சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளதால் அங்கு பிரச்சாரம் சூடு பறந்து வருகிறது. திமுக, அதிமுக அம்மா கட்சி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி, சிபிஎம், பாஜக ஆகிய கட்சிகள் ஆர்.கே. நகரின் தேர்தல் களத்தில் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக இரண்டாக பிளந்து அதிமுக அம்மா கட்சியாகவும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியாகவும் களத்தில் போட்டியிடுவதால் தங்களது பலத்தை காட்ட அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆர்.கே. நகரில் தினசரி தொப்பியோடு ஆஜராகிவிடும் டிடிவி தினகரன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது மானப்பிரச்சனை என்று கருதுவதால் தனக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரமான எமி ஜாக்சனை களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளார். ‘மிஸ் டீன் யுஎஸ்ஏ’ பட்டம் பெற்று, இந்தியா வந்து மதராசபட்டணம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, ‘ஐ’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் எமி ஜாக்சனை பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தொப்பி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டதாகவும் சசிகலா தரப்பினர் தெரிவித்துள்ளனர். மதரசாப் பட்டிணம் திரைப்படத்தில் தொப்பி அணிந்து கலக்கலாக நடித்த தோன்றிய எமி ஜாக்சனை சிங்கப்பூரில் உள்ள தினகரனின் நண்பர் மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிமுக அம்மா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தினகரன் ஆதரவு அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர் என்றார் கப்சா நிருபர். “முதலில் டைட்டானிக் பட நாயகி ‘கேட் வின்ஸ்லெட்’டை அழைக்கலாம் என்று இருந்தோம், பட்ஜெட் போதாததால் தமிழ் படங்களில் குப்பை கொட்டி வரும் எமிஜாக்சனை ஒப்பந்தம் செய்துள்ளோம். ஜெயலலிதா டீன் ஏஜில் சினிமாவில் அறிமுகமாகி ஒரு அன்னைதெரசா போல் மக்களுக்காக வாழ்ந்தார், அதபோல் கன்னித்தெரசாவாக தமிழ் சினிமாவில் ‘தெறம’ காட்டி வரும் எமிஜாக்சனை வைத்து ஓட்டுக்களை அள்ளுவோம். மதராசப்பட்டணம் திரைப்படத்தில், சென்னை மாநகரம் உருவான விதத்தை அருமையாக சித்தரித்திருப்பார்கள், அதில் நடித்த எமி, வட சென்னையான ஆர்கே நகரில் ஓட்டு கேட்க பொருத்தமான நட்சத்திர பேச்சாளர். ஆங்கிலத்தில் பேசும் எமியின் உரையை மொழிபெயர்க்க அந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர்யாவை ஒப்பந்தம் செய்யவும் திட்டம் உள்ளது, இது அல்லாமல் அவர் நடித்த மதராச படத்தின் பெயர் முஸ்லிம்களின் மதரஸா போல இருப்பதால் முஸ்லிம்கள் எனக்குத்தான் கிடைக்கும் என்றார் தினகரன்.

There are no comments yet