சென்னை: ஆர்கே நகர் தேர்தல் பிரசாரம் நாளுக்கு நாள் பரபரப்படைந்து வரும் நிலையில், அரசியல் அநாகரிகத்தின் உச்சமான காட்சிகளும் அரங்கேறி வருவது மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது. சின்னம்மா தரப்பு ஜெயலலிதாவிடம் கபளீகரம் செய்த பணத்தை வைத்து வெற்றியை தீர்மானிக்க போராடி வரும் நிலையில் ஒரு ஓட்டுக்கு நான்காயிரம் வரை பட்டுவாடா செய்யப்படுகிறது. இதன் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி தேர்தல் நடைபெறுமா பெறாதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பன்னீர், மதுசூதனன் தரப்பு ஜெவின் பிணத்தை வைத்து ஒரு அநாகரிகமற்ற அசிங்கமான முறையை கையாண்டு ஓட்டு சேகரித்தனர்.

அதாவது, ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு எப்படி வைக்கப்பட்டிருந்ததோ அதேபோல சவப்பெட்டியுடன் கூடிய மாதிரி ஒன்றை உருவாக்கி அதை பிரசார ஜீப்பில் வைத்துக்கொண்டு வாக்கு கேட்கிறது. பார்ப்பவர்கள் கண் கூசும் அளவிற்கு தேர்தல் பிரசாரமா இறுதி ஊர்வலமா என மக்கள் முகம் சுழித்தனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் என்பது பல வகைகளிலும் கீழ் மட்டத்திற்கு இறங்கிவிட்டது. அரசியல் ஒரு சாக்கடை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என ஆர்கே நகரில் நிரூபணமாகி விட்டது. முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நடத்திய பிரசார ஊர்வலத்தில்தான் இந்த ‘ஷாக்கிங்’ சம்பவம் நடந்துள்ளது. சென்டிமென்டாக ஆர்.கே.நகர் மக்கள் மனதை வெல்ல வேண்டும் என்பதற்காக இவ்வளவு கீழ் மட்டத்திற்கு அரசியல் நாகரீகத்தை ஓ.பி.எஸ் அணி கொண்டு சென்றுள்ளது நடுநிலையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இது குறித்து ஓபிஎஸ் கப்ஸா நிருபரிடம் கூறும்போது, “அரசியலுக்கு பால பாடமே மானம் சூடு சொரணையில்லமல் இருப்பது தான். அம்மா இறந்து 60 நாட்கள் சும்மா வாயை மூடிக்கொண்டிருந்த நான், மோடிஜி ஆதரவளித்ததால், அம்மா சாவில் மர்மம் இருப்பதாக கொளுத்திப் போட்டேன். பணத்தால் மக்களை சீரழிக்கும் தினகரன் அணி பிணததை காட்டி ஓட்டு கேட்க முடிவு செய்வதாக தெரிவித்தனர். சாவில் சந்தேகம் இருப்பதாக சர்ச்சையை கிளப்பினால் பிணத்தை தோண்டி எடுப்பார்கள் என எதிர்பார்த்தோம், ஆனால் நடக்கவில்லை அதனால் தான் சினிமா ஆர்ட் டைரக்டர் ஒருவரிடம் சொல்லி இந்த மெழுகு சிலையை தயார் செய்தோம். அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு கண்டிப்பாக மெரினாவில் உறங்கும் அம்மாவின் ஒரிஜினல் சடலத்தை தோண்டி எடுத்து அதை பிரச்சார வண்டியில் ஏற்றி ஊர் ஊரக காட்டி ஓட்டுக்கேட்போம். இப்பொது தற்காலிகமாக இடைத்தேர்தலுக்காக மெழுகு பொம்மையை வைத்துள்ளோம்” என்று ஜெயலலிதா பொம்மையின் வாயில் இருந்த அரிசியை தன் வாயில் போட்டு கொரித்துக் காட்டினார்.

பகிர்

There are no comments yet