சென்னை: நடிகர் சங்கத்தை கைப்பற்றிய விஷால் அணி, தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றியுள்ளது, இதனால் தலைகால் புரியாமல் தமிழக முதல்வர் போல் விஷால் மேடைகளில் பேசியும், பேட்டி கொடுத்தும் வருகிறார். சிவாஜி பேரன் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நெருப்புடா’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சிவாஜியின் வீடான அன்னை இல்லத்தில் நடந்தது. இந்த விழாவில், ரஜினி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவில் பேசிய விஷால், ’ஒரு திரைப்படம் வெளியாகி மூன்று நாள்களுக்கு, யாரும் தியேட்டரில் போய் படம் பார்க்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

விஷாலைத் தொடர்ந்து லாரன்ஸும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். விழாவில் பேசிய லாரன்ஸ், ’படம் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகுதான், படத்தைப் பற்றிய விமர்சனங்கள் வெளிவர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றார். முன்னதாக விஷால் ஒரு நிகழ்ச்சியில் தியேட்டரில் விற்கப்படும் ஒவ்வொரு சினிமா டிக்கட்டில் இருந்தும் ஒரு ரூபாய் விவசாயிகள் நலனுக்காக கொடுக்கப்படும் என்றார். இதற்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கரண்ட் பில், ஏசி என அன்றாட தேவைகளை நிறைவற்றவே போராடி வருகிறோம், வேண்டுமானால் விஷாலின் சம்பளத்தில் 10 சதவிகிதம் கொடுக்கட்டும் என்று திருப்பி அடித்தனர். விஷால் கப்-சிப் ஆனார். தற்போது நெட்டிசன்களை குறிவைத்து இந்த கருத்தை கூறியுள்ளார்.

இதை கண்டு தமிழ்த் திரைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதில் முண்ணனி தளமான தமிழ் ராக்கர்ஸ் ஒரு கப்ஸா அறிக்கையை சமூக வலை தளங்களில் பரவ விட்டுள்ளது, அந்த அறிக்கையில், ‘முகநூல் சினிமா ஆய்வாளர்கள் திரைப்பட விமர்சனம் எழுத வசதியாக படம் ரிலீசான ஒரு மணி நேரத்தில் எங்கள் தளத்தில் காணக் கிடைக்கும். அதற்கு நாங்கள் பொறுப்பு, தவிர டிக்கட் வாங்கி பின்னர் அதிலிருந்து ஒரு ரூபாய் கொடுக்கும் திட்டமெல்லாம் ஒப்பேறாது, திமுகவின் உழவர் சந்தை திட்டம் வீணானது போல், நடுவில் இடைத்தரகர்கள் பிடுங்கிக் கொள்வார்கள். எங்கள் இணைய தளத்தில் ரசிகர்கள் இலவசமாக பார்த்துவிட்டு, மொத்த டிக்கட் பணமான 120 ரூபாயையும் விவசாயிகள் அக்க்வுண்டில் நேரடியாகவே டெப்பாசிட் செய்துவிடலாம், அதற்கான வசதி எங்கள் இணைய தளத்தில் விரைவில் ஏற்படுத்தப்படும்..” இவ்வாறு அந்த வரலாற்று சிறப்பு மிக்க செய்திக் குறிப்பு கூறுகிறது.

பகிர்

There are no comments yet