சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ‘ஜெயலலிதா’-சசிகலா உரையாடல் வீடியோவை விரைவில் வெளியிடுவேன்’ சசிகலா சகோதரர் திவாகரனின் மகன் மிரட்டல் விடுத்து உள்ளார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிய வீடியோ உரையாடலை விரைவில் வெளியிடுவேன் என்று பேஸ்புக்கில் சசிகலா சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் திவாகரன் கூறியுள்ளார். ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அவரின் மரணம் தமிழகத்தை உலுக்கியது. அவர் மறைந்து 2 மாதத்தில் அ.தி.மு.க., சசிகலா அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் அணியாகவும் இரண்டாக உடைந்தது. ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் பன்னீர் அணி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.இந்தநிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் தனது பேஸ்புக்கில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு கருத்தை எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது “கொலை பழி சுமத்தியும் அம்மா சிகிச்சை படத்தை வெளியிடவில்லை. காரணம், பச்சை கவுன் உடையில், அம்மாவை எதிரிகள் பார்க்கக்கூடாது என்பதே ஒரே காரணம். இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல். சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே பூ உலகை ஆளுவதற்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம். ஆனால், ஓ.பி.எஸ்., கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மாவை பிணப்பெட்டியில் வைத்து ஓட்டு கேட்கிறார். உண்மை வலிமையானது. ஒரு நாள் புரட்சித்தலைவி அம்மாவும், தியாக தலைவி சின்னம்மா(சசிகலா) இருவரும் ஆஸ்பத்திரியில் நடத்திய உரையாடல் வீடியோ வெளிவந்தால்…? பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் இவர்களை என்ன செய்யலாம்…? அந்த நாள் மிக விரைவில்.” இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். பேஸ்புக்கில் கடந்த 7-ந்தேதி ஜெயானந்த் திவாகரன் இதை எழுதியுள்ளார். தற்போது மீண்டும் பேஸ்புக்கில் அந்த கருத்தை எழுதியுள்ளார். இதன்மூலம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, அவரும் சசிகலாவும் பேசிய உரையாடல் அடங்கிய வீடியோவை ஜெயானந்த் விரைவில் வெளியிடுவார் என்று தெரிகிறது.

இது குறித்து நம் கப்சா நிருபர் பேஸ்புக் உள்டப்பியில் வந்த ஜெயானந்த் கூறியதாவது: பாடகி சுசித்ரா தனுஷ்/அனிருத் தரப்பை பழிவாங்க சுசி லீக்ஸ் என்ற ட்விட்டர் அக்கவுண்டை பயன்படுத்தி ஆபாச வீடியோவை வெளியிட்டது போல், ‘சசி’ லீக்ஸ் என்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாகவும், அதில் முதலில் அப்பல்லோ ஆதாரங்களை வெளியிட்டு பிரபலமடைந்ததும், கூவத்தூர் பங்களா குடி கும்மாளம், ஆர்கே நகர் பணப் பட்டுவாடா, பன்னீரின் சவப்பெட்டி பிரசாரம், போன்றவற்றை அடுத்தடுத்து வெளியிடப்போவதாகவும் தெரிவித்தார். பின்னர் சுசி லீக்ஸ் போலவே கிளு கிளு படங்களை வெளியிட திட்டம் வைத்துள்ளதாகவும், நல்ல ரேட் கிடைத்தால் சுந்தர் பிச்சை, மார்க் சுக்கர்பெர்கிடம் விற்றுவிடப் போவதாகவும் தெரிவித்தார். இதன்மூலம் பன்னீர், சசி, தினகரன் தீபா அணிகளைத் தொடர்ந்து, ஐந்தாவதாக திவாகரன் அதிமுக அணி உருவாவது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதை அறிந்த சின்னம்மா பெங்களூரு ஜெயிலில் லேப்டாப்பை சார்ஜ் போடாமலேயே வைத்திருப்பதாக கப்சா நிருபர் மேலும் தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet