சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் நிலவரம் ஒரு கலவரமாக உள்ளது அனைவரும் அறிந்ததே. அதிமுக இரண்டாக பிளவு பட்டு சின்னம்மா – ஓபிஎஸ் என அணிகள் உருவாகி, ஆர்கே நகரில் போட்டியிட தயாராகினர். இந்நிலையில் அந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் குழப்பமான சூழல் நிலவிய போது, இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சொன்னார். அதேபோல சின்னம் முடக்கப்பட்டு, ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின் கம்பமும், தினகரன் அணிக்கு தொப்பி சின்னமும் வழங்கப்பட்டது. சின்னம் பிரச்சினை முடிந்த பிறகு நடந்த பணப்பட்டுவாடா தில்லுமுல்லுகளாலும், தேர்தல் நடத்தை விதி மீறல்களாலும் ஆர்.கே நகர் களேபரப்பட்டது. தமிழிசை முந்திக் கொண்டு தனது ஞான திருஷ்டியில் இவற்றையெல்லாம் முன்பே கணித்து ‘தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’ என்று வேட்பு மனு தாக்கல் முடிந்த மறுநாளே சொல்லியிருந்தால். அதுபோலவும் நடந்திருக்கிறது. தமிழிசை தற்போது நடந்துள்ள நடைபெற்றுக் கொண்டிருக்கும் வருமான வரி சோதனைகள் பற்றியும் ஏற்கனவே கணித்துக் கூறினார். அதேபோல் கடந்த 7-ம் தேதி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அவரது உறவினர்களின் வீடுகளில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், கோடிக்கணக்கான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, வருமான வரித்துறையினர், விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். சமக தலைவர் சரத்குமார், ராதிகா வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது. ராதிகாவின் வங்கி லாக்கரும் சீல் வைக்கப்பட்டது. அமைச்சர்கள் அரசியல்வாதிகள் கிலியுடன் வலம் வரும் நிலையில், வருமான வரித்துறை சோதனை ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடந்தால், தமிழக அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இதுவும் நடந்து விடுமோ என அரசியல் நோக்கர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் தமிழிசையை பார்த்து பிரபல ஜோதிடர்களும், கேரள நம்பூதிரிகளும் தொழில் போட்டி அச்சத்தில் உள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.. தமிழிசை, முனிவர்கள் மற்றும் சித்தர்களின் கலைகளான ஞானதிருஷ்டி, கூடுவிட்டு கூடு பாய்தல், நடக்கப்போவதை முன்பே கண்டறிதல், வெற்றிலையில் மை தடவி யூட்யூப் வீடியோ பார்த்தல், கண் பார்வையினாலேயே எதிரிகளை கட்டுப்படுத்தும் நோக்கு வர்மம் போன்ற கலைகளில் சிறுவயது முதலே பயிற்சி பெற்றுக் கொண்ட ரகசிய தகவலை தனது புலனாய்வின் மூலம் உங்கள் நியூஸ் கப்ஸா நிருபர் கசிய விட்டுள்ளார். மருத்துவம் பயின்றபோது மேல்நாட்டு அமானுஷ்ய கலைகளான டெலிபதி, ஹிப்னாடிசம், எக்ஸ்ட்ரா சென்சரி பர்சப்ஷன் என்ற ஈ.எஸ்.பி. போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். கிரமப்புறங்களில் ஓட்டு சேகரிக்க சென்ற போது அங்கு கட்டை உருட்டுவது, கைரேகை பார்த்தல், குறி சொல்வதிலும் பாண்டித்யம் அடைந்துள்ளார். ஒட்டு மொத்த தமிழ்நாட்டு நிகழ்வுகளையும் தன் சி.பி.யு மூளையில் ஸ்டோர் செய்து வைத்துள்ளார். ஒவ்வொன்றாக எடுத்து விடுகிறார். இதனால் தமிழிசை வீட்டு முன் பெண்களும், காவி உடையணிந்த பக்தாள் நூற்றுக்கணக்கனோர் தினமும் திரண்டு அருள்வாக்கு கேட்க டாஸ்மாக் கியூவில் நிற்பது போல் நிற்கின்றனர். ஆர்கே நகரில் பட்டுவாடா செய்யப்பட்ட தொகையை விட அதைக பணம் வசூலாவதாக கப்சா நிருபர் தெரிவித்தார். இது மட்டுமல்லாமல் சின்னம்மாவின் அரசியல் எதிர்காலம் இப்போது மோடி கையில் உள்ளதால், சின்னம்மா பற்றிய தகவல் அறிய சின்னம்மாவின் ஆதரவாளர்கள் தமிழிசை வீடு முன்பு வரிசையில் நிற்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யானை வரும் பின்னே – மணிஓசை வரும் முன்னே என்று மத்திய பாஜக-வின் மாஸ்டர் பிளான்களை தமிழிசை முன்னதாகவே லீக் செய்துவிடுவதாக மோடி தரப்பு சந்தேகிக்கிறது. இது குறித்து, தில்லியில் நடைபெறாத ரகசிய சந்திப்பில் மோடி தமிழிசையை ஏகவசனத்தில் வசைபாடியதாக தெரிகிறது. ‘கஷ்டப்பட்டு பின்வாசல் வழியாக காய்நகர்த்தி தமிழகத்தில் தாமரை பூ பூக்க வைக்க அரும்பாடு பட்டு ரஜினி காலிலெல்லாம் விழுந்து போராடிக் கொண்டிருக்கிறேன் நீ செய்திகளை உடனுக்குடன் முந்தித் தருகிறாயா? இது தொடர்ந்தால் உன்னை நீக்கிவிட்டு, பன்னீர்செல்வம் அல்லது வேறு தலைவரை தமிழக பாஜகவிற்கு நியமித்து உன்னை அரசியல் அனாதை ஆக்கி விடுவேன்’ என்று கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது.

பகிர்

There are no comments yet