சென்னை/புது டெல்லி: ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது. கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். சசிகலா அணியில், 122 எம்.எல்.ஏ.,க்கள், 33 எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, இரு அணியினரும் கோரிக்கை விடுத்ததால், சின்னம் முடக்கப்பட்டது. இரு அணியினரும், தேர்தலில் தனித்தனியே களம் இறங்கினர். ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களே மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் பணப்பட்டுவாடா காரணங்களினால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அதிரடியாக ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். இது களத்தில் இருந்த பல்வேறு வேட்பாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தன. ”தேர்தல் ரத்து என்பது ஜனநாயகப் படுகொலை. இது திட்டமிட்ட நாடகம்” என்று அ.தி.மு.க (அம்மா) வேட்பாளர் டி.டி.வி.தினகரன் கடுகடுத்துள்ளார். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ”ஒரு மாணவன் காப்பி அடித்தார் என்பதற்காக ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வீர்களா? அதுபோலவே ஒருவர் தவறு செய்தால் எப்படி ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்யலாம்” என்று அதிருப்தி கருத்துகளை வெளியிட அ.தி.மு.க (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் ஓ.பி.எஸ் முகத்தில் வருத்தமில்லை. ”வருமானவரித் துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது. விரைவில் மீண்டும் ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும்” என்று உடனடியாக கருத்தும் தெரிவித்தார் ஓ.பி.எஸ்.

தினகரன் தரப்பில் ஓர் ஓட்டுக்கு ரூபாய் 4,000/- என 85 சதவிகித வாக்காளர்களுக்கு பட்டுவாடா நடந்தது. ‘நம்ம கட்சி வாக்காளர்களே பூத்துக்கு வருவங்களான்னு சொல்ல முடியாது. அதனால நம்ம ஆட்களுக்கு நாம கொடுக்கணும்’ என தி.மு.க, 40 சதவிகிதம் அளவுக்கு தலா ரூபாய் 2,000/- பட்டுவாடா செய்தது. ஆனால் ஓ.பி.எஸ் அணி என்ன செய்தது? தினகரன் எவ்வளவு கொடுக்கிறாரோ அதிலிருந்து முடிவு செய்துகொள்ளலாம் என்று தொடக்கத்தில் பொறுமையாக இருந்தவர்கள், அதன்பின் ஓட்டுக்கு ரூபாய் 3,000/- கொடுக்க முடிவெடுத்தனர். 40 சதவிகித வாக்காளர்களுக்கு விநியோகிக்கத் திட்டமிட்டு, நேதாஜி நகர் உள்ளிட்ட சில இடங்களில் குறிப்பிட்ட அளவில் டோக்கன் கொடுக்கப்பட்டிருந்தது. சனி இரவு (08-04-17) அன்று பட்டுவாடா செய்யும் ஏற்பாடுகளை பன்னீர்செல்வம் அணீயினர் செய்தனர் . இந்த நிலையில் தேர்தல் ரத்து ஆகலாம் என்ற சந்தேகங்கள் சனிக்கிழமையில் இருந்து எழ ஆரம்பித்தன. அதனால் பணப்பட்டுவாடாவை நிறுத்திவைத்தனர். ஜி.கே.வாசனுடன் இணைந்து செய்யும் தமது பிரசாரத்துக்குக்கூட நேரத்துக்குப்போகாமல் தள்ளிப்போட்டபடியே இருந்தார் ஓ.பி.எஸ். ஆனால், அன்று தேர்தல் ரத்து செய்யப்படவில்லை. எனவே, சனிக்கிழமை இரவு பிரசாரத்தில் ஆஜரானார் ஓ.பி.எஸ். அதேநேரம், ‘மேலே நான் பேசிவிட்டு வருகிறேன். கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்’ என்று ஆடிட்டரும் துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தியிடமிருந்து ஓலை வந்தது. அதனால், பணப்பட்டுவாடா பணிகளை நிறுத்திவைத்த ஓ.பி.எஸ் அணி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (09-04-17) இரவு தொடங்கும் அந்த பிராக்சன் ஆஃப் செகண்டில் ‘வேண்டாம். நள்ளிரவில் தேர்தல் ரத்து அறிவிப்பு வரலாம். இந்த முறை தவறாது’ என்று ஆடிட்டரிடமிருந்து சிக்னல் வந்தது. அதேபோல தேர்தல் ரத்து செய்யப்பட பணப்பட்டுவாடாவை அமல்படுத்தவில்லை ஓ.பி.எஸ் அணி.

ஆனால் மத்தியில் ஆளும் பாஜகவின் கணக்கு வேறு மாதிரியாக இருந்தது.ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்திய வெற்றிடத்தில் ஆட்சிக் கலைப்பு என்பது நிச்சயம் தமக்குச் சாதகமாக அமையாது. அதேநேரம் தமது கொள்கைக்கு நேரெதிரான தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையும் என்பதை உணர்ந்திருந்தது பி.ஜே.பி. தற்போதையச் சூழலில் தேர்தலைச் சந்தித்தால் வெற்றியைப் பெற இயலாது. கடந்த தேர்தலில் வெறும் ஒன்றேகால் சதவிகிதத்தில் ஆட்சியதிகாரத்தை இழந்த தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புண்டு. ஆக, தமது கட்சியைச் சித்தாந்தரீதியாக கீழ்மட்டக் கிளையில் இருந்து வலுப்படுத்த கால அவகாசம் தேவை. அதன்மூலம் தமிழ்நாட்டில் முக்கியச் சக்தியாக மாற வேண்டும். அதுவரை தமது கோட்பாடுகளுக்கு விரோதமில்லாத ஒரு பொம்மை அரசாங்கம் வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஓ.பி.எஸ்ஸை தஞ்சாவூர் பொம்மைபோல பயன்படுத்த விளைந்தது பி.ஜே.பி. ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட அவகாசத்தால் அவரால் தனிப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுவர முடியாததால், இறுதியாகக் கவர்னர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைத்தார்.

ஓபிஎஸ்சை நம்பி பிரயோஜனம் இல்லாததாலும், தீபாவின் நடவடிககைகள் சரியில்லாததாலும், சசிகலாவுடன் சமரசம் பேசி ஒன்றிணைந்த அதிமுக – பாஜக கூட்டணிக்கு மோடி விரும்புவதாக ஆடிட்டர் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இரு அணிகளும் இணைவதில் சிரமம் இல்லை என, பன்னீர் அணியினர் தெரிவித்துள்ளனர். இதன் படியே மோடியை தம்பிதுரை.சந்தித்தார். பின்னர் தினகரன் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்என்று தினகரனுக்கு உத்திரவிட்டுள்ளார் தம்பிதுரை.

There are no comments yet