சென்னை: அதிமுக துணை பொது செயலாளராக பதவி வகிக்கும் டி.டி.வி.தினகரன், ஆர்கே. நகர் தொகுதி இடை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் மீது ஏற்கனவே பெரா வழக்கு உள்ளது. அதாவது வங்கி கணக்கில் 1995 மற்றும் 1996ம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது 1996ம் ஆண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து தினகரனிடம் மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன் அவருக்கு ரூ.25 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டனர். இதனை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அபராதம் செலுத்த வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆர்கே.நகரில் வீடு எடுத்து தங்கி பிரச்சாரம் செய்யப்போவதாக டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.

ஆர்கே நகரில் தொப்பி சின்னத்தில் போட்டியிடும் அவரின் வேட்பு மனு பெரும் இழுபறிக்குப் பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிங்கப்பூர் பிரஜையாக உள்ள தினகரன் ஆர்கே நகரில் போட்டி இடுவதா என சில ஊடகங்கள் சர்ச்சையை கிளப்பின. இதைத்தொடர்ந்து டிடிவி.தினகரன் கப்ஸா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “ஆர்.கே.நகரில் வெற்றி வாய்ப்பு சிரிப்பாக – மன்னிக்கனும் சிறப்பாக இருக்கிறது. சின்னம்மா மீது ஆர்கே நகர் தொகுதி மக்கள் கோபமாக இருப்பதால், துண்டுப் பிரசுரத்தில் கூட சின்னம்மா படம் அச்சிடப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறோம். மக்களுக்கு குல்லா போடுவதை மறைமுகமாக சொல்லவே ‘தொப்பி’ சின்னத்தை தேர்ந்தெடுத்தோம்.

சட்டப்படி தவறென்றாலும், ‘இஷ்டப்படி’ ஆர்கே.நகரில் போட்டியிடுகிறேன். பெரியகுளம் எம்பி தேர்தலின் போதும் திமுக என்னை எதிர்த்தது.” என்றார். மேலும் ஆர்.கே.நகரில் வீடு எடுத்து தங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், தேர்தல் முடிந்தபின் வாடகை வீட்டின் ஓனரை ஓட ஓட விரட்டிவிட்டு சொந்த வீடாக மாற்றிக் கொள்ளவும் திட்டம் வைத்துள்ளாராம். இதற்கென கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை மிரட்ட பயன்படுத்திய அடியாட்களை ஆர்கே நகரில் களமிறக்கி உள்ளதாக தெரிகிறது. இதை கேள்விப்பட்ட ஆர்கே நகர் மக்கள், தினகரனுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் திரும்பக் கிடைக்காது என்பதால் வெளியூரில் இருந்து உறவினர்களை வரவழைத்து காலியாக இருக்கும் வீடுகளை நிரப்பி வருகின்றனர்.

There are no comments yet