சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ம் தேதி முதல் சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 19 தேதியுடன் ரசிகர்களுடனான சந்திப்பு நிறைவடைகிறது. முதல்நாள் சந்திப்பின்போது ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியிருந்தார். கடைசி நாள் பேச்சில் கூறியதாவது: “நான் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு இப்போது 67 வயசு ஆகுது. ஆனால் 23 வருடங்கள்தான் கர்நாடகாவில் இருந்தேன், 44 ஆண்டுகள் தமிழ் நாட்டில் உங்க கூடவே வளர்ந்தேன். கர்நாடகாவில் இருந்து ஒரு மராட்டியனாகவோ, கன்னடனாகவோ வந்திருந்தா கூட நீங்க என்னை ஆதரிச்சு, பெயர், புகழ், பணம் எல்லாம் அள்ளிக் கொடுத்து என்னை நீங்க தமிழானகவே ஆக்கிட்டீங்க. எனவே நான் ஒரு பச்சைத் தமிழன். என் பெற்றோர், மூதாதையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம் ஊரில் பிறந்தவங்க, அப்டீங்கறது நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். நீங்க என்னை தூக்கிப்போட்டா நான் இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர வேறு எந்த மாநிலத்துக்கும் போக மாட்டேன். தளபதி ஸ்டாலின் அவர்கள் திறைமையான நிர்வாகி, அன்புமணி ராமதாஸ் நல்ல படிச்சவர், உலகம் முழுக்க சுற்றியவர், நல்ல திட்டங்கள் வைத்துள்ளார்கள். திருமாவளவன் தலித் மக்களுக்காக உழைக்கும் அற்புத தலைவர். சீமான், போராளி. அவர் கருத்துக்களை கேட்டு பிரம்மிச்சு போயிருக்கேன்… அது போல இன்னும் இருக்காங்க சில தேசிய கட்சிகள். ஆனால் அமைப்பு கெட்டு போயிருக்கே. அரசியல் பத்தி, ஜனநாயகம் பத்தி மக்களோட கண்ணோட்டம் கெட்டு போயிருக்கே. எனவே முதலில் அமைப்பு சீர்படுத்தபட வேண்டும். ஜனங்களின் மனரீதியான சிந்தனையை மாற்ற வேண்டும், அதை எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். அப்படியென்றால் மட்டுமே நாடு நன்றாக இருக்கும்.

என்னை பற்றிய விமர்சனங்களுக்கு என் ரசிகர்கள் உணர்ச்சிவசப் பட வேண்டாம். ஏனென்றால் எதிர்ப்பு இருந்தால் தான் வளர்ச்சியடைய முடியும். நம்மை பற்றிய அவதூறுகள், திட்டுகள், நிந்தனைகள் எல்லாம் செடி வளர தேவையான உரம் மாதிரி, அவர்கள் நம் வளர்ச்சிக்கே உதவுகிறார்கள். பழைய காலத்தில ராஜாக்கள் கிட்ட சைன்ய பலம் இருக்கும். லட்சக்கணக்கில் இருக்காது, ஆயிரக் கணக்கில்தான் இருக்கும். ஆனால், போர் வரும்போது நாட்டில் இருக்கும் ஆண் பிரஜைகளும் வீரர்கள் மாதிரிதான். அதுக்காகத்தான் ஜல்லிக்கட்டு, மல்யுத்தம், கபடின்னு வீர விளையாட்டுகள் வச்சிருந்தாங்க. மக்கள் இதில் பயிற்சி பெற்று முழு வீரர்களா ஆகிடுவாங்க. போர் வரும்போது படையுடன் சேர்ந்து போரிடுவாங்க. அதுவரை அவர்கள் தன் கடைமைகளை செயவார்கள். அது போல நாம் அனைவரும் அவரவர் கடைமைகளை இப்போது ஒழுங்காக செய்வோம். நான் என் வேலைகளைப் பார்க்கிறேன்.. நீங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள். போர் வரும்போது அழைக்கிறேன். போர்க்களத்தில் இறங்குவோம்”, என்றார். ரஜினி பாராட்டியவர்களில் சீமான் மட்டுமே சினிமாத்துறையை சேர்ந்தவர்.

ரஜினி பாராட்டிற்கு சீமான் பதிலளித்து பேசியுள்ளார். “ரஜினி சொல்லும் கருத்துகளை ஏற்கிறேன். இன்று பேசும்போது, ‘நிர்வாக அமைப்பு தவறாக இருக்கிறது’ என்று பேசினார். இதை நான் நீண்டகாலமாக பேசி வருகிறேன். ‘அடிப்படை மாற்றத்தோடு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்’ என்கிறேன். ரஜினிகாந்த் என்ன செய்வாரோ, அதைவிட ஆயிரம் மடங்கு நாங்கள் செய்வோம். ‘நான் தமிழனாகவே கரைந்துவிட்டேன்’ என்கிறார். நமது மக்கள் எம்.ஜி.ஆரை மலையாளியாகப் பார்க்கவில்லை. அது நம் மக்களின் பெருந்தன்மை. ஆனால், இந்த மண்ணை என் அளவுக்கு உங்களால் நேசிக்க முடியாது. ரஜினி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நடிக்கட்டும். எவ்வளவு ஆயிரம் கோடிகளையும் சம்பாதிக்கட்டும். இப்போதும் ரஜினிகாந்தை மதிக்கிறோம். அவர் படத்தின் முதல் காட்சி பார்க்கும் ரசிகராகவும் இருப்போம். எங்களுக்கு முதல்வராக இருந்து ஆள வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. எங்கள் நாட்டை நாங்கள்தான் ஆள வேண்டும். ரஜினிகாந்தைப் பற்றி ‘மூளையில்லாத மனிதர்’ என்று முன்னாள் நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜூ சொன்னது சரிதான். ரஜினியைப் பொறுத்தவரையில், அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்த மண்ணில் அவர் கரைந்து வாழ்கின்றவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அவர் இந்த மண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை.”

இந்த எதிர்மறையான சீமானின் கருத்துக்கு ரஜினி எந்தவித கருத்தையும் கூறாதது கண்டு விசனப்பட்ட நமது கப்சா நிருபர் ஒரு உண்மையை கண்டறிந்துள்ளார். ரஜினி சீமானுக்கு ஏற்கனவே சொல்லி அனுப்பியபடி “நான் பாராட்டுறது மாதிரி பாராட்டுறேன், நீ திட்டுற மாதிரி திட்டு” என்கிற ரீதியில் சீமான் பேசியதாக தெரிகிறது. ‘நல்ல தலைவர்கள்’ என சீமான், அன்புமணி, திருமாவளவன் போன்றவர்களைப் பாராட்டியுள்ளார். ரஜினியின் இந்தப் பாராட்டை உற்றுநோக்கினால், அதற்குப் பின்னால் ஓர் அரசியல் ஒளிந்திருப்பதை அறிந்து கொள்ள முடியும். ரஜினி பாராட்டிய நால்வரில் ஸ்டாலினைத் தவிர மூவரும் தீவிரமாகத் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள். சீமானோ ஒரு படி மேலே போய் , ‘தமிழகத்தை ஒரு தமிழன்தான் ஆட்சி செய்ய வேண்டும்’ என்பவர். ஒரு வேளை, ரஜினி அரசியலுக்கு வந்தால் சீமான், ‘ரஜினி கன்னடர்’ என்கிற வாதத்தைக் கையில் எடுக்கக் கூடும். தொடக்கத்திலேயே நட்புணர்வு ஏற்படுத்துகிற வகையில், சீமானைப் பாராட்டி ‘செக் ‘ வைத்திருக்கிறார் ரஜினி என்றே கருதத் தோன்றுகிறது என கப்சா நிருபர் தெரிவித்தார். ரஜினிக்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்தாலும் , நாளைடைவில் எதிர்ப்பு வலு குறைந்து விடவும் வாய்ப்பிருக்கிறது. ரஜினிகாந்த் ‘நானும் தமிழன்தான்’ என இதற்கு முன்னர் பல முறை சொல்லியிருக்கிறார். இப்போதோ…. ‘நான் சுத்தத் தமிழனாக மாறி நிற்கிறேன் என்கிறார் சந்திரமுகி ஸ்டைலில். கப்சா நிருபரின் தீவிர விசாரணையில் ரசிகர்கள் சந்திப்புக்கு முன்னதாகவே ரஜினி சீமானை சந்தித்து, “எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் இல்லை. பாகுபலி வெற்றியை ரசிகர்கள் மறக்க வேண்டும், 2.0 நல்லா கல்லா கட்டவெண்டும், அதற்கு கொஞ்சம் அழுத்தமான ‘பிட்”டை போட வேண்டும் உனக்கு நான் போராளி சர்டிபிகேட் கொடுக்கிறேன். எனக்கு நீ ‘பச்சைத்தமிழன்’ பட்டம் கொடுத்துவிடு” என்று பெட்டி கொடுத்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்துள்ளது.

பகிர்

There are no comments yet