சென்னை: தி .நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை மறித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடிகர் சங்கம் கட்டடம் கட்டி வருவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தி. நகர் வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் உள்ளிட்டோர் தொடர்ந்துள்ள வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, அபிபுல்லா சாலையையும், பிரகாசம் சாலையையும் இணைக்கும் 33 அடி அகலம் கொண்ட பொது சாலையை நடிகர் சங்கத்தினர் மறித்துள்ளனர். இதன் காரணமாக, பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் குடியிருப்பவர்கள், பிரகாசம் சாலைக்கு வருவதற்கு வேறு பாதைகளை பயன்படுத்தி சுற்றி வரவேண்டியதுள்ளது. விதிமுறைகளை மீறி, சாலைகளை மறித்து கட்டிடம் கட்டப்படுவதால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அந்த 33 அடி சாலையை அதிகாரிகள் சட்ட விரோதமாக நடிகர் சங்கத்தினருக்கு பட்டாப் போட்டு கொடுத்துள்ளனர். முறைகேடாக 33 அடி சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் ஏற்று விளக்கம் அளிக்குமாறு கூறி நடிகர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இது குறித்து சினிமாத்துறை சீமான் விஷால் நமது கப்சா நிருபரிடம் கூறியதாவது. சினிமா ஷூட்டிங்கின்போது சாலையை மறித்து சண்டைக்காட்சிகள் சேசிங் காட்சிகள், டூயட்டுகள் எடுத்து மக்களுக்கு இடையூறு கொடுத்து எங்களுக்கு ஏற்கனவே அனுபவம் உள்ளது. இரவு வேளைகளில் சாலைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து மழைக்காட்சிகள் எடுக்கும் போது வாகன ஓட்டிகள் வழுக்கி விழுவதை நாங்கள் கண்டுகொள்வதில்லை. மேலும் மக்கள் எங்களை செல்லமாக “கூத்தாடிகள்” என்று கூப்பிடுவது மிகவும் பிடிக்கும். சினிமாவின் ஆரம்பகட்டமான கழைக்கூத்து, தெருக்கூத்து போன்றவற்றை மனதில் கொண்டு பாரம்பரியத்தை காப்பற்றவும், பொது சொத்தை ஆட்டையை போடவும் நடுத்தெருவில் நடிகர் சங்கக் கட்டடம் கட்டுகிறோம். மக்களை குஷிப்படுத்த நடிகர் சங்கத்தில் டப்பாங் கூத்து, ரிக்கார்டு டான்ஸ் போன்றவை நடத்தி மக்களை குஷிப்படுத்த இருந்தோம் யாரோ சில விஷமிகள் எங்கள் கட்டுமானத்தை எதிர்த்து வழக்கு போட்டுவிட்டனர்”. மேலும் கேப்டன் விஜயகாந்த் பொது இடத்தில கல்யாண மண்டபம் கட்டி அரசியலுக்கு வந்து பிரபலமானார், அது போல் நான் ரோட்டை மறித்து நடிகர் சங்கம் கட்டக்கூடாதா,. இல்லை அரசியலுக்குதான் வரக்கூடாதா என்று ஆவேசமாக சொன்னார்.

பகிர்

There are no comments yet