சென்னை: தமிழில் அஜித் தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘வீரம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்தான் பவன் கல்யாணின் ‘கட்டமராய்டு’ திரைப்படம். ஆந்திர ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ‘வீரம்’ பட தெலுங்கு ரீமேக்கான கட்டமராயுடு படமும் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை செய்து வருகிறது. இந்த படம் மொத்தமாக முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ. 43 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்த செய்தியை கேட்டு மூக்கில் வேர்த்த ஸ்டாலின், கப்சா நிருபரிடம் பேசினார்: கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான விளம்பரத்தை நினைவு கூர்ந்தார். “தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன், கவிழ்ந்துவிட மாட்டேன்…” என்று கலைஞரின் கர கர குரலில் தேர்தல் சமயங்களில் வெளியான கட்சி விளம்பரம் தான் அது. அந்த விளம்பரம் பெரும் வெற்றி அடைந்தது. அப்போது முதல் தமிழ் கூறும் நல்லுலகு கருணாநிதியை செல்லமாக ‘கட்டுமரம்’ என்று அழைக்கத் தொடங்கி விட்டனர்.

மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தும் தோணியைக் கூட ‘கட்டுமரம்’ என்று தான் சொல்வார்கள். அது போல் பல தாரங்களை கண்ட கருணாநிதியும் ஒரு ‘கட்டுமரம்’ தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மீனவர்கள் மீது அவ்வப்போது நடக்கும் துப்பாக்கி சூடுகளுக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது தான் காரணம். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்தாலும், இலங்கை அரசு மீனவர்களின் படகுகளை திரும்பக் கொடுப்பதில்லை அதற்கு காரணம் ‘கட்டுமரத்தின்’ மீதான இலங்கையின் பெருமதிப்பே காரணம். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி மௌனியாக இருந்தவர் தான் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது தான், 1974 ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்பாட்டின்படி இலங்கைக்கு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் கச்சதீவு தாரை வார்க்கப்பட்டது. இதைத் தடுப்பதற்கு தேவையான எந்தவித நடவடிக்கையும் கருணாநிதி அப்போது எடுக்கவில்லை.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படும் நிலை எழாமலே இருந்திருக்கும். ஆனால் அப்படிச் செய்திருந்தால், எப்படி மீனவர்களை வைத்து அரசியல் செய்ய முடியும்? ஓட்டுக்களை பெற முடியும்? எனவே கடலோரம் வாழ் மீனவர்களின் பேராதரவை பெற காரணமாக இருந்த ‘கட்டுமரம்’ என்ற அடைமொழியை ஒத்த ‘கட்டமராய்டு’ என்ற பெயரையோ, அல்லது ‘கட்டபொம்மன், கட்டப்பஞ்சாயத்து போன்ற பெயர்களை யாரும் பயன்படுத்தக் கூடாது. இளையராஜா ராயல்டி கேட்டு எஸ்.பி.பிக்கு நோட்டிஸ் அனுப்பியது போல் தெலுங்குப்பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப, பேசமுடியாமல் படுத்த படுக்கையில் இருக்கும் கலைஞரிடம் கலந்து ஆலோசித்து, கட்சி வழக்கறிஞர்களிடம் யோசனை கேட்டு வருகிறோம்” என்றார்.

பகிர்

There are no comments yet