சென்னை: ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகாரைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் கடந்த 7-ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே நாளில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமக தலைவர் சரத்குமார், அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கரின் உதவியாளர்களில் ஒருவரான திருவல்லிக் கேணியைச் சேர்ந்த நயினார் முகம்மது என்பவர் வீட்டில் சுமார் ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் மொத்தம் ரூ.5 கோடியே 50 லட்சம், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது. இவை அனைத்தும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்தன. மேலும், ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு கோடிக் கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதும், சம்பவ இடத்தில் பறிமுதல் செய்யப்பட்டதும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்குவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இவ்வளவு 2000 நோட்டுகள் எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இது தொடர்பாக வருமான வரித் துறை மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய 3 அமைப்புகளையும் இந்த விசாரணையில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ரூ.89 கோடி பணப் பட்டுவாடா தகவல்களை வருமான வரித் துறையினர் கொடுத்தனர். அதன் பேரில் அமலாக்கத்துறை விரைவில் விசாரணையை தொடங்க உள்ளது. அதுபோல புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்த புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை யாராவது பதுக்கி வைத்திருந்தால், அதுபற்றி விசாரணை நடத்த சிபிஐக்கு சிறப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கியிருப்பது கவனத்துக்குரியது.

இது குறித்து விஜயபாஸ்கர் கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில், “சின்னம்மா சொல்படித்தான் ஆர்கே நகரை ‘4-K ‘ நகராக்க, ஒரு ஓட்டுக்கு 4000 வீதம் இரண்டிரண்டு நோட்டுகளாக பணப் பட்டுவாடா செய்ய ஏதுவாக புதிய 2000 நோட்டுக்களாக வாங்கி தினகரனிடம் கொடுத்தேன். இதற்காக ஏடிஎம் களில் நிரப்ப ரயிலில் வந்த புதிய நோட்டுகளில் சேகர் ரெட்டிக்கு புதிய 500 கட்டுகள் கொடுத்தது போக வங்கி அதிகாரிகளிடம் கெஞ்சி புதிய 2000 நோட்டுகளை வாங்கிப் பதுக்கி வைத்திருந்தேன். வருமான வரித் துறை மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய 3 அமைப்புகளையும் இந்த விசாரணையில் ஈடுபடுத்த மத்திய அரசு சதித்திட்டம் தீட்டியுள்ளது. எல்லோரும் சேர்ந்து அம்மாவை அப்பல்லோவில் நிரந்தரமாக தூங்க வைத்தபோது அதிமுக ஒற்றுமையாக செயல்பட்டது. இப்போது தேர்தலில் வென்று கட்சியை கைப்பற்றுவது யார் என்ற போட்டியில் என்னை மட்டும் மாட்டிவிடப் பார்க்கிறார்கள். அப்படிச் செய்தால் நடக்கிறதே வேறு. ஆட்சியையே கவிழ்த்துவிடுவேன். ஒவ்வரு ஆய்வின் முடிவில் கூட்டம் போட்டு என்ன செய்ய வேண்டும் என்று மத்திய அரசு முடிவு எடுக்குமா என எனக்குத் தெரியவில்லை. பாஜகவின் சதிகார சகாக்களான ஓ.பி.எஸ் அணிக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.” என்றார். கப்சா நிருபர் இது குறித்து கூறும்போது ‘எப்படியாவது உண்மைகள் வெளியே வருமா அல்லது இது வெறும் மிரட்டலுக்கு தானா என பொறுத்திருந்த் தான் பார்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet