படம் நன்றி: விகடன்

சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் குன்றியதால் தேமுதிக பொதுச்செயலாளராக அவர் மனைவி பிரேமலதா பதவி ஏற்பார் என தெரிகிறது. இந்நிலையில் விஜயகாந்த் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதையடுத்து இடைத்தேர்தல் பிரசாரத்தை கவனிக்கும் பொறுப்பு பிரேமலதா விஜயகாந்திடம் வந்துள்ளது. மேலும் தற்போது உள்ள சூழலில் கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. இதனால் அடுத்த மாதம் முதல்வாரத்தில் மாவட்ட, ஒன்றிய அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்வு முடிந்து அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகு சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று நகரங்களில் ஒரு மாநகரத்தில் தே.மு.தி.க. பொதுகுழு கூடி பிரேமலதாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு தமிழகத்தின் அடுத்த அம்மா யார் என்ற ஒரு வெற்றிடம் தமிழக அரசியலில் உண்டானது. ஆரம்பத்தில் ஓபிஎஸ் சில நாட்கள் தமிழக முதல்வராக செயல்பட்டார், பின்னர் அதிரடியாக சசிகலா சின்னம்மாவாக உருவாகி அதிமுக பொதுச்செயலாளராக முயன்றார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். விக்கிபீடியாவில் ஒரு பக்கம் கூட இல்லாத கூகுளில் தேடினாலும் கிடைக்காத எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். ஜெயலலிதாவின் அண்ணன் மக்ள் தீபா குட்டி அம்மாவாக உருவெடுத்து பேரவை ஒன்றை தொடங்கினார். பின்னர் குடும்பத்தில் குழப்பம் உருவாக்கி, தீபாவால் அவரது கணவர் மாதவன் அடித்து விரட்டப்பட்டார். அதன் பிறகு மாதவன் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.

இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள், குழறுபடிகள் தமிழக அரசியலில் நிகழ்ந்தன. கருணாநிதி உடல் நலம் குன்றியதால் ஸ்டாலின் திமுக செயல் தலைவராக பொறுப்பேற்றார். இதற்கிடையே அரசியல் நிகழ்வுகளை கழுகுக் கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த பிரேமலதா, தமிழகத்தின் அடுத்த அம்மாவாக உருவெடுக்க முடிவெடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்திற்கு சென்றது சாமி தரிசனம் செய்ய அல்ல, விஜயகாந்துக்கு சூனியம் வைக்க என்ற அதிர்ச்சித் தகவலை நமது கப்சா நிருபர் கண்டறிந்துள்ளார். பொதுச்செயலாளராக முயன்ற சின்னம்மா, கணவரை விரட்டிய தீபா, கருணாநிதி உடல் நலம் குன்றியவுடன் செயல் தலைவர் ஆன ஸ்டாலின் ஆகிய மூவரின் அரசியல் ‘மூவ்’ களையும் மிக்சியில் போட்டு அரைத்து, தேமுதிகவின் பொதுச்செயலாள்ராக உருவேடுத்து, தமிழகத்தின் அடுத்த அம்மாவாக உருவெடுக்க களமிறங்கியுள்ளதாக தெரிகிறது. ஜெயலலிதா சமாதி அபசகுனமாக கருதப்படுவதால் நேரிடையாக அண்ணா சமாதியில் ஓங்கி அறைந்து சபதம் போடலாமா என யோசனையில் இருப்பதாகவும் கப்ஸா நிருபர் மேலும் கூறினார்.

பகிர்

There are no comments yet