பன்னீர்செல்வத்தின் குல தெய்வம் பேச்சியம்மன் ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள செண்பகத் தோப்புக்குள் கோயில் உள்ளதால் இந்த பேச்சியை, வன பேச்சியம்மன் என்று அழைக்கின்றனர். பன்னீர்செல்வம் குடும்ப குலத்தவர்கள் எல்லோருமே பேச்சியம்மன் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள். தங்களுக்குப் பிறக்கும் முதல் குழந்தைக்கு குலதெய்வத்தின் பெயரை வைக்க வேண்டும் என்று விரும்பிய பன்னீர்செல்வத்தின் தந்தையார், ஓட்டக்காரத்தேவர், பன்னீர்செல்வத்திற்கு பேச்சிமுத்து என்று பெயர் வைத்தார். பேச்சிமுத்து என்ற பெயரைத்தான், பிற்காலத்தில் பன்னீர்செல்வம் என்று மாற்றிக்கொண்டார். ஓ.பன்னீர்செல்வமும் அவரது சொந்த பந்தங்களும், தங்களின் குலதெய்வமான பேச்சியம்மனை தவறாது வழிபட்டு வருகின்றனர். எத்தனையோ சீனியர்கள் இருந்தபோதிலும், பல்வேறு கால் வாரும் அரசியலுக்கு மத்தியிலும், மூன்று முறை தான் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனது, குலதெய்வத்தின் அருளால்தான் என்று ஓ.பன்னீர்செல்வம் நம்புகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு தடவையும் முதலமைச்சர் ஆனவுடன், தவறாது வனபேச்சியம்மன் கோவிலுக்கு வருவார். மூன்றாவது முறை முதலமைச்சர் ஆனபோது, குலதெய்வக் கோவிலுக்கு அவரால் வர முடியவில்லை. ஆனால் இந்த முறைதான் அவரது விருப்பம் இல்லாமலே பதவி பறிபோனது. இப்போது, பன்னீர்செல்வம் தனது அரசியல் வாழ்க்கையின் 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளார். எனவே, ஓ.பன்னீர்செல்வத்துக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாகக் கிட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது அணி வெற்றி பெற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார்.

எனவே, மதுசூதனனை, ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்த கையோடு குலதெய்வத்தை வழிபட, அவர் சென்னையிலிருந்து கிளம்பி விட்டார். இன்றிரவு ராஜபாளையத்தில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கும் அவர், நாளை குலதெய்வமான, வனபேச்சியம்மன் கோவிலுக்குச் செல்லவிருக்கிறார். அங்கு கிடாய் வெட்டி கறிச்சோறு சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் கண்ணை மூடி தியானம் இருக்கவும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதனால் பெங்களூரில் சிறையில் இருக்கும் சின்னம்மா கதி கலங்கி போய் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

There are no comments yet