சென்னை: முன்னர் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தினகரன் போட்டியிட்டபோது, அவரை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அந்த வீடியோ காட்சிகளை தேடிப்பிடித்து, கிராபிக்ஸ் உதவுடன் அதில் சில மாற்றங்களை செய்து, ஜெயலலிதா தற்போது நடைபெறவிருக்கும் ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்காக “தொப்பி” சின்னத்திற்கு வாக்கு கேட்பது போன்ற வீடியோ காட்சியை உருவாக்கி இருக்கிறது சின்னம்மா அதிமுக. ஒரு சில இடங்களை தவிர, ஜெயலலிதாவின் உதட்டசைவுக்கும், வெளிவரும் குரலுக்கும் பொருந்தாத வகையில், அதில் அவருடைய குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அ.இ.அதிமுக வேட்பாளராக தம்பி தினகரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நல்லவர், வல்லவர், உங்களுக்காக உழைக்க காத்துக் கொண்டிருப்பவர்” என்பதெல்லாம், பெரியகுளத்தில் ஜெயலலிதா பேசியது. ஆனால், அவர் கைகளை உயர்த்தி, இரண்டு விரல்களை காட்டி, இரட்டை இலையை சொல்லுவதை – தொப்பி சின்னத்தை சொல்லுவதாக மாற்றி அமைத்துள்ளது சின்னம்மா தரப்பு. இப்படி ஒரு சாதாரண கிராபிக்ஸ் ‘கட்டிங் அண்டு ஒட்டிங்’ தொழில் நுட்பத்திற்கு, தகவல் தொழில் நுட்ப பிரிவு அவசியம் இல்லை. மேலும் இந்த வீடியோவில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது. அதாவது, ஆர்.கே.நகரில், இரட்டை இலை சின்னத்தை மட்டும் தேர்தல் ஆணையம் முடக்கவில்லை. அ.இ.அதிமுக என்ற கட்சி பெயரை பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. ஆனால், கட்சி பெயரை சொல்லி ஜெயலலிதா, தினகரனை அறிமுகப்படுத்துவது போன்ற மாயத்தோற்றம், தேர்தல் ஆணைய உத்தரவை மீறும் செயலாகும். ஒரு வேளை, தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வீடியோ பயன்படுத்தப்பட்டு, தினகரன் வெற்றி பெற்றால், தேர்தல் ஆணைய விதி மீறலை காரணம் காட்டி அவரை பதவி நீக்கமே செய்யலாம். அல்லது அதற்கு முன்னதாகவே, கட்சி பெயரை சொல்லும் இந்த வீடியோவை பயன்படுத்துவதற்கு தடை கோரி, எதிர் தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகலாம்.

ஜெயலலிதாவின், பிரச்சார வீடியோவை வலைவீசி தேடி எடுத்து அதை பயன்படுத்தும் மகிழ்ச்சியில். கட்சி பெயர் இடம்பெறுவதை எடிட் செய்ய மறந்து விட்டனர் சின்னம்மா தரப்பு. இரட்டை மின் கம்பம் என்று சொல்லி ஓபிஎஸ் அணியினர் இரட்டை இலையை பிரசாரம் செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சின்னம்மா அணி இந்த பித்தலாட்டத்தில் தப்புமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இது குறித்து நமது உங்கள்நியூஸ் கப்சா நிருபர் சேகரித்த செய்தி பின்வருமாறு: இந்த வீடியோவை பழைய ஜெயா டிவி தற்போதைய சின்னம்மா டிவி அலுவலகத்தில் இருந்து தேடி எடுத்த எடிட்டர் எட்டப்பனுக்கு ‘தொப்பி’ தினகரன் மோதிரம் பரிசளித்ததாக நம்பத்தகாத செய்தி தெரிவிக்கிறது. இதை தினகரன் ஈமெயிலில் அனுப்ப, சிறையில் தினக்கூலி 50 ரூபாய்க்கு மெழுகுவர்த்தி தயாரிப்பில் இருந்த சின்னம்மா அதை அப்படியே போட்டுவிட்டு, தன்னிடம் இருந்த லேப்டாப்பில் அக்கா ஜெயலலிதா போல் மிமிக்ரி செய்து, தனது பழைய வீடியோ கடை அனுபவத்தை வைத்து இந்த ‘ரெக்கார்டு உடான்ஸ்’ பணியை முடித்ததாக தெரிகிறது. வீடியோவை பெற்றுக் கொண்ட தினகரன், ஸ்கைப் சேட்டிலேயே சின்னம்மா காலில் விழுந்து ஆசி வாங்கினாராம். தொலைக்காட்சி, சினிமாக்களில் வரும் மொழிமாற்று திரைப்படங்கள், டிவி சீரியல்களை மிஞ்சும் வகையில் ஜுனூன் தமிழில் முன்னுக்குப்பின் முரணான லிப் சிங்க் இல்லாத இந்த படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாகுபலி 2.0 படங்களை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் தினகரனின் ஆர்கே நகர் குறும்படம் உருவாகியுள்ளதாக கோடம்பாக்கமே அலறுகிறது. அப்படங்கள் ரிலீசாகும்போது சின்னம்மா அதிமுக ஆட்சியில் இருக்கும் – விஸ்வரூபம் படத்தை முடக்கியது போல், பாகுபலி 2.0 படங்களை முடக்கி, இந்த படத்தை ஐனாக்ஸ் ஐமேக்ஸ் போன்ற திரையரங்குகளில் வெளியிடவும், ஜெயாடிவியில் ஒளிபரப்பவும் சின்னம்மா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. ஆர்கே நகர் ஜெயலலிதா ரசிகர் பட்டாளம் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்

There are no comments yet