சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு சின்னம்மா தரப்பின் தினகரன் கட்சியினர் மீது பணப்பட்டுவாடா புகார் கடுமையாக எழுந்துள்ளது. ஒரு ஓட்டுக்கு 4000 வீதம் இதுவரை 100 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை திடீர் சோதனையில் இறங்கியுள்ளது. ஏப்ரல் 7 அன்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை விறுவிறுப்பாக விடிய விடிய நீடித்தது. எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர்.

சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடந்ததாகவும், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ5.13 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 80 கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. விஜயபாஸ்கர் தவிர அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த நாட்டாமை சரத்குமார் வீட்டையும் விட்டு வைக்க வில்லை வருமான வரித்துறையினர். நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீட்டில் அதிகாலை 5.30 மணிமுதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நாட்டாமையை காலைக் கடன் கூட கழிக்க விடாமல் வீட்டுச்சிறையில் வைத்ததாக சரத்குமார் தரப்பு அதிருப்தி தெரிவித்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சரத்குமார் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக, சரத்குமார் அறிவித்தார். ஆனால், அங்கு அவரது கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரத்குமார், டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்து இருந்தார். நாட்டாமை தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த மறுநாளே ரெய்டு நடந்திருப்பது, நாட்டாமையை பிரச்சாரத்தில் ஈடுபட விடாமல் செய்யத்தானோ என்ற சந்தேகம் சின்னம்மா தரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக நாட்டாமை கூறும்போது ‘டி.டி.வி.தினரகனை சமத்துவ மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அ.தி.மு.க-வில் சிறு மனஸ்தாபங்கள் இருக்கலாம். எல்லோரும் அமர்ந்து பேசி, நல்ல முடிவு எடுக்கலாம். சேர்ந்து பணியாற்றலாம். எம்.ஜி.ஆர். ஆசீர்வாதத்தோடு, ஜெயலலிதா ஆசீர்வாதத்தோடு அது நடக்கலாம். அதற்கான வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெய்டு நடந்தபோது தமிழக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர் திடீரென்று சரத்குமார் வீட்டுக்கு வந்தனர். சரத்குமாரை வலுக்கட்டாயமாக பிரசாரத்துக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். சுற்றி நின்று சரத்குமாரை அவரது வீட்டிலிருந்து பிரசாரத்துக்கு அழைத்து சென்றுவிட்டனர். வருமான வரி சோதனை நடக்கும் சமயத்தில் சம்பந்தப்பட்டவர் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. ஆனால் அதையெல்லாம் மீறி சரத்குமாரை அழைத்து சென்றுவிட்டனர். இது குறித்து கப்சா வருமான வரித்துறை அதிகாரி ரெய்டு ரெங்கசாமி கூறும் போது: “ஆரம்பத்தில் பன்னீர்செல்வத்தை ஆதரித்தார் நாட்டாமை. அப்போது மோடிஜி குஷிமூடில் இருந்தார். பிறகு ஏனோ சமக வேட்பாளர் நிராகரிக்கப்பட்டதும் நாட்டமை தினகரன் பக்கம் சாய்ந்தார். இது மொடிஜிக்கு பிடிக்கவில்லை. அதிமுகவின் பிளவை பயன்படுத்தி பின்வாசல் வழியாக தமிழகத்திற்குள் வர முயற்சிக்கும் தாமரை மலரை நாட்டாமை பறிக்க முயன்றதால். முன்பு ராமமோகன் ராவ், சேகர் ரெட்டி இருவருக்கும் கொடுத்த கைதி ட்ரீட்மெண்டையும், ரெய்டு பரிசையும் விஜயபாஸ்கருக்கும், நாட்டாமைக்கும் கொடுக்க சொன்னார், நாங்களும் பசி தூக்கம் மறந்து அதிகாலை முதல் நாட்டாமையிடமும் விஜயபாஸ்கரிடமும், ‘தினகரனுக்கு ஏன் சொம்பு தூக்கினீங்க’ என்று கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டு கலாய்த்தோம்.” என்றார்.

There are no comments yet