சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டதால், மற்ற மதுக்கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மொத்தம் 5600 டாஸ்மாக்குகளில் சுமாராக 3400 கடைகள் நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்தன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல இடங்களில் மற்ற மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி செல்கின்றனர் குடி பிரியர்கள். இருக்கும் சில கடைகளில் நீண்ட வரிசையில் நின்றும் கூட்டம் அதிக அளவில் கூடி மதுபாட்டில்களை வாங்கப்படுவதால் அந்த இடத்தில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்களும் அப்பகுதியில் வசிப்போரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுவுக்கு எதிரான இந்த சட்டப் போராட்டத்தை முதன் முதலாக துவங்கியவர் மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினிதான் என்பது நம்மில் பலர் அறியாதது. ஏனெனில் மதுவிலக்கு வேண்டும் என பாமக ஒரு பக்கம் வலியுறுத்தி வந்தாலும், மற்றொரு பக்கம் தனது போராட்டங்கள் மூலம் தமிழக இளைஞர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் நந்தினி. இதற்காக பல நூற்றுக்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் சுமார் 10 லட்சம் பேர் வேலையிழக்க நேரிடும் என்று நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கருத்து தெரிவித்துள்ளார். நட்சத்திர விடுதிகளிலும் மது வகைகள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 50,000 கடைகள் வரை மூடப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மற்றும் சில மாநில அரசுகள் மேல்முறையீடு செய்யலாம் என திட்டமிட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றம் மதுக்கடைகளை அகற்ற கூறிய உத்தரவால் இந்தியா அளவில் 10 லட்சம் பேர் வரை வேலை இழக்கலாம் என்று கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், பெரிய அளவில் தமிழக அரசிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனை சமாளிக்க நெடுஞ்சாலைகள் அல்லாத பிற பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால், தமிழக அரசு தேர்ந்தெடுக்கும் இடங்களில் வசிக்கும் பெண்கள் பெருமளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் சின்னம்மாவின் எடப்பாடி அரசு நடமாடும் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கப்ஸா நிருபர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது. இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் தங்கு தடையின்றி ‘தண்ணி’ சப்ளை நடைபெறும். டிரைவர் கிளீனர் மற்றும் குற்றவாளிகள் போன்றோர் கடைகளை தேடி செல்லதேவை இல்லை. இருந்த இடத்தில் இருந்தே போதை அடையலாம். போக்குவரத்து குற்றங்களை பெருக்கவும், குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவோரிடம் காவல் துறையின் வசூல் வேட்டையும் அதிகரிக்கும், சாலை விபத்துக்களால் மக்கள் தொகை கட்டுகுள் வரும். குடிநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனைகளின் வருமானம் பெருகும். பண மதிப்பிழப்பின் போது செயல்படாமல் போன ஏடிஎம் மையங்களில், பணம் போட்டால் சரக்கு வரும் ‘வெண்டிங்’ மிஷிங்களையும் நிறுவ சின்னம்மா பினாமி அரசிடம் திட்டம் உள்ளதாம்.

பகிர்

There are no comments yet