சென்னை:மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘சென்னை திருமங்கலம்-நேரு பூங்கா இடையிலான சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை (மே-14) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் பாலங்கள் அமைக்கும் பணி ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. அதேபோல் பூமிக்கடியில் சுரங்கபாதை அமைத்து மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் சென்னை அண்ணாசாலையில் பாதைகள் மாற்றப்பட்டு சில அடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை பல நூறு மீட்டர்கள் கடந்து கடக்கும் நிலை உருவானது.

அண்ணாசாலையில் சுரங்க ரயில்பாதை அமைக்கும் பணி நடந்த போது, சில சமயங்களில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு மக்கள் சிக்கலுக்குள்ளாகினர். இந்நிலையில் சுரங்கப்பாதை ரயில் பாதைகள் அமைக்கும் பணி முடிவடைந்து நாளை முதல் திருமங்கலம்- நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இதில் குளுகுளு ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை, பூமிக்கு கீழே 125 ஆடி ஆழத்தில் போடப்பட்டுள்ளது. இந்த பாதையின் நீளம் 7.65 கிலோ மீட்டர். இந்த ரயில் சேவையால் சாலைப்போக்குவரத்து நெரிசல்குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெட்ரோ சேவை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சென்னைக்கும் இந்தப் போக்குவரத்து பயனுள்ளதாக இருக்கும். கடந்த 2015-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சேவை இரு ஆண்டுகள் தாமதமாகத் தொடங்கப்படுகிறது. ஸ்மார்ட் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் தான் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் அட்டையின் குறைந்தபட்ச விலை ரூ.100 என்றும், தேவைக்கேற்ப ஸ்மார்ட் அட்டையில் பணத்தை நிரப்பி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரூ.10 கட்டணத்தில் பயணிக்க வேண்டிய தொலைவுக்கு ரூ.100 செலுத்த கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? எனவே ஸ்மார்ட் அட்டைக்கான கட்டணத்தையும், பயணிகள் கட்டணத்தையும் அடித்தட்டு மக்களுக்கும் கட்டுபடியாகும் வகையில் குறைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் கப்ஸா நிருபரிடம் பேசும்போது “மரம் வெட்டுவதில் கைதேர்ந்தவர்களான பாமகவினர் இந்த கட்டண நிர்ணயத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பாக்கு மரத்திற்கு தேக்கு மர விலை சொல்வது போல் கட்டணம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டணத்தை குறைக்காவிட்டால், வடபழனி மேம்பாலத்தை நாங்களே அராஜகமாக திறந்ததுபோல, மரங்களை வெட்டி தண்டவாளத்தின் குறுக்கே போட்டு மறியல் செய்வோம். மீதமுள்ள மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் ஏற்படும் பள்ளங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக மரங்களை நட்டு மீண்டும் எதாவது சர்ச்சை ஏற்படும்போது நாங்களே வெட்டுவோம்.” என்றார்.

பகிர்

There are no comments yet