சென்னை: ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக தொண்டர்கள் அவரது அண்ணன் மகள் தீபாவை வேறு வழியில்லாமல் அரசியலுக்கு அழைத்தனர். ஆனால் அரசியலின் ஆழம் புரியாத தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை உருவாக்கி அரசியலில் குதித்தார். ஆனால் ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதும் நிலமை தலைகீழாக மாறியது. தீபாவை ஆதரித்தவர்கள் மொத்தமாக ஓபிஎஸ் அணியில் ஐக்கியமாகினர். திடீரென தீபாவை சுற்றி தீய சக்திகள் இருக்கின்றன பேட்டியளித்த தீபாவின் கணவர் மாதவன் தனி கட்சி தொடங்க இருப்பதாக கூறி அதிர்ச்சியளித்தார்.

ஆர்கே நகர் தேர்தலில் வேட்பு மனுவில் கணவர் மாதவனின் பெயரை குறிப்பிடாமல் தாக்கல் செய்தார் தீபா. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்தானதால் அனைத்து அரசியல் கட்சியினர் மிகுந்த மன உளைச்சலிலும் பண உளைச்சலிலும் உள்ளனர். இதில் தீபா மிகுந்த வருத்தத்தில் உள்ளார். தீபாவுக்கும் அவருடைய கணவர் மாதவனுக்கும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆரம்பித்த சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சமீபகாலமாக இருவரும் மோதலில் உள்ளனர். தீபா செய்தியாளர்களுக்கு தன்னுடைய இல்லத்தில் வைத்து ஆர்கே நகர் தேர்தல் ரத்தானது குறித்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய கணவர் மாதவன், தீபாவின் வீட்டுக்கு வந்தார். அவர் வந்ததும் அவரை வெளியே போகச் சொல்லி சிலரிடம் தீபா சொல்லி அனுப்பினார். அதனால் மாதவன் செய்தியாளர்கள் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார். செய்தியாளர் கூட்டம் முடிந்ததும், தீபா தன் கணவர் உள்ளே நுழைந்துவிடாதவாறு வீட்டின் அனைத்துக் கதவுகளையும் செய்தியாளர்களின் முன்னிலையிலேயே பூட்டினார். இதைப் பார்த்த மாதவன் சிறிதுநேரம் காத்திருந்து விட்டு, காரில் ஏறி போனார். இதைக்கண்ட தீபா ஆதரவாளர்கள் ‘குட்டி அம்மா தீபா வாழ்க’ என்று கோஷமிட்டதாக அங்கிருந்த கப்ஸா நிருபர் தெரிவித்தார்.

தீபாவிடமிருந்து மாதவனை பிரித்ததில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் முக்கிய பங்கு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாதவனை தனிக்கட்சி ஆரம்பிக்க சொல்லி தூண்டி விட்டதும், அவருக்கு பண உதவி செய்ததும் ஓபிஎஸ் அணி ஆட்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் நமது கப்ஸா நிருபரிடம் கூறும்போது: கழகத்துக்காக கணவனை கழட்டி விட்ட கன்னி தாய் தீபா. எங்களது ஜெயலலிதா அம்மாவும் சோபன் பாபுவை கழட்டிவிட்டு அரசியலுக்கு வந்தார். இப்போது தீபாவும் மாதவனை கழட்டி விட்டு விட்டு அரசியலில் குதித்துள்ளார். எனவே அவர் ஜெயலலிதாவுக்கு நிகரானவர் என்று தெரிகிறது.

மேலும் தீபா கப்ஸா நிருபரிடம் கூறுகையில், “வீட்டிலிருந்த பணம் மற்றும் ஆவணங்களை திருடிக் கொண்டு ஓடிய என் முன்னாள் கணவர் மாதவன் பணத்தை திரும்பவும் கொண்டு வந்தால் தான் வீட்டிற்குள் சேர்ப்பேன் என கூறியிருந்தேன். அவர் காதில் வாங்கியதாக தெரியவில்லை. ராஜிவ் காந்தியின் சிதறிய உடலை போஸ்டர் அடித்து அனுதாப வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அத்தையின் பார்முலாவை பின்பற்றி அவரது அப்பல்லோ மரண அனுதாப அலையை பயன்படுத்தி எப்படியாவது வெற்றி பெற்றுவிடலாம் என நம்பிக் கொண்டிருந்த நான் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். அரசியல் கனவு அஸ்தமனமாகி விட்டது. எனவே அரசியலில் தாக்குப் பிடிக்கவும், என்றாவது ஒரு நாள் முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கவும், மோடி ஆதரவில் விரைவில் தமிழ ஆட்சி கவிழ்ந்து முதல்வராகும் வாய்ப்புள்ள பன்னீருடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளேன். அரசனை நம்பி புருசனை கைவிடுவதா என சிலர் கேள்வி எழுப்பினார்கள், எனக்கு புருசனை விட அரசனும், அரசாட்சியும், முதல்வர் பதவியும்தான் முக்கியம். மக்கள் பணத்தை கொள்ளையடித்து அத்தைக்கு ஒரு சின்னம்மா போல் எனக்கு ஒரு உற்ற தோழியை தேடிக்கொண்டு அத்தை போலவே தமிழக மக்களுக்கு வித்தை காட்டுவேன்.” என்று சீறினார்.

பகிர்

There are no comments yet