சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடிகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டாக பிரிந்தது. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, ஒரு பேரவை துவங்கி தனி வழியில் சென்றார். தீபா கணவன் தனிக்கட்சி துவங்கப்போவதாக அறிவித்தார். தீபாவின் சகோதரர் தீபக் சசிகலா அணிக்குதான் ஆதரவு தெரிவித்து வந்தார். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, தீபக், தினகரனுக்கு எதிராக குரல் கொடுத்தார். பின், பன்னீர்செல்வம், சசிகலா அணியில் இணைய வேண்டும் என்று ‘கருத்து’ தெரிவித்தார். இந்நிலையில் தீபக்கின் புதிய கருத்து ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபக் கூறுகையில், “என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என் வசம் உள்ளது. அந்த உயிலில், அனைத்து சொத்துக்களும் என் பெயரிலும், என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை, செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள ஜெயலலிதா வீடு, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துக்கள் எனக்குச் சொந்தம்” என்று கூறியுள்ளார்.

Image Credit: TNM

நீலகிரி மாவட்டத்தில், 900 ஏக்கரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில், மிகப் பிரமாண்ட அளவில் கொடநாடு பங்களா அமைந்துள்ளது. இந்த பங்களா, ஜெயலலிதா அவ்வப்போது ஓய்வெடுக்கும் இடமாக இருந்துவந்தது. ‘ஜெயலலிதா இறந்த பிறகு, இந்த பங்களா இனி யாருக்குச் சேரப்போகிறது’ என்று மக்களின் அங்கலாய்ப்பாக இருந்துவந்த நிலையில், தீபக் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். திடீரென கடந்த 24-ம் தேதி கொடநாடு பங்களாவில் பணிபுரிந்துகொண்டிருந்த காவலாளி ஓம்பகதூர், மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார். மர்ம நபர்கள், தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். பிறகு, இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கொலை வழக்கில் முக்கிய நபராக, தனிப்படை போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டவர், கனகராஜ். இவர், போயஸ்கார்டன் முன்னாள் கார் டிரைவர். கடந்த வாரம் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இனோவா கார் மோதி உயிரிழந்தார். இது உண்மையை மறைக்க, காவல் துறையின் புதுவிதமான ‘தன்கவுண்டர்’ என சந்தேகிக்கப் பட்டது. இது ஒரு புறமிருக்க, அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியம் மர்ம நபர்களால் ‘தற்கொலை’ செய்யப்பட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் விநியோகம் செய்து தேர்தல் ஜனநாயகத்துக்கே அவமானத்தைத் தேடித் தந்தவர் அதிமுக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர். அந்தப் பண விநியோக விவகாரத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளைச் செய்யும் அமைச்சரின் நெருங்கிய நண்பரான காண்டிராக்டர் சுப்பிரமணியத்தின் பங்கு பெருமளவில் இருக்கிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். காண்டிராக்டர் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் சில முக்கிய ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளார்கள்.

அமைச்சருக்கு எதிராக கிடைத்த ஆதாரங்களுக்கு முக்கிய சாட்சியாக இருந்த காண்டிராக்டர் சுப்பிரமணியத்தின் தற்கொலை ஒட்டுமொத்த விசாரணையையும் திசைதிருப்பும் விதத்தில் அமைந்திருக்கிறது. அடுத்தடுத்து காவலாளிகள், டிரைவர்கள், உதவியாளர்கள் இறக்கின்றனர். வருமான வரித்துறையின் வழக்கிற்கு ஆதாரமான முக்கிய சாட்சிகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. விஜயபாஸ்கர் மீதான வருமான வரித்துறை ரெய்டு விவகாரமாக இருந்தாலும் சரி, இப்படி திடீர் திடீரென “விபத்து” என்றும் “தற்கொலை” என்றும் நிகழும் மரணங்கள் அதிர்ச்சியளிப்பதாக மட்டுமல்ல- மர்மம் நிறைந்தவைகளாக இருக்கின்றன. “காண்டிராக்டர் சுப்பிரமணியன் மரணம்” வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ள ஆதாரங்களுக்கு வலுசேர்க்கும் முக்கிய சாட்சிகளை அழிக்கும் முயற்சியா, “கனகராஜின் மரணம்” கொடநாடு மர்மத்தை காப்பாற்றும் “விபத்தா” என்ற மிக முக்கியமான கேள்வி எழுகிறது.

இவர்கள் தற்கொலை செய்யப்பட்டார்களா? அல்லது கொலை செய்து கொண்டார்களா என ‘துப்பு’ துலக்க காவல்துறை தன் கடமையை செய்து கொண்டுள்ளது. இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் அண்னன் மகன் தீபக் கப்சா நிருபரிடம் பேட்டி அளித்துள்ளார்: “கொடநாடு காவலாளி ஓம்பகதூர், பாகுபலி படத்தில் வரும் ‘கட்டப்பா’ போல் என் அத்தைக்கு நாயாக உழைத்தார். மர்ம நபர்களால் அவர் கொலை செய்யப்பட்டாலும் அவரது ஆவி கொடநாட்டிலேயே வாசம் கொண்டுள்ளது. கொள்ளை சம்பவத்தின்போது ஜெயலலிதாவின் காவல் துறை சொன்னபடி 5 கைக்கடிகாரங்கள் மட்டுமே திருடப்பட்டன, அவற்றையும் கொள்ளையர்கள் ஆற்றில் வீசிவிட்டனர். நேற்று என் வீட்டிற்கு வந்த ஓம்பகதூரின் ஆவி சில ஜெராக்ஸ் பேப்பர்களை கொடுத்துவிட்டு சென்றது. அதைப்பார்த்த நான் அந்த பேப்பர்களுக்குள் சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை, செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள ஜெயலலிதா வீடு, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துக்கள் என் பெயரில் எழுதப்பட்டுள்ளது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். ரத்த உறவுக்கு சொத்துகள் போய் சேர்வதில் தவறில்லை… போயஸ் வீடு தவிர மற்ற அனைத்தும் மக்களை சுரண்டி, வஞ்சித்து, பொய் சொல்லி, மிரட்டி, ஆணவத்தினால் ஒரு ரூபாய் சம்பளத்தில்.! பெறப்பட்ட சொத்துக்களாகும் ஆகவே அது எனக்கும் ஜெயலலிதா போல் உள்ள உருவ ஒற்றுமையை வைத்துக் கொண்டு மக்களை முட்டாளாக்க நினைக்கும் தீபாவிற்கும் சேரவேண்டும், அது தான் தர்மம்” என்றார்.

பகிர்

There are no comments yet