சென்னை: டிகர் ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சென்னையில் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். மே 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கு அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ‘க்யூஆர்’ கோடுடன் கூடிய விஷேச அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே ரஜினியோடு புகைப்படம் எடுக்க மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட்டார்கள். ரசிகர்களுடான சந்திப்பு நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனோடு ரஜினி கலந்து கொண்டார்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசியதற்கு பின்பு ரஜினி பேசியதாவது: ரசிகர்களை சந்தித்து 15 வருடங்களாகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு படம் வெற்றியடைந்தால் வெற்றிவிழா கொண்டாடுவார்கள். அங்கு சந்திப்போம். இப்போது 12 வருடங்களாக அந்த மாதிரியான விழாக்கள் நடக்கவில்லை. ‘எந்திரன்’ நல்ல வெற்றியடைந்தது. ஆனால் வெற்றி விழா சில காரணங்களால் அவர்கள் செய்யவில்லை. அதற்குப் பிறகு ‘கோச்சடையான்’, ‘குசேலன்’ படங்கள் எல்லாம் சரியாகப் போகவில்லை. ‘கபாலி’ நல்ல வெற்றி தான். சில காரணங்கள், சில நிகழ்வுகளால் விழாவாக கொண்டாட முடியவில்லை. அந்த நேரத்தில் விழா கொண்டாடினால் மட்டுமே சரியாக இருக்க முடியும். இப்போது தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை போவதாக இருந்தது. அதுவும் சில காரணத்தால் போக முடியாமல் ரத்து செய்யப்பட்டது. உடனே, ஊடக நண்பர்கள் ரஜினி எதிலுமே திடமாக நிற்க மாட்டார். அனைத்தையும் ரத்து செய்துக் கொண்டே இருப்பார். முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பார். தயங்குகிறார், பயப்படுகிறார் என்றெல்லாம் எழுதினார்கள்.

நான் ஒரு விஷயம் முடிவு எடுத்தால், ரொம்ப யோசிப்பேன். சில முடிவுகள் எடுத்தவுடன் தான் பிரச்சினைகள் இருக்கிறது என்பது தெரியும். நாம் கொஞ்சம் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். தண்ணீருக்குள் காலை வைக்கிறோம். காலை வைத்தவுடன் தான் தெரிகிறது உள்ளே நிறைய முதலைகள் எல்லாம் இருக்கிறது என்று. காலை பின்னால் எடுக்கவில்லை என்றால் பிரச்சினையாகி விடும். முரட்டு தைரியம் எல்லாம் இருக்கக் கூடாது. பேசுகிறவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். ரஜினி ஒரு படம் வெளியாகும் போது மட்டும், ஏதாவது ஸ்டண்ட் பண்ணுவார், ஏதாவது சொல்லுவார், படம் ஓடுவதற்கு ஏதாவது யுக்திகள் செய்வார் என்ற ஒரு பேச்சு இருக்கிறது.

உங்களுடைய ஆசீர்வாதத்தாலும், அன்பாலும் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் என்னுடைய ரசிகர்கள், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். என்னவோ தெரியவில்லை ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். அதை இப்போது நான் சொல்லவிரும்பவில்லை. அரிசி வெந்தால் மட்டுமே சோறாகும். இன்னொரு விஷயம் முக்கியமாக பேசுகிறார்கள். அரசியல் சம்பந்தமாக ரஜினி எதையும் சொல்ல மாட்டார். கருத்து சொல்ல மாட்டார். ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு காரணமே அரசியல் மாயைக் காட்டத் தான் என்கிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது ஓர் அரசியல் விபத்து என்று சொல்லலாம். அந்த சமயத்தில் சில சூழ்நிலைகள் காரணமாக நான் ஒரு அரசியல் கூட்டணிக்கு என்னுடைய அதரவை தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்கள், நான் ஆதரித்த கூட்டணிக்கு வாக்குகள் அளித்து ஜெயிக்க வைத்தார்கள். அப்போதிலிருந்து எனது பெயர் அரசியலில் அடிபட ஆரம்பித்தது. அப்போது என்னுடைய ரசிகர்களில் சில பேர் அரசியலில் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டு விட்டார்கள். பல ரசிகர்கள் எனக்கு நிறைய கடிதங்கள் எல்லாம் எழுதியுள்ளார்கள். நாமும் படம் பார்த்துக் கொண்டு இப்படியே இருந்தால் எப்படி?, நாம் எப்போது முன்னேறுவது, நமக்கு முன்னால் வந்தவர்கள் எல்லாம் இன்னோவா வண்டியில் போகிறார்கள், கவுன்சிலர் ஆகிறார்கள், எம்.எல்.ஏ ஆகிறார்கள், மந்திரி ஆகிறார்கள். நாம் எப்போது அப்படி ஆவது, பணம் சம்பாதிப்பது என்று சில ரசிகர்கள் கேட்கிறார்கள், பத்திரிகைகளுக்கு பேட்டியும் கொடுக்கிறார்கள். அது தப்பில்லை. கவுன்சிலர் ஆகலாம், மந்திரி ஆகலாம் என்ற ஆசையிருப்பதில் தவறில்லை. ஆனால், அதை வைத்து பணம் சம்பாதிப்பது என்று நினைப்பது தவறு. அவர்கள் சொல்வதைக் காணும் போது வருத்தப்படுவதா, கோபப்படுவதா, சிரிப்பதா என தெரியவில்லை.

நான் அப்போதும் சொல்கிறேன், இப்போதும் சொல்கிறேன். ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கையுள்ளது. நீங்கள் ஒரு கெட்ட காரியம் செய்யும் போது, மனசாட்சி செய்ய வேண்டாம் என்று சொல்லும். அதை மீறி தான் நாம் செய்கிறோம். ஒரு வேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் ஆட்களை எல்லாம் கிட்டக்கூட சேர்க்க மாட்டேன். இப்போதே சொல்லிவிடுகிறேன். இன்னும் நிறைய பேச வேண்டும் என்ற ஆசையிருந்தால் கூட நேரமின்மை காரணமாக முடித்துக் கொள்கிறேன்.” என்று கூறி முடித்துக் கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா இறந்ததால் காவல் துறை கெடுபிடி இல்லாத போயஸ் கார்டனில் நமது கப்சா நிருபரிடம் அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி: “காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது. இனிமே எனக்கு எதுக்கு அரசியல் எல்லாம். 66-வயதான நான் ஆண்டவன் உத்திரவிட்டால் ஹூமா குரோஷியுடன் அடுத்த படத்தில் ரொமான்ஸ் செய்ய தயார், அரிசி வெந்தால் சாதம், நான் சொன்னால் வேதம் இதை  ரசிகனுங்க சொன்னா புரிஞ்சுக்க மாட்றானுக, இப்போ ரிலீசாகப் போகுதே 2.0 அது பாகுபலியை விட அதிக லாபம் ஈட்ட வேண்டும். அதற்குத்தான் இந்த ரசிகர் புகைப்பட தந்திர சந்திப்பு. தமிழகத்தில் ஆளத்தெரியாத அரசு நடக்கிறது, வாழத்தெரியாமல் மக்கள் திண்டாடுகிறார்கள். பாகுபலியை மறந்து ரசிகர்கள் 2.0வை ஓடவைக்கவே ஆண்டவனை துணைக்கு அழைத்து இந்த அரசியல் பிட்டைப் போட்டேன். அடுத்த படத்துக்கும் ஆண்டவன் துணைக்கு வருவார்.  முன்பு ஜெயலலிதா என் ரசிகர் மன்றத்தை ரகசிய கணக்கெடுப்பு நடத்திய போது ‘படையப்பா’ படம் எடுத்து பதிலடி கொடுத்தேன். ப.சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தி என்னை மறைமுகமாக மிரட்டுகிறார்கள். என்னை அழிக்க இன்னொருத்தன் பிறந்துதான் வரணும். சின்ன வயதிலேயே ‘மன்மதராசா’ குத்தாட்டம் மூலம் கடைக்கோடி ரசிகனையும் கவர்ந்த என் மூத்த மருமகன் தனுஷ் தான் 2030ல் தமிழக முதல்வராக வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகள் தான் இந்த ரசிகர் கணக்கெடுப்பு. கூட்டிக் கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்.” என்று “ஹ ஹ ஹ ஹா” என தனது ட்ரேடு மார்க் சிரிப்புடன் முடித்தார்.

பகிர்

There are no comments yet