சென்னை: ஷங்கர் இயக்கும் 2.0 படத்திற்கு பிறகு ‘கபாலி’ படத்தை இயக்கிய ரஞ்சித் படத்தில் நடிக்கிறார் ரஜினி. தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. மய் 28ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. மும்பை தாதா ஹாஜிமஸ்தான் கதை என்று செய்தி வெளியாகி உள்ளது. ஏற்கனவே பாட்ஷா படத்தில் ரஜினி தாதாவாக நடித்து படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இன்றளவும் மிகப்பெரும் ‘மாஸ்’ படமாக திகழ்கிறது. சமீபத்தில் வெளியான ‘கபாலி’ படத்தில் மலேசிய தமிழர்களுக்காக போராடும் தாதாவாக நடித்து தனது குணச்சிதிர நடிப்பை வெளிப்படுத்தினார் ரஜினி. மனிரத்னத்தின் ‘தளபதி’ படத்தில் தாதாவின் அடியாளாக நடித்தும் நினைவிருக்கலாம்.

ரஜினி நடிப்பில் ஹாஜிமஸ்தான் கதை படமாவதை கேள்விப்பட்ட அவரது வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா ரஜினிக்கு ஒரு மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “எனது தந்தையின் கதையை சினிமாவாக எடுப்பதாகவும், நடிப்பதாகவும் பத்திரகை வாயிலாக தெரிந்து கொண்டேன். எனது தந்தையை நிழல் உலக தாதா என்றோ, கடத்தல்காரர் என்றோ சித்தரித்து நீங்கள் படமெடுக்கக் கூடாது. எந்த நீதிமன்றமும் அவரை குற்றவாளி என்று கூறவில்லை. என்னிடம் வாருங்கள், அவர் கதையை நான் கூறுகிறேன். அவரது வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும் ஆசை எனக்கிருக்கிறது. தவறாக சித்தரித்து படமெடுத்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன், கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.

இது குறித்து உங்கள் நியூஸ் மும்பை பிரிவு கப்சா நிருபரிடம் வளர்ப்பு மகன் சுந்தர் பேசும்போது: “ஹாஜிமஸ்தான் யார் என்று ரஜினி நடிக்கும் வரை யாருக்கும் தெரியாது. வேற ஆள் நடிச்சா அது ஒரு நியூஸ் கிடையாது. ரஜினி நடிப்பதால் பணம் கறக்கலாம் என மிரட்டல் விடுத்துள்ளேன். ரஜினி அப்படின்ன உடனே எல்லாரும் என் தந்தையின் வரலாறை கிளர ஆரம்பித்து விடுவார்கள், என் கட்டப்பஞ்சாயத்து பிழைப்பில் மண் விழுந்துவிடும். போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் என்று அலைச்சல் ஆகிவிடும். நிஜ கொலைகள் செய்து மாவீரனாக மடிந்த என் தந்தை கதையில் தாத்தா வயதில் இளம் ஹீரோயினுடன் டூயட் பாடி ரஜினி நடிக்க கூடாது. அது மட்டுமல்லாமல் கபாலி போல் டம்மி தாதாவாக நடித்து ரஜினி கேவலப்படுத்துவது எனக்கு பிடிக்கவில்லை. ரஜினியின் பெயரை வைத்து சர்ச்சையை கிளப்பி விளம்பரம் தேடுவதால் ஏதாவது மும்பை புரடியூசர் என்னை அணுகினால், கதை சொல்லி இயக்குனர் ஆகலாம் என்று இருக்கிறேன்.” என்றார்.

இது குறித்து கப்சா நிருபரிடம் வருத்தம் தெரிவித்த காவாலி ரஞ்சித், “உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் கொடுக்காததால் யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள். ஷான் ரொல்டனை இசை அமைப்பாளராக போடுமாறு தனுஷ் பிரச்சனையை கிளப்பினார்.. படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கவும் ஆசைப்பட்டார். ‘தனுஷ் தலையீடு பற்றி நான் பேசியதை யாரோ ஒருவர் அவரிடம் கூறிவிட்டார்.. அதனால் நானும் தனுஷும் எதிரும் புதிருமாக இருக்கிறோம். இப்ப இந்த பிரச்சினை வேறு.. எல்லா மட்டத்திலும் ஆண்டைகள் தொல்லை இருக்கிறது, ஸ்லீப்பர் செல்கள் போல எங்கிருந்து தான் வருகிறார்களோ இவர்கள்..” என்று வருத்தப்பட்டார்.

பகிர்

There are no comments yet