சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக செயல்பட எண்ணி மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனை கூட்டத்தை அடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளார்களிடம் பேட்டியளித்தார்: “ஜெயலலிதா வழிநடத்திய கட்சியையும், அவரது பொற்கால ஆட்சியையும், வருகிற 4 வருடங்கள் மட்டுமல்ல ஆண்டாண்டு காலமும் தமிழகத்தில் தொடர்வதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்,பிக்கள், மாநில-மாவட்ட நிர்வாகிகள் என அனைவருமே கூடி, ஒருமித்த ஒரு ஒட்டுமொத்த கருத்தை முடிவு செய்திருக்கிறோம். அது என்னவென்றால் அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களின் விருப்பமும், தமிழக மக்களின் விருப்பமும் கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல் செயல்படுவது. டிடிவிதினகரனை சார்ந்த குடும்பத்தை முழுமையான அளவு ஒதுக்கிவிட்டு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துங்கள் என்பது தான் ஒட்டுமொத்த தொண்டர்களின், தமிழக மக்களின் விருப்பம். ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம். அதிமுகவை வழிநடத்த விரைவில் குழு அமைக்கப்படும்.

ஒதுக்கப்பட்டதாக கூறிய நபர்களின் சசிகலாவும் அடங்குவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய ஜெயகுமார், இந்த இயக்கத்தை ஜெயலலிதா ஒரு மாபெரும் இயக்கமாக மாற்றி காட்டினார். இந்த சூழ்நிலையை பொறுத்தவரை கட்சியை வழிநடத்துவதற்கு, காப்பாற்றுவதற்கு ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றார். ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறினார். நாங்களும் தயார் என்று கூறினோம். நாளைக்கே அவர் வந்தால் கூட பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அவரது கருத்தை வரவேற்கிறோம் என கூறிஉள்ளார் ஜெயகுமார். இது குறித்து கப்ஸா நிருபரிடம் மேலும் தெரிவிக்கும் போது, ஓபிஎஸ் அணி தலைவர்களுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம், ஓபிஎஸ் அணியின் முக்கிய தலைவரான RSS குருமூர்த்தியுடன் ரகசிய ஆலோசனை நிகழ்த்தி, மத்திய அரசிடம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு சொல்ல வேண்டியதை எழுதி வாங்கிக் கொண்டு ஒப்பிக்கிறோம். அவ்வளவே. அண்ணன் குருமூர்த்தியின் கூற்றுப்படி 1972-ல் திமுக எப்படி இருந்ததோ அப்படி இருக்கிறது அதிமுகவின் தற்போதைய நிலை. கருணாநிதியின் குடும்ப அதிகாரத்தை அப்போது எம்ஜிஆர் ஏற்கவில்லை. இதையடுத்து எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். எம்ஜிஆருக்கு பின்னர் தொண்டர்கள் திரண்டர். ஆனால் கருணாநிதியுடன் தலைவர்கள் இருந்தனர். இதேபோல் 1987-ம் ஆண்டு ஜெயலலிதா ஒருபக்கம், தலைவர்கள் ஒருபக்கம் நின்றனர். பின்னர் ஜெயலலிதாவை தொண்டர்கள் ஏற்றனர். தற்போது ஜெயலலிதா இல்லாத நிலையில் ஒரு தலைவர் தேடப்படுகிறார். அதற்காக ஜெயலலிதா உடன் இருந்த சசிகலாவை தலைவராக தேடுவதை தொண்டர்கள் ஏற்கவில்லை. அவரிடமிருந்து முளைத்த புற்றீசல் தினகரனை பணம் கறக்கும் மிஷினாகவே மக்கள் ஆர்கே நகரில் பார்த்தனர். அதிமுகவின் உட்கட்சியில் தலையீட்டால் பாஜகவுக்கு நல்ல லாபம் இருக்கிறது. மற்ற கட்சிகள் நலிவதால் தங்கள் கட்சி வளரும் என பாஜக திடமாக நம்புகிறது. மத்திய பாஜக அரசு ‘மோடி மஸ்தான்’ ஓபிஎஸ்ஸை ஆதரிப்பதாகவும் சின்னம்மா தினகரன் தரப்பை வெறுப்பதாகவும் சொன்னதால் தினகரன் குடும்பத்தை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்க நடவடிக்கை எடுத்து ஒரே குட்டையில் ஊறும் மட்டைகளாக இணைந்து ஊழல் பயணத்தை தொடர திட்டமிட்டுள்ளோம் என்றார்.

There are no comments yet