சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், இதனை தவறவிட்டால் காலம் நம்மை மன்னிக்காது என்றும் ‘புதிய பார்வை’ ஆசிரியர் ம.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”1987 டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர். மரணம் அடைந்ததும் அவரால் உருவாக்கப்பட்ட அதிமுகவிலும், ஆட்சியிலும் வெற்றிடம் ஏற்பட்டது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக (ஜெயலலிதா), அதிமுக (ஜானகி) என நான்கு முனை போட்டி நிலவியது.

அந்தத் தேர்தலில் 79 லட்சம் வாக்குகள் பெற்று திமுக ஆட்சி அமைத்தது. 30 எம்.எல்.ஏ.க்களை பெற்று அதிமுக ஜெயலலிதா அணி 2-வது இடத்தையும், காங்கிரஸ் 3-வது இடத்தையும், ஒரு இடத்தில் மட்டுமே வென்ற அதிமுக ஜானகி அணி 4-வது இடத்தையும் பிடித்தது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் தோல்வி அடைந்த ஜானகி அம்மையார், அவரது அணியின் உயர்மட்டக் குழுவை கூட்டினார். எம்.பி., எம்.எல்.ஏ., வாரியத் தலைவர் என 13 ஆண்டுகள் பதவிகளில் அமர்த்தி எம்.ஜி.ஆர். அழகுபார்த்தார். ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு ஆண்டிப்பட்டி தொகுதியில் நான் வெற்றிபெற நீங்கள் எதுவும் செய்யவில்லை. எனவே, எனது தலைமையிலான அணியை கலைத்து விடுகிறேன். நீங்கள் ஜெயலலிதாவுடன் சேர்ந்து செயல்படுங்கள் கூறிவிட்டார்.

அதன்படி 1988 பிப்ரவரி முதல் வாரத்தில் தனது தலைமையிலான அணியை ஜானகி அம்மையார் கலைத்து விட்டார். அதன் தொடர்ச்சியாக இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தைகள் நடந்தன. முன்னாள் அமைச்சர்கள் மாதவன், முத்துசாமி ஆகியோர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து இணைப்பு பற்றி பேசினார்கள். ஜானகி அணியின் பொதுக்குழுவை கூட்டி ஜெயலலிதா தலைமையில் செயல்படுவதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இரட்டை இலையை மீட்க ஜானகி, ஜெயலலிதா ஆகியோரின் கையெழுத்துடன் கூடிய பிரமாணப் பத்திரம் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையை ஏற்கிறோம் என்று ஜானகி அணியின் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானமும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை அங்கீகரித்தும், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அவருக்கு அதிகாரம் வழங்கியும் 1989 பிப்ரவரி 11-ம் தேதி அன்றைய தலைமை தேர்தல் ஆணையர் பெரிசாஸ்திரி எழுத்துப்பூர்வ ஆணையை வழங்கினார்.

அன்று முதல் ஜெயலலிதா மறையும் வரை அவரே பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தார். இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி எஸ்.டி.சோமசுந்தரம், கண்ணப்பன், திருநாவுக்கரசர் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையத்தை அணுகி தோல்வியை சந்தித்தார்கள்.

இந்த வரலாறு தெரியாமல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம் என ஒரு தரப்பினரும், ஆளும் அதிமுகவும் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தது கோடிக்கணக்கான தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயலலிதாதான் எல்லாம் என ஒடுங்கியிருந்தவர்கள் அவரது மறைவுக்குப் பிறகு சீறிப்பாய்வது, ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுவது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இரண்டு அணிகளும் ஒன்று சேருங்கள் என பிரதமரே சொல்லும் அளவுக்கு அதிமுகவின் உள்கட்சி சண்டை உலகுக்கே தெரிந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என ஒரு கோடிக்கும் அதிகமான அதிமுக தொண்டர்கள் தினமும் தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்களி.

இந்தச் சூழலில் ஜெயலலிதா விட்டுச் சென்ற கட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிற பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது. இரு அணிகளாகப் பிரிந்து, சகோதரர்கள் என்பதை மறந்து கண்டனக் குரல்கள் எழுப்புவதை யாரும் விரும்பவில்லை. உங்கள் வீட்டுக்கு வந்தால் நீ என்ன தருவாய்?, எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்? என ஒருங்கிணைப்பாளர்கள் பேசுவது முரண்பாடாக உள்ளது.

எனவே, தங்களுக்குள் உள்ள மனவேறுபாட்டை, ஈகோவை மறந்து நல விரும்பிகள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் விரும்புவது போல ஒன்று சேர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மீதமுள்ள 4 ஆண்டுகளுக்கு ஆட்சி தொய்வின்றி தொடர பாடுபட வேண்டும்.

‘நாளை நமதே, ஆட்சியும் நமதே’ என்ற ஜெயலலிதாவின் வார்த்தைக்கு உயிரோட்டம் தருவது நம் அனைவரின் கடமையாகும்.

‘ஒருவர் பொறை, இருவர் நட்பு’ என்ற முதுமொழிக்கிணங்க ஒருவர் பொறுத்துக் கொள்வதன் மூலம் இருவர் நட்பு நீடிக்கும்.

நானு சசியும் பிரிந்து பல வருடங்கள் ஆகி விட்டன, எங்களால் தான் சேர முடியவில்லை, நீங்களாவது இணைந்து அதிமுக ஒன்றுபட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இதனை தவறவிட்டால் காலம் நம்மை மன்னிக்காது” என்று ம.நடராஜன் கூறியுள்ளார்.

There are no comments yet