சென்னை: அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் மூலம் இந்திய தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க.(அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த 25–ந்தேதி கைது செய்தனர். லஞ்ச பணம் கொடுக்க உடந்தையாக இருந்த டி.டி.வி.தினகரனின் நெருங்கிய நண்பரான மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டுவதற்காகவும், யார்–யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து விசாரிப்பதற்காகவும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டி.டி.வி.தினகரனையும், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர்.

அதன்படி டெல்லி குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் சஞ்சய் ஷெராவத் தலைமையிலான போலீஸ் படையினர் கடந்த 27–ந்தேதி டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனாவை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். அன்றைய தினம் பெசன்ட் நகர் கற்பகம் கார்டன் பகுதியில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லம், அலுவலகம், அண்ணாநகர் சாந்திகாலனியில் உள்ள மல்லிகார்ஜுனா வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தி, டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்காக நேற்று மாலை 5 மணியளவில், டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் சென்னை ராஜாஜிபவனில் இருந்து அழைத்துக்கொண்டு சென்னை விமான நிலையம் புறப்பட்டனர். டி.டி.வி.தினகரன் இருந்த வாகனத்தின் முன்பும், பின்பும் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகனங்களில் சென்றனர். பின்னர் அவர்கள் விமானம் மூலம் சென்னையில் இருந்து இரவு 7.40 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் நமது கப்ஸா நிருபருக்கு பேட்டியளித்த டெல்லி உதவி கமி‌ஷனர் சஞ்சய் ஷெராவத் கூறும்போது: எல்லாம் திட்டமிட்டபடியே நடக்கிறது. தினகரனுக்கு பாகிஸ்தான் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பா என்றும் விசாரித்து வருகிறோம். அவரது வீட்டில் ஒரு தொப்பி போட்ட பாய் இருந்ததை பார்த்தோம், அந்த விபரத்தை உடனே பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம், பின்னர் மோடி உத்திரவின் பேரில் தினகரன் மீது பயங்கரவாத தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றார். அதிர்ச்சியடைந்த கப்ஸா நிருபர் தினகரன் வீட்டை தொடர்பு கொண்டு அவரது மனைவி அனுராதாவிடம் கேட்டபோது: பக்கத்து வீட்டு பையன் இங்கே வந்து விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்த டெல்லி போலீஸ் ‘ஹூ இஸ் திஸ் பாய்’ என்று கேட்டனர், எனக்கு வேறொன்றும் தெரியாது என்று கூறினார்.

There are no comments yet