சென்னை: நடிகர் சங்கத்தை தொடர்ந்து தமிழ்த்திரைப்பட தயாரிப்பளர் சங்கத்தை கைப்பற்றியுள்ள விஷாலின் அலப்பரைகளும் அக்கப்போரும் அதிகரிக்கத் துவங்கி விட்டது. தமிழ்த்திரைத் துறைக்கென தனியாக ‘டிவி’ சேனலை துவக்க முடிவெடுத்துள்ளார். புதிய படங்களின் காட்சிகள், நடிகர் நடிகைகளின் பேட்டிகள், சினிமா சார்ந்த அனைத்து விஷயங்களையும் “விஷமம் தொல்லைக் காட்சி” என்ற பெயரில் சேனல் துவங்கி ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார். மேலும் படங்களின் பாடல்களை ஒளிபரப்ப தனியாக ‘தமிழ் ராக்கர்ஸ் ஒப்பாரி” மியூசிக் சேனல் ஒன்றை துவக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது. இதன்படி புதிய சினிமா பாடல்கள், காட்சிகள் போன்றவற்றை மற்ற சேனல்களுக்கு தரக்கூடது என்பதில் தயாரிப்பாளர் சங்கம் தீவிரமாக உள்ளது என்றார்.

முன்னதாக தியேட்டர் முதலாளிகள் டிக்கட் வசூல் தொகையில் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு மோய் எழுத வேண்டும் என பேட்டி கொடுத்து தியேட்டர் அதிபர்களிடம் சிக்கிக்கொண்டார். பின்னர் திநகரில் நடிகர் சங்கக் கட்டடம் கட்டுமானப் பணியின்போது ரோட்டை ஆக்கிரமித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் இணைந்து பணியாற்றுவேன் என்று வலியப் போய் ஆதரவு தெரிவிக்கிறார். முதலில் தமிழ் சினிமாவில் தனக்கு இடமிருக்கிறதா என பார்க்காமல் முதல் அமைச்சார் கணக்காக பேட்டி கொடுத்து வருவதை குறைத்துக் கொள்ளவில்லை என்று சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். திருட்டு விசிடி ஒழிப்பு, இணையத்தில் புதிய படங்கள் வெளியாவதை தடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் என்று விஷால் ஏற்கெனவே அறிவித்திருந்தார். பல சினிமா சங்கங்கள் விஷால் அறிவித்த வேலைநிறுத்தத்துக்கு மறுப்பு தெரிவித்தன.

இந்நிலையில் இன்று மே 22 சென்னையில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. கூட்டத்தில் பேசிய விஷால் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்த அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தார். மே 30-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் என்று விஷால் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் ஸ்டிரைக் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னேற்றத்திற்காக பல ஆலோசனைகளும் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் கப்சா நிருபரிடம் பேசிய விஷால் கூறியதாவது: திட்டமிட்டபடி நான் தமிழ் நாட்டின் முதலமைச்சாராகும் பணிகள் போய்க்கொண்டிருந்தன. நடுவில் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததால் எனக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. எனது அரசியல் பிரவேசத்தை பிரபலப்படுத்தவும், மக்களிடம் என் நாட்டு நலப்பணிகளை நேரிடையாக கொண்டு செல்லவும் தயாரிப்பாளர்கள் சங்கக் காசில் ‘விஷமம் தொல்லைக்காட்சி’ என்ற சேனலை துவக்கி, கேப்டன் டிவி, மக்கள் டிவி, மதிமுகம் டிவி, போல் என்னை பற்றிய செய்திகளை மட்டும் ஒளிபரப்பி மொக்கை போடுவேன். கருப்பான ரஜினியை மக்களுக்கு பிடிக்கிறது, அதே போல் கருப்பாக இருக்கும் என்னையும் தமிழக மக்கள் முதல் அமைச்சராக ஏற்றுக் கொள்வார்கள், ரஜினியின் வெறுப்பை சம்பாதித்தாலும் பரவாயில்லை நான் அவருக்கு முன்னதாக முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்பது உறுதி,” என்றார்.

பகிர்

There are no comments yet