சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்ய வராததால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த வாரம் மியாட் மருத்துவ மனையில் கேப்டன் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான செக்கப் தான் என தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அவர் 28 மார்ச் ‘டிஸ்சார்ஜ்’ ஆகிறார் என்று செய்தி வெளியானது. ஆனால் டிஸ்சார்ஜ் ஆனாரா என தெரியவில்லை. அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் பல நாட்கள் மருத்துவமனையில் அவர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளன. இதன் மூலம் திட்டமிட்டப்படி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விஜயகாந்த் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது கேள்வி குறியாகியுள்ளது. எனவே ஓய்வு எடுப்பதற்காக விஜயகாந்தின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் மதிவாணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தொண்டர்களின் மோட்டார் சைக்கிள் பிரசாரமும் நடத்தப்பட்டது. களத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் கட்சியின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து கட்சி தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் உடல் நல பாதிப்பால் அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர் தனது வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று தொண்டர்கள் ஆவலுடன் எதிர் பார்த்த நிலையில் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். வழக்கம்போல் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் ஏப்ரல் 3-ந்தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதற்கான பிரசார பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க.விற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது இடைத்தேர்தல் பிரசாரம் அமையும் என்று கூறப்படுகிறது.

கப்ஸா நிருபர் செய்த புலனாய்வில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வைகோ இவர் கட்சியை திட்டமிட்டு காலிசெய்ததிலிருந்தே, மன உளைச்சலில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். மக்கள் நல கூட்டணி என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக கூட்டியக்கமாக சுருங்கி உள்ளது. மேலும் பிரேமலதாவின் ஆலோசனைப்படி கேப்டனை பேச வைத்து கடந்த முறை ஒரு சீட் கூட வாங்காமல் போனதற்கு, பேசாமல் இருந்து இந்த தேர்தலில் ஒத்திகை நடத்தி ஒரு வேளை ஜெயித்துவிட்டால், அடுத்த தேர்தலில் அதன்படி வியூகம் அமைக்கலாம் என்று பிரேமலதா கருதுவதாக தெரிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் மேடைகளில் பேசுவது புரியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குடித்து விட்டு பேசுகிறார், ஊடகங்களை காறித் துப்புகிறார், தொண்டர்களை தாக்குகிறார் போன்ற குற்றசாட்டுகளும் எழுந்தன. கப்சா நிருபர் மேலும் விசாரித்ததில், சினிமாவில் கோர்ட் காட்சிகளில் கேப்டன் விஜயகாந்த புள்ளி விபரங்களுடன் பக்கம் பக்கமாக வசனம் பேசுவார், அப்போது வசனகர்த்தாவுடன், பிராக்சி கொடுக்க ஒருவரும், டப்பிங் வாய்ஸ் கொடுக்க ஒருவரும் தயாராக இருப்பார்கள். அவர்கள் இருவரும் பிரச்சாரத்தில், பீனிக்ஸ் பிரியாணி கேட்டு அது கிடைக்காததால் பிரச்சாரத்திற்கு வரவில்லை என தெரிகிறது. ‘பீனிக்ஸ்’ பறவை என்பது ஒரு கற்பனை பறவை என்று பிரேமலதா எவ்வளவோ எடுத்துக் கூறியும், டப்பிங் வாய்ஸ் கொடுப்பவர் பிரச்சாரத்திற்கு வர மறுத்து விட்டார் என்பதால் வேறு பலகுரல் மன்னனை தேடி கோடம்பாக்கத்தில் சில தேமுதிக தொண்டர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

பகிர்

There are no comments yet