சென்னை: தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான, முரசொலியின் வலைதளப்பக்கத்தை, லிஜியன் ஹேக்கர் குழு இன்று முடக்கியது. அமெரிக்கா, ஸ்வீடன், கனடா போன்ற நாடுகளில் உள்ள ஹேக்கர்கள் மூலம் செயல்பட்டு வரும் குழு லிஜியன் ஹேக்கர்ஸ். அரசு நிறுவனங்கள் மற்றும் மதம் தொடர்பான வலைதளப் பக்கங்களை ஹேக் செய்வது இதன் குறிக்கோளாகும். இந்த லிஜியன் குழு ஏற்கெனவே ராகுல் காந்தி மற்றும் விஜய் மல்லையா ஆகியோர் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து விஷமத்தனமான கருத்துக்களை வெளியிட்டது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குத் தடை விதித்து, ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்று அதில் லிஜியன் குறிப்பிட்டுள்ளது. முக்கியமாக, உத்தரப்பிரதேசத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் லிஜியன் அதில் குறிப்பிட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரம் குறித்த வீடியோ ஒன்றையும், அதில் லிஜியன் இணைத்துள்ளது. வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால், தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்றும் லிஜியன் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து சற்று நேரத்தில், வலைதளம் மீட்கப்பட்டது.

நமது கப்சா நிருபர் செய்த புலனாய்வில் இது சிறைப்பறவை சின்னம்மாவின் சிறகடிப்பு என்று தெரியவந்துள்ளது. இடைத்தேர்தலில் திமுக என்ற கட்சி பலமிழக்க, மக்களை திமுகவை மறக்கடிக்க முரசொலியை முடக்கியதாக தெரிகிறது. சின்னம்மா கூறும்போது, “திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி இணையதளம் முடக்கம் பெரிய விசயமா, அதான் கட்சி தலைவர் கோபாலபுரத்தில் முடங்கியுள்ளாரே, செயல் தலைவரையே தலைவரையே 6 மாசமா முடக்கி வெச்சிருக்காங்களே, அதனால் கொஞ்சம் சீண்டிப் பார்த்தேன். முன்னதாக அப்பல்லோவில் அக்காவை முடக்கிப்போட்டேன். அக்கா போனபின் கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை முடக்கி வைத்தேன். பின்னர் எடப்பாடி ஆதரவு வாக்கெடுப்பின் போது சட்டசபைக்குள் விடாமல் ஸ்டாலினை முடக்கி வைத்து சட்டையை கிழித்துக் கொண்டு ஓட விட்டோம். முடக்குவது என்ன பெரிய விஷயமா. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கள்ள ஓட்டு போடுவது சிரமமாக உள்ளது. ஆர்கே நகரில் இடைத்தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை கொண்டுவந்தால் முன்னேற்பாடாக வெள்ள சேதத்தின்போது ஸ்டிக்கர் அடித்த பிரிண்டிங் பிரஸ்சில் ஆர்டர் கொடுத்து மொத்தமாக அச்சடித்து முத்திரை குத்தி வைத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.” என்றார்.

பகிர்

There are no comments yet