சென்னை: நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் ஏராளமான மதுபானக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் மதுபானக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அணி திறண்டு போராடுவதும், போலீஸ் கன்னத்தில் அறைவது போன்ற வன்முறை வெறியாட்டாங்களும் அரங்கேறி வருகின்றன. நீதி மன்ற உத்தரவுப்படி மூடிய மதுக்கடைகளை திறப்பதற்கு வசதியாக மாநில நெடுஞ்சாலைகள், நகரங்களுக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற முயற்சி நடக்கிறது. இதை அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, பாமக ஆகிய கட்சிகள் முறையீடு செய்தன. இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் தலைமையில் நடக்கும் வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, மாநில நெடுஞ்சாலைகள், நகரங்களுக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றுவதற்குக் காரணம் மேம்பாட்டுத் திட்டங்களை செயல் படுத்துவதற்காகவே தவிர மதுக்கடைகளை திறப்பதற்காக அல்ல என வாதிட்டார். திமுக தரப்பில் வழக்கறிஞர் வில்சனும், சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை சார்பில் அதன் தலைவரும், பாமக வழக்கறிஞருமான கே.பாலுவும் தத்தம் வாதத்தை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட அமர்வு, “மாநில நெடுஞ்சாலைகள், நகரங்களுக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தமிழக அரசுக்குத் தடையில்லை. ஆனால் மாற்றப்பட்ட உள்ளாட்சி சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்கமாட்டோம் என அரசு உத்தரவாதம் தர வேண்டும்” என்றது. இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் இதுதொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசித்து முடிவை அறிவிக்கிறோம் என்றார். உத்தரவாதம் தரப்படாத நிலையில், மறு உத்தரவு வரும்வரை தமிழகம் முழுவதும் புதிதாக மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கிறோம் என நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் ஆளும் அதிமுக அரசு அதிருப்தி அடைந்துள்ளது. திமுக பாமக சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் “மதுக்கடைகளை திறப்பதற்காக இவ்வாறு உள்ளாட்சி சாலைகளாக மாற்றுவது சட்டவிரோதமானது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல். இதுதொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யவுள்ளோம். ஆகவே அதை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் வேடிக்கை பார்க்கப் போன போது நைசாக கேஸ் கட்டை ‘லவட்டிக்’ கொண்டு வந்த நமது கப்சா நிருபர் தெரிவித்ததாவது: ‘மதுக்கடைகளை அடைப்பதால் திமுக அதிமுக என அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளுக்கும் நட்டம் தான். ஆளாளுக்கு சாராய ஆலைகள் நிறுவி இருப்பதே இதற்கு காரணம். மிடாஸ் கோல்டன் டச் டிஸ்டில்லரீஸ் என்ற மதுபான தொழிற்சாலை ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதல்வரான 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் சிறுமாத்தூர் கிராமத்தில் மிடாஸ் தொழிசாலை உள்ளது. திமுக ஆட்சியிலும் கூட மிடாஸ் தொழிற்சாலையில் இருந்து ‘சரக்குகள்’ தமிழக டாஸ்மாக்குகளுக்கு கொள்முதல் செய்யப்படும். 1948ஆம் ஆண்டிலிருந்து 23 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைமுறையில் இருந்து மதுவிலக்கை, 1971ஆம் ஆண்டு கருணாநிதி ரத்து செய்தது தான் இன்றைய அவல நிலைக்கு காரணம். சசிகலா உறவினர்களால் நடத்தப்படும் கோல்டன் மிடாஸ் தவிர 30 ஆண்டுகளில் புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்ற நிலையில், அதை உடைத்து தி.மு.க.வைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள் கருணாநிதி கதை வசனத்தில் உளியின் ஓசை திரைப்படம் தயாரித்தவர், கலைஞர் தொலைக்காட்சி தொடங்க உதவி செய்தவர் உள்ளிட்ட 5 பேருக்கு புதிய மது ஆலைகளை அமைக்க அனுமதி அளித்து அடுத்த பாவத்தையும் செய்தவர் தான் கருணாநிதி.
தி.மு.க. பிரமுகர்களின் ஆதரவுடன் நடத்தப்படும் மது ஆலைகளான எஸ்.என்.ஜே., கல்ஸ், கோல்டன் வாட்ஸ், எலைட், எம்பீ, அப்பல்லோ, ஏ.எம். போன்ற நிறுவனங்களிடம் இருந்து 4.08 கோடி பெட்டிகள் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 16 ஆயிரம் கோடி ரூபாய். அதாவது மொத்த விற்பனையில் சரிபாதி. இதில் தற்போது மிடாஸ் முன்னிலை வகிப்பதால் மரம் வெட்டி ராமதாஸ் தனது வழக்கை வாபஸ் வாங்க பேரம் பேசி வருவதாகவும், மிடாசும் ராமதாசும் சமரசம் ஆகும் மதுக்கடைகளை திறக்கவிடாமல் செய்யவே இந்த நாடகம் அரங்கேறியுள்ளது எனவும் கூறினார். மக்கள் சேவை செய்யும் அரசியலைக் கொண்டு ‘குடி’ மக்களின் தேவையை நிறைவேற்றிய திராவிட கட்சிகளின் தொண்டுதான் மக்கள் தொண்டு என்று அங்கலாய்த்தார் கப்சா நிருபர்.
There are no comments yet
Or use one of these social networks