சென்னை: வாழும் கலை அமைப்பின் சார்பாக கடந்த ஆண்டு ‘உலக கலாசார விழா’ மோடி புடைசூழ யமுனை நதிக்கரையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் முடிவில் யமுனை நதியின் சூழல் சீர்கெட்டுவிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. புகாரினை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் யமுனை நதியின் சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சீர்கேட்டை சரி செய்ய 10 ஆண்டுகளும் 42 கோடி ரூபாயும் பிடிக்கும் என்று பசுமைத் தீர்ப்பாயம் நிபுணர்கள் குழு மீட்பு அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பசுமைத் தீர்ப்பாயத்தின் குற்றச்சாட்டுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அளித்த பதில் தீர்ப்பாயக்குழுவை கோபமடையச் செய்துள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் மேலேயே குற்றம் சுமத்தும் ரவிசங்கர், யமுனை நதி அவ்வளவு தூய்மையானது, சீர்கெட்டுவிடும் என்றால் நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பே தடுத்திருக்க வேண்டியது தானே, எனக் கூறியது தான் தற்போது தீர்ப்பாயத்தை கோபப்படுத்தி உள்ளது. ரவிசங்கரின் பதிலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதிபதி, ’ரவிசங்கர் உங்களுக்கு சிறிதளவு கூட பொறுப்புணர்ச்சியே இல்லை. எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற சுதந்திரத்தை தங்களுக்குக் கொடுத்தது யார். உங்கள் செயல் அதிர்ச்சியளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

சற்றும் திமிரை குறைத்துக் கொள்ளாமல் ரவிசங்கர் கப்சா நிருபரிடம் தெரிவித்ததாவது: “என்னைக் கைது செய்த்து சிறையிலோ அல்லது நீதிமன்ற காவலில் வைத்தோ விசாரித்தால் ஒழுங்கான பதில் சொல்லியிருப்பேன் இப்படிகேட்டால் பதில் அப்படிதான் வரும்.. மத்தியில் ஆளும் அதிகார வர்க்கமும் பணபலமும் இருக்கின்ற வரை எனக்கென்ன கவலை? இருப்பினும் இதை ஒரு மானப்பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அப்படி ஒரு அழிவை நிகழ்த்தவில்லை என்று கூடிய சீக்கிரமே அரசையும் ஏற்கச் செய்வேன். அல்லது யமுனையில் செடி கொடி நட சில கோடி ரூபாய் பிச்சை அளிப்பதாக கூறி முடிக்க பார்ப்பேன். பாழ்பட்ட யமுனை நதிக்கரையில் பாகுபலியின் பிரம்மாண்டத்துக்கு நிகராக நிகழ்ச்சி நடத்திய எனக்குத்தான் மத்திய அரசு தேசிய விருது கொடுக்க வேண்டும். மோடி கலந்து கொண்டு ஆசீர்வதித்த நிகழ்வு என்பதால் டபுள் ஸ்ரீ ரவி சங்கர் எனும் கார்ப்பரேட் சாமியாரான என் பக்தர்கள் கொடுக்கும் காசுக்கு மேலேயே கூவுவார்கள். அம்பலமாகும் என் போன்ற சாமியார்கள் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை. எல்லா இன்பங்களையும் காசு கொடுத்துத் துய்க்கும் நடுத்தர வர்க்கம் ஆன்மீகத்தையும் அப்படி நுகர்வதற்குப் பழக்கி விடப்பட்டிருப்பதால் அருளாசி வழங்க நமட்டுச் சிரிப்புடன் எப்போதும் வாழும் கலை அமைப்பில் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

பகிர்

There are no comments yet