சென்னை: சீனா, கொரியா நாடுகளில் இருந்து பிளாஸ்டிக் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பரபரப்பு ஏற்பட்டது. முதலில் வட மாநிலங்களில் விற்கப்பட்டதாகவும் அதை தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வினியோகம் நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்த அரிசியை சமைத்து சாப்பிடுபவர்களுக்கு வயிற்று கோளாறு ஏற்படுகிறது என வாட்ஸ் அப், பேஸ்புக் இணைய தளங்களில் செய்திகள் பரவின. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வதந்தி, பீதி, கிளம்பின.

2 நாட்களாக பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள். பிளாஸ்டிக் அரிசியை நேபாளம் வழியாக இந்தியாவுக்கு சீனாஅனுப்புவதாக மூத்த வழக்கறிஞர் சுக்ரீவா துபே (76) புகார் கூறியுள்ளார். இவர் பிளாஸ்டிக் அரிசி குறித்து கடந்த 2015-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தவர் ஆவார். மூத்த வழக்கறிஞரும் இடதுசாரி சிந்தனையாளருமான சுக்ரீவா துபே, இது தொடர்பாக ‘தி இந்து’விடம் கூறும்போது, “அரிசி, பருப்பு, சர்க்கரை என அனைத்து உணவுப் பொருட்களி லும் கலப்படம் அதிகமாகி விட்டது. இதன் மூலம் நமது இளைய சமுதாயத்தினர் சர்வதேச நாடுகளால் குறி வைக்கப்படு கின்றனர். இந்தியாவின்வளர்ச்சியை கண்டு அவர்கள் அஞ்சுவதே இதற்கு காரணம். இயற்கையான அரிசியில் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவது குறித்து கடந்த 2015, ஜூலையில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் மத்திய அரசும் டெல்லி அரசும் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் டெல்லி, சதர் பஜாரில் கலப்படம் செய்ய வைத்திருந்த சீனாவின் பிளாஸ்டிக் அரிசியை டெல்லி அரசு கைப்பற்றியுள்ளது. நான் தொடர்ந்த வழக்கின் அடுத்த விசாரணையில், சீனாவின் பிளாஸ்டிக் அரிசி நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வருவதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பேன். நேபாளத்தில் இருந்து சுமார் 400 இடங்களில் எல்லையை எளிதாகக் கடந்து இந்தியா வரமுடியும். இவற்றின் வழியாக தென் மாநிலங்கள் வரை பிளாஸ்டிக் அரிசி அனுப்பப்படுகிறது. இதை உண்ணச் செய்து புற்றுநோயை உருவாக்குவதே சீனாவின் நோக்கமாகும். ஏனெனில் சீனா நமக்கு புற்றுநோய் மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது” என்றார். கலப்படம் தொடர்பாக கடந்த 25 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளை துபே தொடர்ந்துள்ளார்.

“கலப்படம் செய்யப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது சிரமம். சமைத்து உண்ணும் போதும் வித்தியாசம் அறிவது கடினம். வயிற்றுக்குள் செல்லும் இந்த உணவில் இயற்கை அரிசி ஜீரணமாகி விடும். பிளாஸ்டிக் அரிசி மட்டும் உள்ளே ஒட்டிக்கொண்டு, புற்றுநோயைஉருவாக்கும்” என்கிறார் துபே. டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2015 முதல் ஒத்திவைக்கப்பட்டு வரும் பிளாஸ்டிக் அரிசி வழக்கு அடுத்த மாதம் தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே டெல்லியில் பிடிக்கப்படும் கலப்படப் பொருட்கள், உடனடியாக பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது.

இந்த அச்சத்தை போக்குவதற்காக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில் சென்னையில் 74 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான வகையில் 14 மாதிரிகள் அரிசி எடுத்து கிண்டி பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி உள்ளனர். அங்கு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வந்ததும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் பிளாஸ்டிக் அரிசி யாரும் விற்பனை செய்யக்கூடாது அப்படி மீறி விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரிசி கடைக்காரர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். சென்னையில் பிளாஸ்டிக் அரிசி குறித்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பொதுமக்கள், வியாபாரிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி லட்சுமிநாராயணன் தலைமையில் 4 குழுவினர் காமராஜர் சாலை, முனிச்சாலை, கீழமாசிவீதி உள்பட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பிளாஸ்டிக் அரிசி எதுவும் சிக்கவில்லை. அங்கு பிளாஸ்டிக் அரிசி சிக்காததால் ஏமாற்றம் அடைந்த கப்சா உணவுத்துறை அதிகாரி ஒருவர் கவலைதோய்ந்த முகத்துடன் பேசினார்: “சோதனையில் பிடிபடும் பிளாஸ்டிக் அரிசியை வீணாக்காமல் தமிழகம் முழுவதும் உள்ள ‘அம்மா’ உணவகங்களில் கோயம்பேடு வணிகவளாகத்தில் கீழே கிடந்து பொறுக்கி எடுத்த காய்கறிகளுடன் சேர்த்து, சாம்பார் சாதம் எனப்படும் ‘பிளாஸ்டிபிசிபேலாபாத்’ பு(ர)ளிசாதம், பிளாஸ்டிக்பக்கெட்-பிரியாணி, போன்ற வெரைட்டி ரைஸ் தயாரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளும் அதிமுக அரசு செயலற்று கிடக்கிறது. சென்ற டிசம்பர் முதலே ரேசன் கடைகளில் பருப்பு முதலான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படவில்ல என்ற குற்றச்சாட்டு உள்ளது. இப்போது இது வேறு. ஒரு கிலோ அரிசியை விட ஒரு கிலோ பிளாஸ்டிக் விலை அதிகம். இது எப்படி சாத்தியமாகும் என்று தெரியாமல் தான் சோதனை செய்ய வந்தோம். எது எப்படியோ, அம்மா உணவகங்களுக்கு சப்ளை செய்தது போக மீதியை எடைக்கு போட்டு பக்கெட் குவளை வாங்கலாம் என்று இருந்தேன். சோதனையில் அரிசி எதுவும் சிக்காததால் என் மேலதிகாரிகளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.” என்றார்.

பகிர்

There are no comments yet