சென்னை: இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி இருக்கும் படம் ‘பாகுபலி 2’. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ராஜராஜன் வெளியிட்டுள்ளார். விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது ‘பாகுபலி 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்த எந்தப் படமும் செய்யாத சாதனையை இப்படம் செய்துள்ளது. இந்திய திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் ‘பாகுபலி 2’ பார்த்துவிட்டு, படக்குழுவினருக்கும் இயக்குநர் ராஜமெளலிக்கும் தங்களுடைய வாழ்த்துகளை சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்கள். 2017ம் ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் ‘பாகுபலி 2’ இடம்பெற்றுள்ளது. மேலும், மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பு மற்றும் கிடைத்திருக்கும் வரவேற்பு ஆகியவற்றைக் காணும் போது கண்டிப்பாக முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தும் என தெரிவித்தார்கள்.

இந்தியளவில் ஆந்திரா – தெலுங்கானா இரண்டிலும் சேர்த்து 45 கோடி, இந்தி – 34 கோடி, தமிழ்நாடு – 13 கோடி, கர்நாடகா – 9 கோடி, கேரளா – 5 கோடி என மொத்தமாக 106 கோடி வசூல் செய்திருக்கும் என தெரிவித்துள்ளார்கள். அதிகாரப்பூர்வ கணக்குகள் விரைவில் வெளியாகவுள்ளது. ‘பாகுபலி’ ஒரே கதைதான். ஏன் அதை இரண்டு பாகமாக வெளியிட முடிவு செய்தீர்கள்? என்று இயக்குனர் ராஜமவுலியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என்றுதான் தொடங்கினோம். ஒரு கட்டத்தில் போதிய பணமின்றி, ஒரு பாகத்தை மட்டும் தயார் செய்து வெளியிட்டு, அதில் வந்த பணத்தை வைத்து 2-ம் பாகத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினோம். முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போதே, ஒரு அரங்கை அமைத்து அதில் படமாக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் எடுத்துவிட்டோம். அப்படி எடுத்ததில் 2-ம் பாகத்துக்கான சுமார் 40 சதவிகித காட்சிகளை முதல் பாகத்தின் படப்பிடிப்பிலே படமாக்கிவிட்டோம். 2-ம் பாகத்துக்கான படப்பிடிப்பில் முக்கியமான போர்க்களக் காட்சிகள், பாடல் காட்சிகள், துணை நடிகர்களுக்கான காட்சிகளை மட்டுமே காட்சிப்படுத்தினோம்.” என்றார்.

இதை ஒரு உதவி இயக்குனர் மூலம் அறிந்த கமல்ஹாசன், ராஜமவுலியின் செல்பேசிக்கு அழைத்து, பாகுபலியில் வெட்டிப்போட்ட போர்க்காட்சிகள் மற்றும் அரண்மனைக் காட்சிகளை தனக்கு கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கப்சா செய்தியாளர் தெரிவித்தார். இதன் மூலம் கடந்த இருபது ஆண்டுகளாக தன் வீட்டு பிரிட்ஜில் வைத்து பாதுகாத்து வரும் ‘மருதநாயகத்தை’ சமைத்து ரசிகர்களுக்கு பறிமாற கமல் திட்டமிட்டுள்ளார். 18ஆம் நூற்றாண்டு கொள்ளைக்காரன் முகமது யூசுப் கானின் வரலாறு தான் மருதநாயகம். 1997ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த படம் பட்ஜெட் மற்றும் பல காரணங்களால் டிரைலருடன் கை கழுவப்பட்டது.. கடந்த ஜனவரி 16 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஐங்கரன் இண்டர்னேஷனல் பட நிருவனத்துடன் இணைந்து மருதநாயகம் மீண்டும் துவங்கப்படும் என்று கமல்ஹாசன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. மருதநாயகம் படப்பிடிப்பு துவங்கிய போது இங்கிலாந்து மகாராணி கலந்து கொண்டு சிறப்பித்ததும் அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர் போர்க்காட்சிகளுக்கு உடை வாங்கவும், கத்தி கபடா செய்யவும் பணம் இல்லாததாலும் யானையை கட்டி போரடிக்க திராணி இல்லாததாலும் படமெடுக்க வந்த ஆங்கிலேய தயாரிப்பாளர் பின்னங்கால் பிடறியில் அடித்துக் கொண்டு ஊரைக் காலிபண்ணிக் கொண்டு ஓடிய நிகழ்வும் அரங்கேறியது. தற்போது பாகுபலியின் வெற்றியாலும், பிட்டுப்போட சில காட்சிகள் சன்னமான விலைக்கு ராஜமவுலியிடம் கிடைத்ததாலும் மீண்டும் மருதநாயகத்தை தூசு தட்ட உள்ளதாக தெரிகிறது. இதற்கு கமலஹாசனின் ஒத்த வயதுடைய சீனியர் சிட்டிசன்கள் கைத்தடியுடன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

பகிர்

There are no comments yet