சென்னை: முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம், கட்சிப் பெயர் ஆகியவற்றை மீட்பதற்காக அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஆட்சியை தன் வசம் வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க. அம்மா அணியினர் எந்த நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சசிகலா குடும்பம் இருக்கும் வரை சமரசத்துக்கு இடம் இல்லை. அவர்கள் விலக வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக பாராளுமன்ற துணை சபா நாயகர் தம்பித்துரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கைதிற்கு பயந்து பெங்களூரில் பதுங்கியுள்ள தினகரனை சந்தித்து பேசினார்கள். பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், “அ.தி.மு.க. இணைப்பு முயற்சிக்கு தினகரன் வரவேற்பு தெரிவித்ததாக கூறினார். வெற்றிவேல் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், “அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்காக சசிகலா, தினகரன் குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும் என்ற நிபந்தனையை தினகரன் ஏற்க மறுத்து விட்டார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சர் மற்றும் 6 முக்கிய அமைச்சர் பதவி கேட்டு நிபந்தனை விதித்து இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சி பெயரை மீட்பதற்காக அ.தி. மு.க. அணிகள் இணைப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டதுடன் தாங்கள் விதித்த தினகரன் குடும்ப நீக்கம் போன்ற நிபந்தனைகள் தொடர்பாக அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. முக்கிய நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் சந்தித்து பேசும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதற்காக ஓ.பி.எஸ். அணி சார்பில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. இதில் கட்சியையும், ஆட்சியையும் எவ்வாறு வழி நடத்திச் செல்வது என்று ஆலோசிக்கப்படுகிறது. கட்சியை வழி நடத்திச் செல்ல இரு அணியினரும் அடங்கிய நிர்வாக குழு அமைப்பது குறித்தும் பேச்சு நடத்துகிறார்கள்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். முன்னதாக ஜெ சாவில் மர்மம் இருப்பதாகவும், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா உடல் நலம் குன்றி அப்பல்லோவில் இருந்தபோது பக்கத்தில் இருந்தவர்களுள் ஒருவரான பன்னீர்செல்வம் இவ்வாறு கூறிவருவது கேலிக்கூத்தாக பார்க்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் மற்றும் சசிகலா குடும்ப ஆட்சியை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க போவதாக சொன்ன ஓ.பன்னீர்செல்வம் முதலவர் பதவியா? இல்ல ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணையா? என்ற கேள்வி எழுந்தபோது பதவியே முக்கியம் என தன் ஆதரவாளர்களிடம் பன்னீர்செல்வம் ரகசியமாக் கிசுகிசுத்ததை கப்சா நிருபர் கண்டறிந்துள்ளார். பன்னீர்செல்வம் மேலும் கப்சா நிருபரிடம் கூறுகையில்: “அந்த அம்மா உயிரோடு ஹாஸ்பிடலில் இருந்தபோது இவர் வாயே திறக்காமல் இருந்தேன். அந்த அம்மா இறந்து நான் முதல்வராக இருக்கும்போதும் வாயை பொத்திகிட்டு இருந்தேன். பதவியை பறித்தவுடன் உடனே அந்த அம்மா மேல் அக்கறை பாசம் வந்து உண்மையை சொல்ல உண்ணாவிரதம் இருக்க தயாரானேன். அதற்குள் ஆர்கே நகர் தேர்தல் வந்ததால், சவப்பெட்டி பிரசார பிசினசில் பிசியாகி விட்டேன். ஏற்கனவே மூன்று முறை முதல்வராக இருந்த நான் எடப்பாடிக்கு கீழ் துணை முதல்வராக இருக்க முடியாது. எனவே என்னை மீண்டும் முதல்வராக்கினால் ஜெ சாவில் எங்கள் சந்தேகம் நீங்கி புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வோம். அல்லது மோடியுடம் பேசி நான் ஜனாதிபதியாகவும், எடப்பாடி கவர்னராகவும் பதவி ஏற்க திட்டமிட்டு எங்கள் அரசியல் நாடகங்களை அரங்கேற்றியும் இரட்டை இலையை மீட்டவுடன் சின்னம்மா அணிக்கு அழைப்பு விடுத்து, தலைவாழை இலையில் பிரியாணி விருந்து பறிமாறி கூவத்தூர் பாணியில் மெகா பார்ட்டி வைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

பகிர்

There are no comments yet