சென்னை: கட்சியைக் காப்பாற்றவும் இரட்டை இலையை மீட்டெடுக்கவும் அதிமுக இரு அணிகள் இணையும் முயற்சியில் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகி வருவதும், மாற்றி மாற்றி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதும், அறிக்கைகள் விடுவதும் வழக்கமாகி விட்டது. அதிமுகவில் பிளவும், சேர்ப்பும் தொன்று தொட்டு வரும் நிகழ்வாகும். எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜானகி ஜெயலலிதா என இரு அணிகள் உருவாகின, பின்னர் ஜானகி விலகிக் கொண்டார். ஜெயலலிதா கட்சியை வழிநடத்தினார். ஆனால் தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் சுலபமாக ஒன்றிணைவது சாத்தியப்பட அதிக காலம் பிடிக்கிறது. அதாவது விவாகரத்தான தம்பதிகள் மீண்டும் ஒன்றிணைவது போல சிக்கலான தருணமாக உள்ளது எனலாம். சசிகலா தன்னைத் தொந்தரவு செய்யாத வரையிலும் அவரைப் பற்றி ஓ.பன்னீர்செல்வமும் கவலைப்படவில்லை. சசிகலா பொதுச் செயலாளராக விரும்பியபோது அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவரே பன்னீர்செல்வம்தான். ராஜினாமா கடிதம் கொடு என்றதும் பணிவோடு சமர்ப்பித்தவரும் அவர்தான். பன்னீர்செல்வத்தைப் போன்ற வெளிப்படையான அவமானம் எதுவும் அவருக்குப் பின் வந்த முதல்வர் பழனிசாமிக்கு இல்லை. ஆனாலும் அவரும் மூத்த தலைவர்களும் சசிகலா குடும்பத்தினர் கட்சியையும் ஆட்சியையும் விட்டு விலகி இருக்க வேண்டும் என்னும் தீர்மானத்தை இப்போது பன்னீர்செல்வத்தின் போக்கில் எடுத்திருக்கிறார்கள். ஆர்.கே. நகர் தேர்தலின்போது கிடைத்த அனுபவங்கள், துரத்தும் வழக்குகள், மாறும் களச் சூழல் ஆகியவற்றின் விளைவாக “கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லது என்றால் நான் ஒதுங்கிவிடத் தயார்” என்று டிடிவி தினகரனும் அறிவித்துவிட்டார். தினகரன் தாமாக முன்வந்து கட்சியை விட்டு விலகுவதில் உள்குத்து இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். அது இரட்டை இலையை மீட்டவுடன் மீண்டும் தினகரன் கட்சிக்குள் நுழைந்து ஓபிஎஸ் சை ஓரம் கட்டிவிடுவாரோ என்ற பயம் தான்.

தினகரனுக்கு 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவிருப்பதால், எடப்பாடி பழனிசாமி தினகரனை அறவே ஒதுக்க முடியாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அச்சத்தில் உள்ளனர். சசிகலா குடும்பத்தின் பிடியில் இருக்கும் வரை யாருக்கும் எந்தப் பதவியும் உத்தரவாதமல்ல என்பதைப் பன்னீர்செல்வம், பழனிசாமி மட்டுமல்லாமல் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். பொது வெளியில் சசிகலாவின் இடம் என்ன என்பதை எல்லோரும் ஆர்.கே.நகரில் கண்ணாரக் கண்டுவிட்ட சூழலில், சசிகலா குடும்பத்துக்கு எதிரான காய் நகர்த்தல்கள் தொடங்கின. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசின் புலனாய்வு அமைப்புகளும் வழக்குகளும் தினகரனைத் துரத்தத் தொடங்கியதும், சசிகலா குடும்பத்தைத் துறக்கும் முடிவுக்கு நேரடியாக வந்துவிட்டார்கள். தமிழகத்தில் ஒரு பொம்மை அரசு வேண்டும். அந்த பொம்மையை ஆட்டுவிக்கும் கரங்களாகத் தாங்களே இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதிமுகவினர் எப்போதுமே பொம்மையாக இருந்து பழகியவர்கள்தான். நேற்றுவரை அந்தப் பொம்மைகளை ஆட்டுவித்த கரங்கள் இன்று இல்லாதுபோய்விட்ட நிலையில், அடுத்து வந்த கரங்களும் பலவீனமாகிவிட்ட சூழலில் பாஜக இப்போது அந்த இடத்தை நோக்கி நகர்கிறது.

இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால்தான் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை மீட்க முடியும். சசிகலாவின் ஆசீர்வாதத்துடன் பதவியேற்ற பன்னீர்செல்வம், சசிகலாவை அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்ததோடு அல்லாமல், இன்று ஒரு மக்கள் தலைவராகவும் உருவெடுத்து நிற்கிறார். இன்னொருபுறம் பழனிசாமி உருவெடுக்கிறார். எந்தக் காரணத்தினால் ஒன்று சேர்ந்தாலும் கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்றிய பிறகு அதிமுக தன்னிச்சையாகச் செயல்படும் மாநிலக் கட்சியாக நடந்துகொள்ள முனையலாம். பாஜக சார்ந்த கட்சியாக அதிமுக மாறினால், அது அதிமுகவின் செல்வாக்கைக் காணாமல் ஆக்கிவிடும். இதனால் பன்னீர்செல்வமும் பழனிசாமியும் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்று பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பிரிந்த தம்பதிகளை சேர்த்து வைக்கும் குடும்ப நல நீதிமன்றத்தை நாடி தங்களுக்குள் உள்ள குடுமிபிடி சண்டையை தீர்த்துக் கொள்ளவும், கணவன் மனைவிக்கிடையே உள்ளதுபோல் தங்களுக்கு இடையே உள்ள கருத்துவேறுபாடுகளைக் களையவும் இரு அணியினர் கோரிக்கை வைத்தனர்.. விவாகரத்தான தம்பதிகள் மீண்டும் இணைவது போல் உள்ளதே என நீதிபதி கேலிசெய்து சிரித்தாராம். இரட்டை இலையை மீட்டவுடன் மீண்டும் கட்சியில் தினகரனையும் சின்னம்மாவையும் இணைத்துக் கொண்டு கூட்டுக் குடும்பமாக வாழவும் அதிமுகவில் எதிர்கால திட்டம் உள்ளது என இரு அணிகளும் உறுதியளித்த நிலையில், மனுவை ஏற்றுக் கொண்ட கப்சா நீதிபதி அறிவுரை கூறி அனுப்பியுள்ளார். கே.பி.முனுசாமி மற்றும் ஜெயக்குமார் அளித்த பேட்டிகளால் இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பெரிய முட்டுக்கட்டை விழுந்த நிலையில், தற்போது மீண்டும் சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக கப்சா குடும்ப நல நீதிமன்றம் தெரிவிக்கிறது.

மற்ற ஆதாரங்கள்Credit: India Today
பகிர்

There are no comments yet