சென்னை: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் 95 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காஷ்மீரில் இருந்து தனது முதல் பயணத்தைத் தொடங்கினார். 2019 மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து இந்தப் பயணம் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனிடையே, அமித் ஷா மே-மாதம் 10-ம் தேதி சென்னை வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து 12-ம் தேதி கோவையில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் சென்னை பயணம் திடீர் ஒத்திவைக்கப்பட்டுள்ளாதாகவும் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் பொதுத் தேர்தல் வர வாய்ப்புள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓ.பி.எஸ். தனது சுற்றுப்பயணத்தை இன்று (05.05.17) முதல் கட்டமாக காஞ்சிபுரம் ஓ.எம்.ஆர் சாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இருந்து துவங்கினார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும், ஒரு குடும்பத்தின் கையில் கட்சியும், ஆட்சியும் செல்லக்கூடாது என்று பால்வாடி ரைம்சை ஒப்பித்தார்.

எப்படியாவது ஆட்சியில் அமர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் தக்க தருணம் பார்த்துக் காத்திருகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக தான் வெற்றி பெறும் என உளவுத்துறை மூலம் தெரிந்ததால் ஏதேதோ காரணங்கள் கூறி இடைத்தேர்தலை நிறுத்திவிட்டார்கள். தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல, பொதுத்தேர்தல் தான் வரப்போகிறது. ஜூன் 3ம் தேதி நடக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவில் காங். தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார். பீகார், ஒடிசா மாநில முதலமைச்சர்களும் வைர விழாவில் பங்கேற்க உள்ளனர். என தன் பங்குக்கு ஆளில்லாத கடையில் டீ ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக கப்சா செய்தியாளர்களிடம் தமிழிசை கூறுகையில், ”தமிழகத்தில் அதிமுக பலவீனமாக உள்ளது. ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழக சட்டப்பேரவை தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆட்சி நடத்துபவர்களின் செயல்பாட்டினால்தான் எந்த அளவுக்கு நிலையாக இருக்கும் என்பதை முடிவு செய்ய முடியும். தமிழகம் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. மாற்றம் தேவை. ஆனால், அது ஆண்டுகொண்டு இருக்கும் கட்சியாகவும், ஏற்கெனவே ஆண்ட கட்சியாகவும் இருக்கக் கூடாது என்பது மக்களின் விருப்பமாக இருக்கிறது. இந்த சூழலில் தமிழக மக்கள் விரும்பும் மாற்றத்தைக் கொடுக்கும் கட்சியாக ஆண்டையர்களான பசுநேச பாஜக தான் இருக்க முடியும். தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் திட்டத்துடன் தேசிய தலைவர் அமித்ஷா வரும் 11-ம் தேதி தமிழகம் வரவிருந்தார். நானும் எச்.ராஜா, பொன்.ராதா போன்றோரும் ஆட்சிக் கவிழ்ப்பையும், பொதுத் தேர்தல் நடத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு சூடம் ஏற்றி சத்தியமும் சூளுரையும் மேற்கொண்டதால், கத்திரி வெய்யிலில் கஷடப்பட வேண்டாம் என அமித் ஷா அவர்கள் டில்லியிலேயே தங்கி விட்டார்கள்” என்று தமிழிசை கூறியுள்ளார்.

பகிர்

There are no comments yet