சென்னை: தமிழக அமைச்சர்கள் அனைவரின் அறைகளிலும் முதல்வர் பழனிசாமி படங்கள் வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் பழனிசாமி படமும் வைக்கப்பட்டுள்ளது, தினகரன் ஆதரவாளர்களை அதிரவைத்துள்ளது.

அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற பன்னீர்செல்வம் அணியைக் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் செயல்பட்டுவருகின்றனர். முதல் கட்டமாக, சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து தள்ளிவைப்பதாக பழனிசாமி அணி அறிவித்தது. அதை, பன்னீர்செல்வம் அணியினர் வரவேற்றாலும், கட்சியிலிருந்து இரண்டுபேரையும் நீக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இந்த நிபந்தனையால், பழனிசாமி அணியினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனிடையே, இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரனை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்து, திகார் சிறையில் அடைத்தனர். ஒரு மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது, கட்சியை விட்டு யாரும் என்னை நீக்கவில்லை. கட்சிப்பணியைத் தொடரவுள்ளேன்” என்று அதிரடியைக் கிளப்பினார் தினகரன். சென்னை வந்த அவர், பெங்களூரு சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து தள்ளிவைத்தது வைத்ததுதான். கட்சி செயல்பாட்டில் தலையிட்டால், விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டியைத் தொடர்ந்து, “இன்னும் 60 நாள்கள் காத்திருக்கும்படி சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார். இந்த நாள்களில் கட்சி எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். கட்சி சரியாகச் செயல்படவில்லையென்றால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறி அதிரடியைக் கிளப்பினார் தினகரன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமைச்சர்கள் அனைவரும் முதல்வர் பழனிசாமி தலைமையில் செயல்பட முடிவுசெய்திருப்பதாகவும் தெரிகிறது. அனைத்து அமைச்சர்களின் அறையிலும் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போதைய முதல்வர் பழனிசாமியின் படம் இல்லாமலிருந்தது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமி அரசு பதவியேற்று 100 நாள்கள் கடந்தநிலையில், அனைத்து அமைச்சர்களின் அறை மற்றும் ஆளும்கட்சி எம்எல்ஏ-க்களின் அறைகளிலும் முதல்வர் பழனிசாமியின் படம் இன்று வைக்கப்பட்டது.

இதை அடுத்து நமது கப்ஸா நிருபருக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது: தியானம் இருக்க சொல்லி என்னை செல்லகாசாக்கி விட்டார்கள், இல்லா விட்டால் சசிகலா அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்து காலத்தை ஒட்டியிருப்பேன். இப்போது நூலும் இல்லை, வானும் இல்லை என்று பாடிக்கொண்டிருக்கிறேன். மூன்று முறை முதல்வராக இருந்து என் படத்தை நான் எங்குமே வைக்க சொல்ல வில்லை, ஆனால் நேற்று வந்த எடுபிடி அவர் படங்களை எல்லா இடங்களிலும் வைக்கிறார். மூன்று முறை முன்னாள் முதல்வரான என் படத்தை குறைந்த பட்சம் ரெஸ்ட் ரூம்களில் வைத்தால் குறைந்தா போய் விடுவார்கள் என்று அங்காலாய்த்தார்.

பகிர்

There are no comments yet