சென்னை/டெல்லி: இந்திய அரசின் 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழ்மை அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ்ப்படமாக ‘ஜோக்கர்’ தேர்வாகியுள்ளது. சிறந்த பாடலாசிரியராக 7-ஆவது முறையாக வைரமுத்துவும், ஒளிப்பதிவாளராக திருவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமூக நோக்கத்துக்கான சிறந்த படத்துக்கான விருது அமிதாப் நடித்த ‘பிங்க்’ படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தனது சோக நடிப்பை கொட்டி. மனைவியை தேடும் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’ படத்துக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை.

இது ஒருபுறமிருக்க, ஏப்ரல் 12 முதல் 17 வரை ரசிகர்களை மாவாட்ட வாரியாக சந்தித்து புதுக்கட்சி துவங்க இருந்த ரஜினி, மோடி தனக்கு விருது அளிக்காததால் அதிருப்தியில் உள்ளதாக நம்பத்தகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திப்பை ரத்து செய்த ரஜினி வாட்சப் பதிவில் கூறியிருப்பதாவது: “என்னை வாழவைத்த தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கு நான், ரஜினிகாந்த், என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் ஒரு தகவல், பத்து ஆண்டுகள் ஆயிற்று நான் உங்களை சந்தித்து, உரையாடி, புகைப்படம் எடுத்து. ரசிகர்களாகிய நீங்களும் என்னை சந்திப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தீர்கள். நேரமின்மையின் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனது. தற்போது அதற்கான சந்தர்ப்பமும்,வாய்ப்பும் கிடைத்த நிலையில் ரசிகர்களாகிய உங்களை நான் சந்திப்பதற்கு ஏப்ரல் 12 முதல் 16 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், உங்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 300 என்ற வீதம் தோராயமாக 2000 பேருடன் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க, என்னுடைய ஆசை மற்றும் விருப்பத்தின் பெயரில் திட்டமிடப்பட்டிருந்தது. அத்தனை நபர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுப்பது என்பது ஒரு நாளில் நடைமுறையில் கடினமான விடயம் என்பதால், 8 பேர் கொண்ட குழுவாக புகைப்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்ககூடியதாக இருந்ததால், ரசிகர்கள் அனைவரும் தனித்தனியாக என்னுடன் புகைப்படம் எடுக்க கோரிக்கை வைத்தீர்கள். ரசிகர்களாகிய உங்களின் விருப்பத்தை ஏற்று, தற்போது நடைபெற இருந்த (ஏப்ரல் 12- 16 தேதி) சந்திப்பை ஒத்தி வைத்துள்ளோம்.

இனி வரும் காலத்தில், ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுக்க தக்க முன்னேற்பாடு செய்யப்படும். இதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கிறோம். என் ரசிகர்களாகிய நீங்கள் இதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.” இப்படி முடிகிறது வாட்சாப் பதிவு. இது குறித்த நிலவரம் அறியச் சென்ற கப்சா நிருபரிடம் ரஜினி அளித்த பேட்டி: நான் அரசியலுக்கு வரும் எண்ண்மெல்லாம் இல்லை, சும்மா ரசிகர்களுக்கு அன்னதானம் வழங்கி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். கபாலி படத்துக்கு தேசிய விருது கொடுப்பார்கள் என்று மோடியை நம்பி மோட்டுவளையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். மோடி என்னை ஏமாற்றி விட்டார். தினகரனுக்கு ஆதரவு கொடுத்ததால், சரத்குமார், விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடந்ததை பார்த்து குலை நடுங்கிப் போனேன். அடுத்து என்னை குறி வைத்தால் தாங்க மாட்டேன். அரசியலில் இறங்கி எனது ரசிகனுக்கு ஒரு படி அரிசி கொடுக்கும் எண்ணமெல்லாம் இல்லை, என்னுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்தாலே பசி தீரும் என்று நம்புகிறேன்” என்றார்.

பகிர்

There are no comments yet