சென்னை: தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனமான சென்னை சில்க்ஸ் கிளையில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின. அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால், இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காலையில் பிடித்த தீ தொடர்ந்து தீவிரம் அடைந்து கொண்டே சென்றதால், தெற்கு உஸ்மான் சாலையில் கடைகளை திறக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

தி.நகருக்கு இன்று யாரும் வர வேண்டாம் என்றும் காவல் துறையினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தீ பிடித்த கட்டிடத்தை பார்க்க பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் வந்தனர். இதனால் அவர்களை கலைந்துபோக செய்ய தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனத்தை வரவழைத்து, கூட்டத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்து தண்ணீரை வீணடித்தனர். தீ பிடித்த கட்டிடத்தில் இருந்து அதிக அளவில் வெளியேறிய கரும்புகை, அந்த பகுதி முழுவதும் சூழ்ந்தது. இதனால் பலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கு உஸ்மான் சாலைக்கு செல்லும் வழியிலும், வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தெற்கு உஸ்மான் சாலைக்கு செல்லும் வழியிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. 17 மணி நேரம் கடந்தும் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர்.

இதற்கு என்ன காரணம் என்று தீயணைப்பு வீரர்களே பதில் அளித்தனர். ”கட்டிடத்தின் கீழ் தளத்தில் ஜெனரேட்டர்கள் உள்ளன. ஜெனரேட்டர்களை இயக்குவதற்காக பெரிய பேரல்களில் டீசல் வைத்துள்ளனர். இதேப்போல 7-வது தளத்தில் உள்ள சமையல் அறையில் காஸ் சிலிண்டர்களும் இருந்துள்ளன. தீயில் டீசல் பேரல்களும், சிலிண்டர்களும் சேர்ந்து எரிந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், கடை முழுவதும் ஆடைகள் இருந்ததால் அவை எளிதில் தீ பிடித்து எரிகின்றன” என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு விரைந்து வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ தான் கொண்டுவந்த வாட்டர் பாக்கெட்டுகளை பீய்ச்சி அடித்தும், அமைச்சர் டி. ஜெயக்குமாருடன் இணைந்து முன்பு கடலில் எண்ணெய்க்கசிவை அள்ள பயன்படுத்திய வாளிகளை கொண்டு தண்ணீரை ஊற்றியும் தீயை அணைத்தனர். (அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை நீர் ஆவியாகாமல் தெர்மாகோல் கொண்டு மூடியவர் என்பதும், அண்ணா சாலையில் ஏற்பட்ட மெட்ரோ பள்ளத்தின் காரணத்தை விஞ்ஞான முறையில் கண்டறிந்தவர் டி ஜெயக்குமார் என்பதும் இங்கே குறிப்பிட அவசியமாகிறது.)

பின்னர் இருவரும் கூட்டாக கப்சா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்: “தீப்பிடித்த துணிக்கடை நிறுவனக் கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி மாமூல் வாங்கிக் கொண்டு கட்டிடத்தை மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், தெர்மாகோல் கொண்டுவந்து தீயை அணைக்க இருந்தேன், அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கவிருப்பதால், பள்ளிப் பிள்ளைகள் அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படும் என்று விட்டுவிட்டேன். சென்னையில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் நான் தான் தீயணைப்புத் துறைக்கு பெட்ரோல் பீய்ச்சி அடிக்க ஐடியா கொடுத்து 17 மணிநேரத்தில் தீயை அணைக்க உதவி செய்தேன். இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொஞ்ச நாட்களுக்கு சிகரெட் செலவு மிச்சம். அன்று கண்ணகி மதுரையை எரித்தாள், இன்று நூற்றுக் கணக்கான கணவன்மார்களின் கண்ணீர் சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையை எரித்து விட்டது. ஐய்யகோ! என்று வாயிலடித்துக் கொண்டு அழுதார்.

பகிர்

There are no comments yet