சென்னை: இந்திய சினிமாவில் தற்போது இரண்டு படங்களுக்கு தான் கடும் போட்டி நிலவுகிறது. ஒன்று பாகுபலி 2 மற்றொன்று எந்திரன் 2.0. இதில் பாகுபலி 2 ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது. ஷங்கர் ரஜினியின் பிரமாண்ட கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற மாபெரும் படம் எந்திரன். அதன் இரண்டாம் பாகம் தற்போது 2.0 என்ற பெயரில் தயாராகி வருகிறது. ரஜினி, அக்ஷய், எமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ரஜினி விஞ்ஞானி மற்றும் ரோபோவாகவும், அக்ஷய் வில்லன் ரோலிலும் நடிப்பது தெரிந்த விஷயம். ரஜினி இவ்விரு கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் 5 வித்யாசமான தோற்றங்களில் வர உள்ளாராம். அதில் இரண்டு ரோல்கள் குள்ள மனிதனாம். ரஜினியை போன்றே அக்ஷய்யும் 10க்கும் மேற்பட்ட வேடங்களில் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் தயாரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதை கேட்டு கமல்ஹாசன் மிகவும் கோபத்தில் இருப்பதாக கப்சா நிருபர் கண்டறிந்துள்ளார். ஏற்கனவே ராபின் ஹூட் கதையை உல்டா செய்து திருடனை ஹீரோவாக சித்தரிக்கும் முயற்சியில் ‘மருதநாயகம்’ என்ற படத்தை துவக்கி பின்னர் பட்ஜெட் போதாமல் கிடப்பில் போட்டார். அதற்கு காரணமாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வளர்ச்சி பெறவில்லை என அப்போது சப்பைக் கட்டு கட்டினார். ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற படத்தில் காலை மடக்கி கட்டிக் கொண்டு 4 அடி குள்ளனாக நடித்தார் கமல் என்பது உலகறிந்த விஷயம். இப்போது தான் போர்க்காட்சிகளுடன் எடுக்க நினைத்த மருதநாயகம் பாகுபலியாகவும்,

ஏற்கனவே நடித்த அப்பு கமல் வேடத்தில் ரஜினி 2.0வில் நடிப்பதையும், தசாவதாரம் படத்தில் செய்த 10 கதாபாத்திரங்களை மிஞ்சும் வகையில் அக்ஷய் குமார் தோன்றுவதையும் சகித்துக் கொள்ள முடியவில்லையாம். அதனால் இளையராஜாவின் டெக்னிக்கை பிரயோகிக்க உத்தேசித்து, ரஜினி, அக்ஷய், ஷங்கர், ராஜமவுலி ஆகிய நால்வருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்ப உள்ளாராம். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி போல இளையராஜாவால் தமிழ் சினிமாவில் காலங்காலமாக இயகுனர்களும் நடிகர்களும் பின்பற்றி வரும் ‘உல்டா’ கலாசாரத்திற்கு கேடு வந்துவிட்டதே என கோடம்பாக்கத்தில் சுற்றித் திரியும் ஜோல்னாப் பை கதாசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பகிர்

There are no comments yet