சென்னை: அ.தி.மு.க. உள்கட்சி பூசலால் சின்னம்மா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகள் உருவாகின. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. சின்னம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னமும், பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு இரடை மின்கம்பம் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் உதயசூரியன் சின்னத்திலும், பா.ஜ.க.வேட்பாளர் கங்கைஅமரன் தாமரைச் சின்னத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதன் அரிவாள் சுத்தியல் சின்னத்திலும், தே.மு.தி.க.வேட்பாளர் மதிவாணன் முரசு சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக தீபா போட்டியிடுகிறார். தனக்கு படகு சின்னத்தை ஒதுக்கப்பட்டுள்ளதாக தீபா கூறினார்.

இதுகுறித்து தீபா அணியினர் கூறுகையில், “ஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும், எம்.ஜி.ஆரின் ரசிகர்களாக மீனவர்கள் உள்ளனர். எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி’ படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம்.” என்றார் தீபா. படகு சின்னத்தை கேட்டதற்குப் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாக தீபா அணியினர் கப்சா நிருபரிடம் தெரிவித்தனர். “சின்னம்மா பேச்சைக் கேட்டு கணவர் என்னை நட்டாற்றில் விட்டதால், உயிர்பிழைக்க படகு சின்னத்தை தேர்ந்தெடுத்தேன். படகில் ஓட்டை போட்டு விடுவார் என்று விண்ணப்பத்தில் கூட அவர் பெயரை எழுதவில்லை.

தமிழக அரசியலில் ஆண்டாண்டு காலமாக வேர் விட்டு கிளைபரப்பிய கட்சிகள் இரண்டே இரண்டு தான், ஒன்று திமுக மற்றொன்று அதிமுக அதில் சீனியாரிட்டிபடி திமுக தான் முன்னோடி, அக்கழகத்தின் தலைவரான கருணாநிதியை குறிக்கும் ‘கட்டுமரம்’ என்பதாலும் படகு சின்னத்தை தேர்ந்தெடுத்தேன். ஓபிஎஸ் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதால் திமுகவினரின் ஆதரவை பெற திட்டம் வைத்துள்ளேன். வரும் தேர்தல்களில் என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் ஸ்டாலினுடன் கூட்டணி வைக்க தயங்க மாட்டேன்.” என்றார்.

பகிர்

There are no comments yet