சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேதி நெருங்கி வருவதால், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல் வீடு, வீடாகச் சென்று ஓட்டு கேட்கின்றனர். காலை 6 மணிக்கே சில வேட்பாளர்கள் களத்தில் இறங்கிவிடுகின்றனர். தேர்தல் பணிக்காக வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தல், பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய இரு அணிகளுக்கும் நடக்கும் யுத்தமாகவே பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று, பன்னீர்செல்வம் அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதுபோல, பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன், சசிகலாவுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் பாடம் கற்பிக்க, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய இரண்டு அணிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தனக்கு போட்டியாளர் அல்ல… தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் மட்டுமே தனக்குப் போட்டி என்று தெரிவித்து பிரசாரத்தில் களமிறங்கி உள்ளார். அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் முடக்கம், உள்கட்சி பூசல் ஆகியவை தங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் மருது கணேஷ் உள்ளார். இவர்களுடன், பா.ஜ.க. வேட்பாளர் கங்கைஅமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதன், தே.மு.தி.க.வேட்பாளர் மதிவாணன் உள்பட 62 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். தொகுதியில் உள்ள 2 லட்சத்து 62 ஆயிரத்து 721 வாக்காளர்களைக் கவர, முக்கியமான கட்சிகள் சார்பில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன்கூடிய தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் கிடப்பில் உள்ளநிலையில், இந்த அறிக்கைகள் மக்கள் மனதில் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறி.

இந்த நிலையில், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், பல்வேறு தேர்தல் வியூகங்களை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தத் தொகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டபோது பின்பற்றப்பட்ட அனைத்து தேர்தல் ஃபார்முலாக்களையும் பின்பற்ற, தினகரன் தரப்பு கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளது. 50 வாக்காளர்களுக்கு ஒரு தேர்தல் பொறுப்பாளரை தினகரன் தரப்பு நியமித்துள்ளது. தேர்தல் பொறுப்பாளருக்கு உதவிகரமாக சிலரும் உள்ளனர். வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவியாக உள்ளூரைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள், தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று, தொப்பி சின்னத்துக்கு ஓட்டு கேட்க வேண்டும். அப்போது, வாக்காளர்களின் மனநிலையை அறிந்துகொண்டு அதைத் தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும் போன்ற உத்தரவுகளை வாய்மொழியாக சசிகலா அணி பிறப்பித்துள்ளது. தேர்தல் பொறுப்பாளர்கள், வீடு வீடாகச் சென்று, ‘நலத்திட்டங்கள் தொடர தொப்பி சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள், நல்லாட்சி தொடர தொப்பி சின்னத்துக்கு வாக்களியுங்கள்’ என்ற பல்லவியைப் ஸ்லோகம் போலச் சொல்லிவருகின்றனர்.

டி.டி.வி.தினகரனின் இந்தத் தேர்தல் வியூகம் நிச்சயம் பயன்அளிக்கும் என்று சசிகலா அணி நம்புகிறது. தொகுதி முழுவதும் சசிகலா அணியினர் பிரசார நோட்டீஸ் விநியோகிக்கும்போது, பொம்மை வடிவிலான தொப்பியையும் கொடுக்கின்றனர். வாக்காளர்கள் பட்டியல் அடிப்படையிலும், பிரசார கணக்கீட்டின்படியும், தொப்பி சின்னத்துக்கு வாக்களிப்பவர்களின் பட்டியல் தயாராகிவருகிறது. இந்தப் பட்டியல், கட்சித்தலைமைக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், தொப்பி சின்னத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதாக டி.டி.வி.தினகரனுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. இந்த உற்சாகத்தில் டி.டி.வி.தினகரன் தொகுதி முழுவதும் உலாவருகிறார் என்று சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில், பக்கத்து வீட்டு பெண்போல பேசி தொப்பி சின்னத்துக்கு ஓட்டுக்களைக் கேட்கின்றனர், சசிகலா அணி மகளிர் அணியினர். மீனவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதியை இரண்டாகப் பிரித்து அமைச்சர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் ஆகியோரிடம் முக்கியப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஓட்டுமொத்த அமைச்சர்களும் சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள் தொகுதி முழுவதும் வலம்வருகின்றனர்.

இதெற்கெல்லாம் மேலாக தேர்தலுக்கு முந்தின தினத்தன்று ஆர்கே நகர் வாக்காளர்கள் அனைவரையும் சொகுசு பஸ்களில் ஏற்றி மகாபலிபுரம் ரிசார்ட்டில் தங்கவைத்து அவர்களுக்கு மூளை சலவை செய்து கை செலவையும் கொஞ்சம் கவனித்து அங்கிருந்து நேரடியாக வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவும் தினகரன் திட்டமிட்டுள்ளதாக தொப்பி அணிந்த ஒரு ஹிப்பி தெரிவித்தது. சமீபத்தில் கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்தது போல் ஆர்கே நகர் வாக்காளர்களை அடைத்து வைத்து வெற்றி பெறும் தினகரனின் இந்த முடிவினால் ஓபிஎஸ் அணியினர் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

There are no comments yet