சென்னை: டிடிவி தினகரனை சந்தித்து பேசும் அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை கலைக்க அவர்கள் முயற்சி செய்வார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. டிடிவி தினகரன் அதிமுக பக்கம் தலைகாட்ட கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தடாலடி பேட்டியளித்தார். அமைச்சர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கம் சாய்ந்துள்ளதால் இந்த நிலைப்பாட்டை அவர் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், தினகரனோ பொறுத்திருந்து பாருங்கள் என எச்சரிக்கைவிடுத்தார். அவரது எச்சரிக்கை இன்று காட்சிக்கு வந்துவிட்டது. இன்று மதியம் 2 மணிவரையிலான நிலவரப்படி, டிடிவி தினகரனை 22 அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த எண்ணிக்கை கூடவும் வாய்ப்புள்ளது.

தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், ”முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மாதிரி கட்சியையும், ஆட்சியையும் கவிழ்க்கும் நோக்கத்தில் நாங்கள் செயல்பட மாட்டோம். சசிகலா பொதுச் செயலாளராகவும், தினகரன் துணை பொதுச் செயலாளராகவும் தொடர்வார்கள். எங்கள் கட்சியில் பொதுச் செயலாளரும், துணை பொதுச் செயலாளரும்தான் முடிவெடுக்க முடியும். அவர்களுக்குதான் அதிகாரம் உள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சி கட்டுப்பாட்டை மீறிப் பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான செய்தி விரைவில் வரும். கட்சியில் பிளவு எதுவும் இல்லை. தினகரன் தலைமயில் அதிமுகவில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை” என்று தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ கூறினார்.

முன்னதாக, சசிகலா, தினகரன் சார்ந்தவர்களை கட்சியில் இருந்து முழுமையாக விலக்கிவைத்து விட்டு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 17-ம் தேதி நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ” ‘கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன். ஜெய லலிதா ஆட்சியை அவர்கள் தொடர்ந்து நடத்துவதற்கு என்னால் எந்த இடையூறும் வராது’ என்று தினகரன் கூறினார். அந்த உறுதியுடன் அவர் இருக்க வேண்டும். ஏப்ரல் 17-ம் தேதி என்ன முடிவெடுத்தோமோ அதில் ஆணித்தரமாக, தெளிவாக உள் ளோம். அவர்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்களை சார்ந்தும் நாங்கள் இல்லை” என்றார்.

இந்நிலையில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டைரெடி செய்ய தினகரனுக்கு சின்னம்மா உத்திரவு கொடுத்து இருப்பதாக பெங்களூரில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

There are no comments yet