புகைப்படம் நன்றி: இந்தியா டுடே

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 12 தேதியன்று தொடங்கி ஏப்ரல் 17 வரை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதால், ரஜினி அரசியலுக்கு வரலாம் என்ற ஒரு பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது. முன்பெல்லாம் தேர்தல்களின்போது தமது ரசிகர்கள் யாருக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட ஆலோசனை அவ்வப்போது அளித்து வந்தார் ரஜினி. இந்த சந்திப்புகளுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டு பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதால், சந்திப்புகளை நிறுத்திக் கொண்ட ரஜினி கடந்த பத்து ஆண்டுகளாக எந்த ரசிகர்களையும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனது பிறந்தநாள், பொங்கல், புத்தாண்டு ஆகிய நாள்களின்போது சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்தின் வீட்டின் முன் குவியும் ரசிகர்களை அவ்வப்போது வீட்டுக்கு வெளியே வந்து கையசைத்து தனக்கே உரிய பாணியில் வணக்கம் தெரிவித்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரஜினி ஆலோசனை நடத்தவுள்ளதால் அதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கடந்த வாரம் ஒரு செய்தி வெளியானது. அதனால் அங்கு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள், அது புரளி தெரிந்து பின்னர் கலைந்து சென்றனர்.

இது ஒருபுறமிருக்க, வட மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜக தடம்பதிக்க கடுமையாக போராடியும் முடியவில்லை. தமிழகம் என்றாலே திராவிடக் கட்சிகள்தான் என்றிருந்த நிலையில் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுவிட்டது. கருணாநிதியோ உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கங்கை அமரன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அப்போது இது டிரைலர்தான், இனிமே தான் மெயின் பிக்சரை பார்க்க போகிறீர்கள் என்று பன்ச் வைத்தார். எனினும் நடிகர் ரஜினி காந்த் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ட்விட்டரில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு வீடு வழங்கும் லைகா நிறுவன விழாவில் கலந்து கொள்ள இருந்த ரஜினிகாந்தை கலந்து கொள்ள வேண்டாம் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்ததால் தனது பயணத்தை அரைமனதாகவே ரஜினிகாந்த் ரத்து செய்தார். பின்னர் தமக்காக போராட்டம் நடத்திய இலங்கை தமிழர்களுக்கு நன்றியும் தெரிவித்தார் ரஜினி.

இந்த சூழ்நிலையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரசிகர் மன்றத்தின் எதிர்கால திட்டங்களை கேட்டறிவதற்கான சந்திப்பாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் இந்த ஆலோசனை கூட்டம் அவர் அரசியலுக்கு வர அச்சாரமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது ரசிகர்களின் நீண்டகால விருப்பமாக உள்ளது. ரசிகர்கள் சந்திப்பு குறித்து ரஜினி நமது கப்ஸா நிருபரிடம் அளித்த பேட்டியில், “ஏப்ரல் ஃபூல் அன்று ஏமாந்த ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வரும் ஏப்ரல் 12-ஆம் தேதியிலிருந்து 17-ஆம் தேதி வரை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்டம் வாரியாக ஒரு நாளைக்கு 300 ரசிகர்களை சந்தித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் 2.0 பட டிக்கட்களை விற்க உள்ளேன். கபாலி படம் ரிலீசானபோது எனது ரசிகர்கள் தாணுவிடம் டிக்கெட் கேட்டு ஏமாந்து நள்ளிரவில் எனது பட பேனர்களை கிழித்து அழுது கொண்டு சென்றதை அறிந்தேன், அதனால் இந்த முறை நானே நேரடியாக டிக்கட்களை விற்பனை செய்ய உள்ளேன். சின்னம்மா முதல்வர் பதவி ஏற்க முயன்றபோது சென்னை பல்கலைக் கழகத்தில் ஏற்பாடுகளை செய்த கார்பெண்டர்களை வைத்து ராகவேந்திரா மண்டபத்தில் கட்டை கட்டி கூட்டத்தை ஒழுங்குபடுத்த் சொல்லி உள்ளேன். ரசிகர்களும் பொதுமக்களும் மோடியின் புதிய இந்தியா பிறந்த போது பிரசவித்த புதிய 2000 நோட்டை கொடுத்து எனது ஆட்டோகிராப் பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கட்களை வாங்கிச் செல்லலாம். கடந்த முறை பணமதிப்பிழப்பு, சில்லறை தட்டுப்பாடு, வர்தா புயல் பாதிப்பு போன்றவற்றால் கலைப்போலி கபாலி வசூல் பாதிக்கப்பட்டது, அதை தவிர்க்கவே இந்த நேரடி டிக்கட் விற்பனை. முன்பு ஏடிஎம் வாசலிலும், தற்போது டாஸ்மாக் வாசலிலும் நின்று பழக்கப்பட்ட தமிழ் குடிமகன் என் பட டிக்கட் வாங்க கியூவில் வந்து நிற்க மாட்டானா என்ன?” என்றார்.

பகிர்

There are no comments yet